போர்க்களத்தில் கைவிடப்படுபவர்கள்

Published By: Priyatharshan

28 Dec, 2018 | 08:45 AM
image

ஸ்ரான்லி ஜொனி

சிரியாவில் இருந்து அமெரிக்கத் துருப்புகளை விலக்கிக்கொள்வதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் எடுத்த தீர்மானம் இஸ்லாமிய அரசு ( ஐ.எஸ்.) இயக்கத்துக்கு எதிரான போரில் ஆரவாரம் இல்லாமல் பெரும்பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கின்ற சிரிய குர்திஷ்களுக்கு பாரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது. ஈராக் - சிரிய எல்லையோரம் பரந்திருக்கும் பிராந்தியங்களில்  ஐ. எஸ்.தனது ' புதிய இராச்சியத்தை ' அறிவித்த பிறகு 2014 செப்டெம்பரில் அமைரிக்கா ஐ.எஸ்.நிலைகள் மீது விமானக்குண்டு வீச்சுக்களை ஆரம்பித்தது.ஆனால்,  தரையில்  ஐ.எஸ்.நிலைகள் மீது தாக்குதலைத் தொடுப்பதற்கு ஒரு கூட்டாளியைக் கண்டுபிடிக்கும்வரை குண்டுவீச்சுக்கள் பெருமளவுக்கு பயனைத்தரவில்லை.

       

துருக்கி எல்லையில் குர்திஷ் இனத்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சிரிய நகரான கோபேனில் இருந்தே உண்மையில் ஐ.எஸ்ஸின் வீழ்ச்சி 2015 ஜனவரியில் தொடங்கியது.அந்த நேரத்தில் கிழக்கு சிரியாவில் இருந்து வடகிழக்கில் எல்லை நகரங்கள் வரை .ஐ.எஸ்.விரைவாக தனது ஆதிக்கத்தை விரிவாக்கிக்கொண்டிருந்தது. கிழக்கு சிரியாவில் றக்காவையே தங்களது இராச்சியத்தின் நடப்பின் பிரகாரமான தலைநகரை ஐ.எஸ். நிறுவியிருந்தது. துருக்கி - சிரிய எல்லை எளிதில் ஊடுருவக்கூடியதாக இருந்ததால் சிரியாவுக்குள்ளும் வெளியேயும் தீவிரவாதிகளை சுதந்திரமாக இடம்விட்டு இடம் கொண்டுசெல்ல ஐ.எஸ்ஸினால் இயலுமாக இருந்தது. அப்போது அபூபக்கர் அல் - பாக்தாதி தன்னிச்சையாகப் பிரகடனப்படுத்திய இராச்சியத்தின் இரத்தவெறியாட்டம் உச்சக்கட்டத்தில் இருந்தது. கொபேன் நகரை அவர்கள் முற்றுகைக்குள்ளாக்கியிருந்தார்கள். 6 மாத காலமாக நீடித்த சண்டைகளுக்குப் பிறகு மக்கள் பாதுகாப்பு பிரிவுகள் எனறு அழைக்கப்படுகின்ற சிரிய குர்திஷ் திரட்டல் படைகள் உருக்குலைந்துபோய்க்கிடந்த அந்த நகரைக் கைப்பற்றி ஐ.எஸ்ஸை விரட்டியடித்தன.அமெரிக்கா ஆகாயமார்க்க தாக்குதல்களை நடத்தி உதவியது.கொபேன் சண்டைக்குப் பின்னர் தான் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா குர்திஷ் கிளர்ச்சியாளர்களின் மெய்யான கேந்திர முக்கியத்துவ ஆற்றலை விளங்கிக்கொண்டார்.

