காதலன் இதயத்தை வெட்டி எடுத்த காதலிக்கு தூக்கு தண்டனை!

பங்களாதேஷில் தனது காதலனின் இதயத்தை வெட்டி எடுத்தக் குற்றத்துக்காக பாத்திமா அக்தர் சோனாலி என்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குல்னா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சோனாலி(21). வைத்தியசாலையொன்றில் பணியாற்றி வந்த ஷிபான்(28) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். 

உயிருக்குயிரான காதலர்கள் இருவரும் பல இடங்களில் சுற்றித்திரிந்தனர். உடலுறவிலும் ஈடுபட்டனர். ஒரு கால கட்டத்தில் சோனாலியை திருமணம் செய்ய ஷிபான் மறுத்துவிட்டார்.

இதற்கிடையே, ஷிபானும் சோனாலியும் நெருக்கமாக இருந்ததை வீடியோ பதிவு செய்திருந்ததும், மேலும் பல பெண்களுடன் ஷிபானுக்கு தொடர்பிருந்ததும், அவரது லேப்டொப் மூலம் சோனாலி தெரிந்து கொண்டார்.

இதனால் கோபமடைந்த சோனாலி அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். சம்பவத்தன்று குளிர்பானத்தில் 20 தூக்க மாத்திரைகளை கலந்து ஷிபானுக்கு சோனாலி கொடுத்தார். அதை குடித்ததும் ஷிபான் மயங்கி விழுந்தார். 

உடனே, அவரது கையை சோனாலி கயிற்றால் கட்டினார். பின்னர் அவரது குரல் வளையை கத்தியால் அறுத்து கொலை செய்தார். அதன் பிறகும் அவர் மீதான ஆத்திரம் தணியவில்லை. 

ஷிபானின் மார்பை கத்தியால் வெட்டி பிளந்தார். உள்ளே இருந்த அவரது இதயத்தை வெட்டி வெளியே எடுத்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து சோனாலியை பொலிஸார் கைது செய்தனர். 

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சோனாலிக்கு மரண தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பை அளித்துள்ளது.

தான் செய்த குற்றம் குறித்து சோனாலி கூறுகையில், ஷிபானின் இதயம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது என்பதை பார்க்கவே அவ்வாறு செய்தேன் என்று வாக்குமூலம் அளித்தார்.

பங்களாதேஷில் பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.