உயர் பாடசாலை வளாகத்தில் பட்டப் பகலில் நிர்வாணக் கோலத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் சீனாவின் ஷாங்ஸி மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.

லிங்ஷான் நகரிலுள்ள தாய்பிங் உயர் பாடசாலையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் இன்று செய்திகளை வெளியிட்டுள்ளன.

மேற்படி ஆசிரியரின் தகாத நடவடிக்கை தொடர்பான புகைப்படங்கள் அங்கிருந்த மாணவர்களால் படமாக்கப்பட்டு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதையடுத்து, பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அத்தகைய தகாத நடவடிக்கை குறிப்பிட்ட பாடசாலையில் இடம்பெற்றுள்ளதை லிங்ஷான் நகர அரசாங்கத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

அந்தப் பாடசாலையின் ஆய்வுகூடத்தில் கடமையாற்றி வந்த ஹுகோ என்ற அந்த ஆசிரியர் மனநலம் பாதிப்புக்குள்ளாகியிருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

மேற்படி ஆசிரியரின் பாலியல் வல்லுறவு முயற்சி நடவடிக்கையின் போது, சம்பவ இடத்திற்கு வந்த ஏனைய ஆசிரியர்கள் அந்த ஆசிரியரின் பிடியில் சிக்கியிருந்த மாணவியை விடுவித்தனர். அந்த மாணவிக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு வந்த அந்த ஆசிரியரின் குடும்பத்தினர், அவரை சிகிச்சைக்காக மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.