முன்னணி நீர் முகாமைத்துவ தீர்வுகள் வழங்குநரும், தேர்மோபிளாஸ்டிக் குழாய்கள் விநியோகத்தில் இலங்கையின் சந்தை முன்னோடியாக திகழும் வரையறுக்கப்பட்ட S-lon லங்கா தனியார் நிறுவனம், வருடாந்தம் முன்னெடுக்கப்படும் JASTECA விருதுகள் வழங்கும் நிகழ்வில் மெரிட் விருதை தனதாக்கியிருந்தது.

கொழும்பு கலதாரி ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற இந்நிகழ்வை ஜப்பான், இலங்கை தொழில்நுட்ப மற்றும் கலாசார சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது. 

இயன் டயஸ் அபேசிங்க ஞாபகார்த்த மெரிட் விருது S-lon லங்கா நிறுவனத்துக்கு முதல் தடவையாக வழங்கப்பட்டிருந்தது. 

நிறுவனத்தினால் “சூழல் மற்றும் சமூகத்தை பாதுகாப்பது மற்றும் பேணுவதற்கான அர்ப்பணிப்பு” எனும் தொனிப்பொருளுக்கமைய முன்னெடுக்கப்படும் சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டிருந்தது. 

JASTECA இன் ஸ்தாபகத் தலைவர் மறைந்த இயன் டயஸ் அபேசிங்கவின் நினைவாக JASTECA விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது. 

இந்நிகழ்வின் நோக்கமானது, நிறுவனங்கள் தமது சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஊக்குவிப்பை வழங்குவதன் ஊடாக, சமூகம், பொருளாதாரம் மற்றும் எமது இயற்கைச் சூழல் ஆகியவற்றுக்கு பெருமளவிலான பங்களிப்பை வழங்குவதாகும். இந்த போட்டியானது நிறுவனங்கள் தமது சட்டரீதியான மற்றும் பங்குதாரர்களை நோக்காகக் கொண்ட பொறுப்புகளுக்கு அப்பால் சென்று, சமூகத்தையும் வியாபார இலக்குகளையும் ஒன்றிணைக்கும் வகையிலமைந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தூண்டியுள்ளது.

கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் திரு. எஸ்.சி.வீரசேகர கருத்துத் தெரிவிக்கையில், 

“மெரிட் விருதின் மூலமாக எமது சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகள் கௌரவிக்கப்பட்டுள்ளமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பொறுப்பு வாய்ந்த வகையிலும், நிலைபேறான வகையிலும் செயற்படுவது என்பது S-lon ஐப் பொறுத்தமட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. 

பரந்த பங்காளர்களின் எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு நாம் எமது வியாபாரத்தை முன்னெடுத்து வரும் நிலையில், கூட்டாண்மை பொறுப்புணர்வு செயற்பாடு என்பது மாறும் உலகத்தில் இடர்களை சமாளிப்பதற்கும் வாய்ப்புகளை அதிகளவில் பயன்படுத்துவதற்கும் உதவுகின்றது.” என்றார்.

S-lon லங்காவின் பன்முகப்படுத்தப்பட்ட சமூக செயற்பாடுகளில், கல்வி, பயிற்சி மற்றும் சூழல் நிலைபேறான செயற்பாடுகள் போன்றன அடங்கியுள்ளன. இவற்றில் குழாய் வேலை செய்வோருக்கான நிகழ்ச்சிகள், தெனமுது சயனய, தியசர மாணவர் வட்டம், நெனசவிய கல்விசார் நிகழ்ச்சி மற்றும் சூழலுக்கு நட்புறவான செயற்பாடுகள் போன்றன அடங்கியுள்ளன.

இன்றைய காலகட்டத்தில் சந்தை முன்னோடி என்ற வகையில் பல்வேறு வர்த்தக நாமத்தெரிவுகளை உற்பத்தி செய்து விநியோகிக்கும் நடவடிக்கைகளை S-lon முன்னெடுக்கிறது. இதில் நீர் குழாய்கள் மற்றும் பொருத்திகள், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள், கழிவுநீர் வெளியேறும் குழாய்கள் மற்றும் பொருத்திகள், கொதிநீர் குழாய் கட்டமைப்பு, குரோம் பூசப்பட்ட ஃபோசட்கள் மற்றும் உதிரிப்பாகங்கள், போல் வால்வ் தெரிவுகள், தோட்ட மெஷ் (சல்லடைக் கம்பிகள்) மற்றும் உதிரிப்பாகங்கள், சோல்வன்ட் சீமெந்து மற்றும் நீர் பம்பிகள் போன்றன உள்ளடங்கியுள்ளன.