        

கோபேன்அனுபவத்தைப் பின்பற்றி அருகாமையில் உள்ள நகரங்களும் ஐ.எஸ். படைகளிடம் இருந்து மீட்கப்பட்டன.மக்கள் பாதுகாப்பு பிரிவுகள் ஜூலையில் தல் அபியாத் நகரை விடுவித்த பிறகு சிரிய - துருக்கி எல்லைப் பிராந்தியதில் இருந்து  ஐ.எஸ்ஸை விரட்டுவதற்காக நகர்ந்தன. இந்த ஆரம்ப வெற்றிகளுக்குப் பிறகு  மக்கள் பாதுகாப்பு பிரிவுகளின் தலைமையின் கீழ் குர்திஷ், அரபு மற்றும் அசிரிய  திரட்டல் படைகளை உள்ளடக்கிய கூட்டணியான சிரிய ஜனநாயகப் படைகள் என்ற அமைப்பு 2015 ஆம் ஆண்டில் அமெரிக்க ஆசீர்வாதத்துடன்  உருவாக்கப்பட்டது.அது பிறகு ரோயாவா என்று பொதுவாக அறியப்பட்ட சிரிய குர்திஷ்தானின் உத்தியோகபூர்வ பாதுகாப்புப் படையாக மாறியது. பிராந்தியத்தில் அமெரிக்கா பெரியளவில் துருப்புக்களின் பிரசன்னத்தைக் கொண்டிருக்கவில்லை.2015 இல் குர்ததிஷ்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக சுமார் 50 கமாண்டோக்களை ஒபாமா அனுப்பியதையடுத்து அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கை குறைந்தபட்சம் இரண்டாயிரமாக அதிகரித்தது.ஆனால், யூபிறெரிஸ் ஆற்றுக்கு  கிழக்கே ரோயாவாவின் பகுதியாக அமைந்த பிராந்தியங்களில் அமெரிக்கா பாரிய இராணுவக் கட்டமைப்பை நிருமாணித்தது. அது  நான்கு விமான ஓடுபாதைகளை உள்ளடக்கிய   குறைந்தபட்சம் 12 இராணுவத் தளங்களைக் கொண்டதாக இருந்தது.

            வெற்றிக்கதை

அமெரிக்க- குர்திஷ் தோழமை வெற்றிகரமானதாக அமைந்தது. அமைக்கப்பட்ட மூன்று வருடங்களுக்குள் சிரிய ஜனநாயக படைகள் ஐ.எஸ். முன்னர்  கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிராந்தியங்களில் பெரும்பகுதியில் அதை தோற்கடித்தன.எல்லைப் பகுதிகளைக் ( குர்திஷ் பகுதிகள் ) கைப்பற்றிய பிறகு சிரிய ஜனநாயக படைகள் ராக்கா மற்றும் டீர் எஸ்.- ஸோர் போன்ற அரபு நகரங்களுக்கு நகர்ந்து அவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக விடுவித்தன.ஒரு கட்டத்தில் ஐக்கிய இராச்சியத்தின் பரப்பளவையொத்த பெரிய பிராந்தியங்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக உரிமைகோரிக்கொண்ட  ஐ.எஸ்.இப்போது ஈராக் - சிரிய எல்லையில் குறுகிய சில நிலப்பகுதிகளுக்குள் மாத்திரம்  கட்டுப்பட்டதாக இருக்கிறது.

      

ஆனால், குர்திஷ்களுக்கு அமெரிக்கா அளிக்கின்ற ஆதரவும் அவர்களது இராணுவ வெற்றிகளும் பிராந்தியத்தில் உள்ள இன்னொரு நாட்டை -- அதாவது வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகள் அமைப்பின் ( நேட்டோ) அங்கம் வகிக்கின்றதும் அமெரிக்காவின் நேச அணியுமான  துருக்கியை -- ஆத்திரமடையச்செய்திருக்கிறது. சிரிய ஜனநாயக படைகளின் பிரதான அங்கமாக இருக்கும் மக்கள் பாதுகாப்பு பிரிவுகள் அமைப்பு துருக்கிப் பக்கத்தில் இயங்குகின்ற குர்திஷ் தீவிரவாதக் குழுவான குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கிறது. குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியை(பி.கே.கே.) அங்காராவும் வாஷிங்டனும் பயங்கரவாத அமைப்பாகவே நோக்குகின்றன. பி.கே.கே.யின் தாபகத் தலைவர்களில் ஒருவரான அப்துல்லா ஒக்காலன் 1999 ஆண்டில் இருந்து துருக்கியில் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்.அவர் ரோயாவாவில் பெரிதும் மதிக்கப்படுகிறார்.அதனால் ரோயாவாவில் இராணுவ அணிதிரட்டல்கள் பி.கே.கே.யை  ஊக்குவிக்கும் என்று துருக்கி அஞ்சுகிறது.குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா வழங்கிவரும் ஆதரவினால் துருக்கி ஜனாதிபதி றசெப் தயிப் எர்டோகானும் குழப்பமடைந்திருக்கிறார். அவர் அந்த கிளர்ச்சியாளர்களைப் பயங்கரவாதிகள் என்றே அழைக்கிறார்.

