இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் பிரேரணையை முன்வைத்த அமெரிக்கா இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக நடைமுறைகளைப் பார்த்து பாராட்டும் நிலைமைக்கு மாற்றுமடைந்துள்ளது எனத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, உலகமே இலக்ரோனிக் வாகன விலைகளை குறைக்கும் போது அவ் வாகனங்களுக்கான வரி இங்கு அதிகரிக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நிதியமைச்சர் இதனை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனைத் தெரிவித்தார்.

சபையில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், 
எமது நாட்டுக்கு எதிராக ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் முதலாவதாக பிரேரணையை அமெரிக்காவே முன்வைத்தது.

2012ஆம்ஆண்டு தொடக்கம் சமந்தா பவரை எனக்குத் தெரியும். அன்று அவர் எமக்கெதிரான நிலைப்பாட்டிலேயே இருந்தார்.

ஆனால் இன்று சமந்தா பவர் இலங்கைக்கு வந்து நிறைவேற்று அதிகாரத்தினை  இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கும் முயற்சிகளை பாராட்டியுள்ளார்.

இவ்வாறான நிலைமையை நாட்டுக்கு பெற்றுக் கொடுத்தவர் ஜனாதிபதியாவார்.

நாம் எதைச் சொன்னாலும் உலகமே அமெரிக்காவைத் தான் பலமுள்ள வல்லரசாக ஏற்றுக்கொள்கிறது. எனவே அமெரிக்கா சொல்வதையே -உலகம்  கேட்கும்

அதேபோன்று தெற்காசியாவில் இந்தியாவின் ஆலோசனைகளைப் பெற்றே அமெரிக்கா அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

எனவே அரசாங்கம் அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் நட்புறவுகளைப் பேணி வருகின்றது. அத்தோடு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெறுமனே நாட்டைப் பற்றி சிந்தித்து முதலீடுகளை மேற்கொள்ளமாட்டார்கள். 

தாம் முதலீடு செய்யும் நாட்டில் ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுகிறதா என்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இதனை உறுதி செய்துள்ளோம். எனவே தான் சமந்தா பவர் பாராட்டுகிறார். வெளிநாட்டு முதலீட்டார்கள் இலங்கை வருகின்றார்கள்.

அதுமட்டுமல்ல எம்மை விமர்சித்த நாடுகள் இன்று பாராட்ட ஆரம்பித்துள்ளன.

நிதியமைச்சர் நாட்டின் நெருக்கடிகளைத் தீர்க்கும் விதத்தில் வரவு செலவு திட்டத்தை முன்னெடுத்துள்ளமையை வரவேற்கின்றோம். ஆனால் உலகமே இன்று இலக்ரோனிக் வாகனப்பாவனையை  ஊக்குவிக்கின்றது. அதற்கான விலைகளைக் குறைத்துள்ளது. நோர்வே பெற்றோலிய வளமுள்ள நாடு ஆனால் அந்த நாட்டிலும் இவ் வாகனப் பாவனை ஊக்குவிக்கப்படுகின்றது அதற்குப் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஏனென்றால் இவ் வாகனங்களால் சூழல் மாசடைவதில்லை என்பதனாலாகும்.

ஆனால் எமது வரவு செலவுத்திட்டத்தில் இவ்வாகனங்களுக்கான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது ஆச்சரியத்தை அளிக்கின்றது. எனவே நான் நிதியமைச்சரிடம் வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றேன் இவ் வாகனங்களுக்கு அதிகரிக்கப்பட்ட வரியை மீளாய்வு செய்யுமாறும் அதேபோன்று ஊழியர் சேமலாப நிதியத்தையும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தையும் இணைப்பது தொடர்பில் பிரதமர் தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி கருத்துக்களை பெற்றுக் கொண்டது பாராட்டக்குரியதாகும்.  இவ்விடயத்தில் உழைக்கும் வர்க்கத்தினரின் சமூக பாதுகாப்பு உறுதிப்படுத்தும் விதத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட வேண்டும்.

அத்தோடு எமது இளம் சமூகத்திற்கு தொழிற்பயிற்சிகளை மட்டுமல்ல ஆங்கில மொழி பேசும் அறிவை அதிகப்படுத்தும் திட்டங்கள் கட்டாயமாக முன்னெடுக்கப் படவேண்டும் என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.