பிரதமராக ஐந்தாவது தடவை ; ரணிலுக்கான ஒரு நிகழ்ச்சித் திட்டம்

Published By: Digital Desk 4

19 Dec, 2018 | 01:10 PM
image

  ஹரிம் பீரிஸ்

இலங்கையின் பிரதமராக ஐந்தாவது தடவையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் நீண்டகாலத் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் சாதனையை நாட்டின் வேறு எந்தவொரு அரசியல்வாதியும் அண்மைய எதிர்காலத்தில் முறியடிப்பது சாத்தியமில்லை.

சில தடவைகள் பிரதமர் என்ற வகையில் அவரது பதவிக்காலம் மிகக்குறுகியதாக இருந்திருக்கிறது. 2015 ஜனவரி தொடக்கம் ஆகஸ்ட் வரையான 7 மாதங்களே அவர் பிரதமர் பதவியை குறுகிய காலகட்டமாகும்.அது  அவர் மூன்றாவது தடவையாக அப்பதவியை வகித்த சந்தர்ப்பமாகும். 

ஆனால், இலங்கையில் மிகமிக குறுகிய காலத்துக்கு பிரதமர் பதவியில் இருந்த " சாதனையாளர் "என்றால் அது நிச்சயமாக  மகிந்த ராஜபக்சவே தான். எவ்வளவு காலத்துக்கு அப்பதவியில் இருந்தார் என்பதை   அவரது விதிவசமான அரசாங்கம் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களினால் தோற்கடிக்கப்பட்ட தினங்களை அடிப்படையாகக்கொண்டு கணிப்பிடுவதா அல்லது அவர் " பதவியைத் துறந்த " கடந்த சனிக்கிழமையை அடிப்படையாக வைத்து கணிப்பிடுதா? அது அவரவர் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதைப் பொறுத்தது.

இலங்கை அரசியல் நெருக்கடியின் விளிம்பில் இருந்து மீண்டிருக்கிறது.அரசியலமைப்பு வீழ்ச்சி ஒன்று தடுக்கப்பட்டிருக்கிறது.அதற்கு காரணம் எமது அரச நிறுவனங்கள் - குறிப்பாக, நீதித்துறை அரசியல் குழப்பநிலைக்கு அப்பால் உயர்த்தியாக நின்று இறுதியில் நெருக்கடியைத் தீர்த்துவைப்பதில் பிரதான கருவியாகச் செயற்பட்டிருக்கிறது. உலகின் 24 வது பெரிய ஆயுதப்படையாக விளங்கும் எமது இராணுவம் அரசியலில் இருந்து விலகிநிற்கும் உறுதியான பாரம்பரியம் மற்றும்   இன்றைய இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவின் துறைசார் நிபுணத்துவப் பண்பு ஆகியவை காரணமாக அரசியல் குழப்பநிலைக்களத்தில் கால்வைக்காமல் இருந்தது.போர் வெற்றி நாயகரான சேனநாயக்க  முன்னைய ராஜபக்ச நிருவாகத்தில்  இராணுவ சேவையில் இருந்து விலக நிர்ப்பந்திக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜபக்ச ஆட்சி மீண்டும் ஒருபோதும் வராமல் தடுப்பதே தங்களின் பிரதான பொதுக் குறிக்கோளாக இருக்கவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைப் பதவிக்குக் கொண்டுவந்த பல கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியின் முக்கிய தலைவர்களுடனான கலந்துரையாடல்களின்போது கடந்த நான்கு வருடங்களில் எண்ணற்ற தடவைகள் வலியுறுத்திவந்திருக்கிறார். ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றதையடுத்து தன்னைச் சீர்திருத்திக்கொள்ளாத ராஜபக்சவின் ஆட்சியொன்று திரும்பவும்  வருகின்ற பேரனர்த்தம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