        

சிரியப் பக்கத்தில் அதிகப்பெரும்பான்மையினராக குர்திஷ் இனத்தவர்கள் வாழும் ஒரு நகரான அவ்ரின் மீது  இவ்வருடம் ஜனவரியில் துருக்கி மேற்கொண்ட தாக்குதல் இந்த பாதுகாப்பு தொடர்பான கவலையின் விளைவானதே.துருக்கி எல்லைக்கும் ரோயாவாவுக்கும் இடையில் பாதுகாப்பு கொத்தளம் ஒன்றை உருவாக்க எர்டோகான் விரும்புகிறார்.குர்திஷ் தீவிரவாதிகளிடமிருந்து எல்லைப்பிராந்தியத்தைக் கைப்பற்றி அதை துருக்கி ஆதரவு கிளர்ச்சிக் குழுக்களிடம் கையளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த துருக்கி ஆதரவு குழுக்கள் சிரியாவில் உள்ள துருக்கி, அராபிய கிளர்ச்சியாளர்களைக் கொண்டவையாகும்.இவர்கள் துருக்கி அரசாங்கத்திடமிருந்து உதவிகளைப் பெறுகிறார்கள். எல்லையோரம் சிரியாவின் பகுதிகளை துருக்கி கைப்பற்றிவைத்திருந்தால்  சிரிய நெருக்கடிக்கு தீர்வொன்றைக்காண்பதற்கான முயற்சிகளின்போது உயர்மட்டப் பேச்சுவார்தையில் துருக்கிக்கும் இடம் கிடைக்க அது உதவும்.ஆனால் இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு பெரிய தடையாக ரோயாவாவில் தொடருகின்ற அமெரிக்கப் பிரசன்னம் இருந்துவருகிறது.அவ்ரின் நகர தாக்குதல் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலானதாகவே இருந்தது.அதற்குப் பிறகு அமெரிக்கத் துருப்புகள் நிலைகொண்டிருக்கின்ற மன்பிஜ் உட்பட எனைய பகுதிகளுக்கு படைகளை அனுப்பப்போவதாக எர்டோகான் பல தடவைகள்  வெற்று அச்சுறுத்தல்களை விடுத்தார்.சிரியாவில் இருந்து துருப்புக்களை விலக்கிக்கொள்ளப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் விடுத்திருக்கும் அறிவிப்பு எர்டோகான் அவரது திட்டத்தை எந்தவிதமான தடையும் இல்லாமல்  முன்னெடுப்பதற்கு வாய்ப்பாக காண்பிக்கப்பட்ட பச்சை விளக்காகும்.அவரது பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகார் குர்திஷ் தீவிரவாதிகளை குழிகளில் புதைக்கப்போவதாக ஏற்கெனவே அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

ஆதரவும் துரோகமும்

        

