(நா.தினுஷா) 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இருவரும் பாராளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியினை உருவாக்கவே முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர் என ஐக்க்ய‍ தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாராளுமன்றத்தை மதிக்காமல் பாராளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் பாராளுமன்றத்தை கலைத்து, பிரதமரை மாற்றியமைத்து நாட்டின் ஆட்சி பலத்தை கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளது.  

இவ்வாறு பாராளுமன்றத்தை புறக்கணித்து ஆட்சியை கைப்பற்ற இவர்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கே முழுநாடும் எதிர்பபினை வெளியிட்டுவருகின்றதே தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் இல்லை. பாராளுமன்றம் இல்லாமல் ஒருநாளும் ஆட்சி புரிய முடியாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேவை இல்லை என்றதாலேயே 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் பொது தேர்தல்களில் அவருக்கு எதிர்த்து வாக்குபதிவு செய்திருந்தனர். 

அவ்வாறு தேசிய தேர்தல்களில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் தனது வாக்கு பலத்தை பிரயோகித்துள்ள நிலையில் மக்களின் அபிப்பிராயத்தை நிராகரிக்க முடியாது. அவ்வாறே மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் எதிர்பார்ப்பார்களானால் எதிர்வரும் தேர்தல்களில் அவருக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்க முடியும். ஆனால் அவ்வாறானவொரு தீர்மானத்திற்கு மக்கள் தயாராக இல்லை என்பதையும் மக்களே வெளிக்காட்டியுள்ளனர்.  

இவ்வாறான நிலையில் எதற்காக இவ்வாறு இந்த பதவியினை மஹிந்த பெற்றுகொண்டார் என்றும் எதற்கு இந்த பேராசை என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

மேலும் நீதிமன்ற தீர்ப்புகள் நாளை அல்லது நாளை மறுதினம் அல்லது வெள்ளிக்கிழமையே கிடைக்கப்பெரும். இதனால் நீதிமன்ற தீர்ப்புகள் கிடைக்ப்பெற்றவுடன் அடுத்த வாரத்தில் பாரிய மக்கள் போராட்டத்தை முன்னெடுப்போம். 

நீதிமன்ற தீர்ப்பு கிடைப்பதற்கு முன்னர் போராட்டம் மேற்கொள்வதால் எந்தவித பயனும் கிடைக்க போவதில்லை. எனவே அடுத்த வாரம் நீதிக்கான மக்கள் போராட்டம் மேற்கொள்ளப்படும் என்றார்.