அக்டோபர் பிற்பகுதியில் இருந்து ராஜபக்ச ஆட்சி குறைந்தபட்சம் இரு காரணங்களுக்காக தவறானதாக இருந்திருக்கும்.முதலாவதாக, 2015 மக்கள் ஆணையின் முக்கிய அம்சமே ராஜபக்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதேயாகும். அவரின் ஆட்சியில் இடம்பெற்ற தவறான நிருவாகம், ஊழல் மோசடிகளையெல்லாம் தேர்தல் பிரசாரங்களின்போது மக்கள் முன்னிலையில் எடுத்துக்கூறி அந்த ஆட்சியை தூக்கியெறிவதற்கே ஆணை கேட்கப்பட்டது.இரண்டாவதாக, மக்கள் ஆணையின் காலவரையறையாகும்.ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு பதவியில் இருப்பதற்கே புதிய ஆட்சியாளர்களுக்கு மக்கள் ஆணை வழங்கியிருந்தார்கள்.

அரசியல் நோக்கத்துடன் விக்கிரமசிங்கவின் தேசிய அரசாங்கம் உரிய காலத்துக்கு முன்னதாகவே அவசரமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட செயல் 2015 ஆகஸ்ட் மக்கள் ஆணைக்கு எதிரானதாகும்.அந்த ஆணை ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்த ஆணையை விடவும் மிகவும்  வேறுபட்டதாகும். 

இருவேறுபட்ட ஆணைகளை ஒருமித்து நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளின் ஒரு அம்சமாக கொண்டுவரப்பட்ட  அரசியலமைப்புக்கான 19 வது திருத்தம் பாராளுமன்றத்தை நிறைவேற்று அதிகார பீடத்தினால் மேற்கொள்ளப்படக்கூடிய  சூழ்ச்சித்தனமான வியூகங்களில் இருந்து பாதுகாக்கிறது. 7 நீதிபபதிகளினால் ஏகமனதாக வழங்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவ தீர்ப்பில் இதை உச்சநீதிமன்றம் தெளிவாக எடுத்துக்கூறீயிருக்கிறது.

இவ்வருட தொடக்கத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி தேரதல்களில் ஐக்கிய தேசிய முன்னணி மிகவும் உறுதியான முறையில் தோற்கடிக்கப்பட்டிருந்தது என்ற யதார்த்தத்தை கடந்த 7 வாரகால அரசியல் குழப்பநிலை மறைத்துவிடக்கூடாது.அந்த தேர்தலில் நெருக்கமான போட்டி கூட இருக்கவில்லை.அரசாங்கம் திட்டவட்டமான முறையில் தோற்கடிக்கப்பட்டது. 

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கம் மக்களின் கடும் அதிருப்திக்குள்ளாகியிருந்தது என்பதை தெளிவாக வெளிப்படுத்திய கேள்விக்கிடமின்றிய மக்கள் தீர்ப்பாக அந்த தேர்தல் முடிவுகள் அமைந்தன.நல்லாட்சியின் விளைபயன்களை தாங்கள் பெறவில்லை என்று மக்கள் உணர்ந்தார்கள் என்பது தெளிவானது.விளைபயன்கள் என்று மக்கள் எதிர்பார்த்தது வெறுமனே பொருளாதார நிவாரணங்களை மாத்திரமல்ல.அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்தவர்கள், பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்படாமல் இருந்த நிலைவரம் உட்பட பல முனைகளில் அரசாங்கம் உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை. 

குறைந்தபட்சம் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.பொது மேடைகளிலும் வெகுஜன ஊடகங்களிலும் கிளப்பப்பட்ட பெருவாரியான அனைய பிரச்சினைகள் தொடர்பில் விசாரணை  ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தால் உண்மைகள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூற வைக்கப்பட்டிருப்பார்கள்.

இலங்கையில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பாத்திரத்தை வகிப்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதன் முக்கிய தலைவர்களும் குறிப்பாக இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தங்களது கொள்கை உறுதிப்பாட்டுடனான அரசியலின் மூலமாக முன்னணியில் விளங்கிவந்திருக்கிறார்கள். 