குர்திஷ் இனத்தவர்களை ஆதரிப்பதும் பிறகு அவர்களுக்குத் துரோகம் செய்வதுமான ஒரு வரலாற்றை அமெரிக்கா கொண்டுள்ளது.முதலாவது உலக மகாயுத்தத்துக்குப் பிறகு அமெரிக்க ஜனாதிிபதி வூட்ரோ வில்சன் ஒட்டோமன் சாம்ராச்சியத்தில் வாழ்ந்த துருக்கியர் அல்லாத சிறுபான்மையினங்களுக்கு சுயாட்சி வழங்கும் யோசனையை ஆதரித்தார்.ஆனால் நேசநாடுகள் ( பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி) அதை ஒருபோதும் போதுமானளவுக்கு ஆதரிக்கவில்லை.ஒட்டோமன் சாம்ராச்சியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு நாடுகளின் எல்லைகள் மீளவரையப்பட்டபோது குர்திஷ் இனத்தவர்கள் துருக்கி, சிரியா, ஈராக் மற்றும் ஈரான் இகிய நான்கு நாடுகளிடையே பிரிக்கப்பட்டார்கள்.இந்த நாடுகளில் கொடுமைக்கு ஆளாகும் சிறுபான்மையினத்தவர்களாகவே அவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். 1970 களில் சோவியத் சார்பு பாதிஸ்டுகளுக்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கிய ஈராக்கிய குர்திஷ்களை அமெரிக்கா ஆதரித்தது.ஆனால், 1975 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஒரு நேசநாடான ஈரான் எல்லைத் தகராறைத் தீர்த்துக்கொள்ள ஈராக்குடன் அல்ஜியர்ஸ் உடன்படிக்கையில்  கைச்சாத்திட்டதையடுத்து வாஷிங்டன் குர்திஷ்களைக் கைவிட்டது.அடுத்த 15 வருடங்களில் வட ஈராக்கில் குர்திஷ் மக்கள் பாக்தாதின் படுமோசமான அடக்குமுறைக்குள்ளாகினர்.1988 ஆம் ஆண்டில் அவர்கள் மீது இரசாயனத் தாக்குதலும் நடத்தப்பட்டது.சதாம் ஹுசெய்னின் ஆட்சியினால் ஆயிரக்கணக்கில் குர்திஷ் மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது அமெரிக்கா கண்டுங்காணாமல் இருந்தது. முதலாவது வளைகுடா போரின்போது அவர்கள் மீண்டும் ஈராக்கிய குரதிஷ்தானுக்கு வந்தார்கள்.

        

துரதிர்ஷ்டவசமாக, அதே கதியை சிரியாவின் குர்திஷ்கள் எதிர்நோக்குகிறார்கள். சிரிய குர்திஷ்தான் ஈராக்கிய குர்திஷ்தானைப் போன்று அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு சுயாட்சிப் பிராந்தியம் அல்ல. எஞ்சியிருக்கக்கூடிய ஐ.எஸ்.படைகள், வஞ்சம் தீர்க்க கங்கணம் கட்டிநிறகும் துருக்கிய இராணுவம் மற்றும் இரத்தத்தில் தோய்ந்துபோன சிரிய ஆட்சி என்று எதிரிகளினால் சிரிய குர்திஷ்கள் சூழப்பட்டிருக்கிறார்கள். கருத்தளவில் நோக்குகையில் சட்டவிரோதமான போர் ஒன்றில் இருந்து அமெரிக்கா விலகுவது நல்லதே. அமெரிக்காவின் தலையீட்டுக்கு காங்கிரஸின் அங்கீகாரமோ அல்லது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் ஒப்புதலோ கிடைக்கவில்லை.ஆனால், நடைமுறையில், அமெரிக்க தலையீடு களத்தில் யதார்த்தநிலையை வடிவமைக்க ஆரம்பித்துவிட்ட காரணத்தால், துருப்புக்களின் விலகல் ஒரு ஒழுங்குமுறையிலானதாக இருந்திருக்கவேண்டும்.சிரிய குர்திஷ்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டிய தார்மீகக் கடப்பாடு அமெரிக்காவுக்கு இருக்கிறது.அங்காராவிடமிருந்தும் டமாஸ்கஸிடமிருந்தும் சலுகைகளைப் பெறுவதற்கான பேரம்பேசல் துருப்பாக படைவிலகலை அமெரிக்கா பயன்படுத்தியிருக்க முடியும்.பதிலாக, சிரியாவில் இருந்து வெளியேறுவதென்ற  ஜனாதிபதி ட்ரம்பின் திடீர்த் தீர்மானம்  குர்திஷ் இனத்தவர்களை சுழல்காற்றில் அல்லற்பட விடுவதாக அமைகிறது.

( இந்து )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22