பிரான்ஸில் கிறிஸ்மஸ் சந்தையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

பிரான்ஸில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் அங்குள்ள ஸ்டிராஸ்பர்க் நகர கிறிஸ்மஸ் சந்தையில் நேற்று முன்தினம் மாலையில் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இரவு 8 மணி அளவில் அங்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மர்ம நபர், மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்கிருந்த மக்கள் நாலாபுறமும் பதறியடித்தவாறு ஓட்டம் எடுத்தனர்.

இருப்பினும் துப்பாக்கிச்சூட்டில் குண்டு பாய்ந்து 3 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். 

குறித்த நபர்களை உடனடியாக அங்கிருந்து மீட்டு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும், அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படை வீரர்கள் அங்கு விரைந்தனர். துப்பாக்கிச்சூட்டை தடுத்து நிறுத்த அவர்கள் முயற்சித்தனர். இருப்பினும் துப்பாக்கிச்சூட்டை தடுக்க முடியவில்லை.

ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் அவர் காயம் அடைந்தாலும், சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

துப்பாக்கிச்சூடு பற்றி பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், கண்காணிக்கப்பட்டு வந்த சந்தேக நபர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர், 29 வயதான ஷெரீப் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

குறித்த  சம்பவத்தை தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள கிறிஸ்மஸ் சந்தைகள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று பொலிஸார் அறிவுறுத்தினர். பல உணவு விடுதிகளிலும், ‘பார்’களிலும் கதவுகளை இழுத்து மூடினர். அங்கிருந்த மக்கள் அங்கேயே அடைக்கலம் தேடினர்.

தாக்குதல் நடத்திய நபரை தேடிப்பிடித்து கைது செய்வதற்காக அந்த நகரில் பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 2 ஹெலிகொப்டர்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.