எதேச்சாதிகாரமாக செயற்படுகின்ற  ஜனரஞ்சக அரசியல் தலைமைத்துவத்தின் ஊடாக அல்ல, ஜனநாயக அரசியல் கட்டமைப்பு ஒன்றின் ஊடாகவே தமிழர்களின் உரிமைகள் உட்பட சகலரினதும் உரிமைகளும் நலன்களும் சிறப்பான முறையில் பாதுகாக்கப்பபடமுடியும் என்ற நம்பிக்கையை அண்மைய அரசியல் நெருக்கடியின் தொடக்கத்தில் இருந்தே இந்த தமிழ் தலைவர்கள் இடையறாது வெளிப்படுத்திவந்திருக்கிறார்கள். 

அதன் பிரகாரம் அவர்கள் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஜனாதிபதிக்கும் இடையே நேர்மையான தரகர்களாக செயற்படமுனைந்தனர். இந்த இரு தரப்புகளுடனும் அவர்கள் நீண்ட நாட்களாக செயற்பட்டுவந்திருக்கிறார்கள்.2015 ஜனாதிபதி தேர்தலில் அன்றைய எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட சிறிசேனவுக்கு வாக்களிக்குமாறு தங்களது தமிழ் மக்களை இந்த தலைவர்கள் கோரினார்கள்.அதன் பிரகாரம் அந்த மக்களும் சிறிசேனவுக்கே அமோகமான ஆதரவைக் கொடுத்தார்கள். வடக்கு, கிழக்கில் பெற்ற அந்த  ஆதரவே ஜனாதிபதியை வெற்றிபெறவைத்த பெரும்பான்மை வாக்குகளுக்கு காரணமாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பாராளுமன்றத்தில் 14 வாக்குகள் இருக்கின்றன.உண்மையில் அவர்களுக்கு 16 வாக்குகள்.ஆனால், ஈ.பி.ஆர்.எல் எப். கட்சியைச் சேர்ந்த வன்னி மாவட்ட எம்.பி.யான சிவசக்தி ஆனந்தன் கூட்டமைப்பின் ஆணைக்கு கட்டுப்பட மறுக்கிறார்.மட்டக்களப்பு எம்.பி.யான வியாழேந்திரனை தனது பக்கத்துக்கு வென்றெடுப்பதில் மகிந்த ராஜபக்ச வெற்றிகண்டார். அவர் விலைபேசப்பட்டே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.ராஜபக்சவுக்கு ஆதரவளித்துவிட்டு 2020 தேர்தலுக்குப் பிறகு தீவிர அரசியலில் இருந்து அவர் ஓய்வுபெறத் தீர்மானித்திருக்கக்கூடும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுபவர்களுக்கே பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் என்ற பாராளுமன்ற இலக்க விளையாட்டின் காரணமாக அதன் ஆதரவை ஐக்கிய தேசிய முன்னணியினரும் ஜனாதிபதி சிறிசேனவும் கோரினார்கள்.கடந்த சனிக்கிழமை மகிந்த ராஜபக்ச தனது பதவி விலகல் உரையில் இதை தெளிவாகக் குறிப்பிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது." றிமோற் கொன்ட்ரோல் " என்ற பதத்தை அவர் பயன்படுத்தியதன் மூலம் பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் தீர்க்கமான பாத்திரத்தை வகிப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

சிறுபான்மையினங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சிகள் --தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமல்ல, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் போன்ற முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் -- கொழும்பில் நிலவிய அதிகாரச்சண்டையில் அவர்களது சமூகங்களுக்கு பொதுவில் பெரிதாக அக்கறை இல்லை என்றபோதிலும் கூட அரசியலமைப்பு ஆட்சிமுறையையும் சட்டத்தின் ஆட்சியையும் மீட்டெடுப்பதில் ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.

ஜனநாயக அரசியல் விவாதத்தில் இருந்து சிறுபான்மையினங்கள் அந்நியப்படுத்தப்படுகின்ற இந்தப் போக்கு சமூகரீதியில் கட்டுறுதியான, ஒருங்கிணைந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு உதவப்போவதில்லை. தேசிய ஒருங்கிணைப்பும் நல்லிணக்கமும் ஒரு கபினெட் அமைச்சருக்கு ஒதுக்கப்படுகின்ற பொறுப்பாக இல்லாமல், அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கெட்டியான அங்கமாக இருக்கவேண்டியது மிகமிக அவசியமானதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04