(இரோஷா வேலு) 

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் எட்டு பேரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்பரையினர் கைதுசெய்துள்ளனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை  இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்திய வேளையில் நீதவான் இவர்களை நாளை வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது, இந்தியா இராமநாதன்புரம், தங்கச்சிமடம் அண்டிய பகுதிகளைச் சேர்ந்த 29 முதல் 60 வயது வரையிலானவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இவர்களை கைதுசெய்த வேளையில் அவர்களிடமிருந்து மீன் பிடிக்கு பயன்படுத்திய படகு ஒன்றும் மற்றும் மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்தும் வேறு சில உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளது. 

நெடுந்தீவு கடற்பரப்பில் 17 ஆம் திகதி செவ்வாய்கிழமை மாலை அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களை ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் கைதுசெய்திருந்தனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளுக்காக கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

இதனையடுத்து,குறித்த எண்மரும் இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்ட வேளையிலேயே நீதவான் அவர்களை நாளை மறுதினம் வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண, கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.