(ப.பன்னீர்செல்வம்)

நாட்டில் "மின்வெட்டு" என்ற பேச்சுக்கே இடமில்லை. 24 மணிநேரமும் தொடர்ச்சியாக மக்களுக்கு மின்சாரம் வழங்கப்படும் என உறுதியளிக்கும் அரசாங்கம். அவசரத் தேவைகளுக்கு பயன்படுத்த "ஜெனரேட்டர்"களை (மின்பிறப்பாக்கிகளை) வெளிநாடுகளிலிருந்து கொள்வனவு செய்வதற்காக நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் விசேட பத்திரமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அரசு அறிவித்தது. 

கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அரசு இதனை அறிவித்தது. 

இங்கு உரையாற்றிய மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பான பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா மேலும் உரையாற்றுகையில்,

இன்று நாட்டில் ஒரு புறம் வரட்சி அத்தோடு மின்மாற்றின் பழுதடைவு, சில மின்மாற்றிகள் தீப்பிடிப்பு, பராமரிப்பு தொடர்பான நெருக்கடிகள் உள்ளன. 

இவ்வாறானதொரு சூழ்நிலையில் மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்க முடியாது. "மின்வெட்டை" அமுல்படுத்த வேண்டும் என அதிகாரிகள், பொறியியலாளர்கள் ஆலோசனைகளை வழங்கினர். 

இதில் உண்மையுள்ளது மறுப்பதற்கில்லை. ஆனால் மக்களுக்கு மின்சாரத்தை தடையின்றி வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். 

எனவே அதற்காக அரசாங்கம் எந்தத் தீர்மானத்தையும் எடுக்க தயாராகவே உள்ளது. 

ஜனாதிபதியும் பிரதமரும் அரசும் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. எனவே எந்தக் காரணம் கொண்டும் நாட்டில் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. 

அத்தோடு நல்லாட்சி மீது கடவுளும் கருணை காட்டியுள்ளார். நீர் தேக்கப் பிரதேசங்களில் நேற்று திங்கட்கிழமை நல்ல மழை பெய்திருக்கின்றது. 

மின்சாரத்துறையில் இயந்திரங்கள் பராமரிப்பு, குறைபாடுகள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன, நெருக்கடிகள் இல்லாமல் இல்லை. 

அவசரத் தேவைக்காக தற்காலிக  அடிப்படையில்  வெளிநாடுகளிலிருந்து மின் பிறப்பாக்கிகளை (ஜெனரேட்டர்கள்) கொள்வனவு செய்யவுள்ளோம். 

அதற்காக நாளை புதன்கிழமை இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்திற்கு விசேட அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

எனவே இவற்றையெல்லாம் தற்போது பழுதுபார்த்து வருகின்றோம். எனவே சில சில நிமிடங்கள் மின்சாரம் இல்லாமல் போகலாம். ஆனால் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என்றும் பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.