இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 323 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 4 விக்கெட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களை குவித்துள்ளது.

கடந்த 07 ஆம் திகதி அடிலெய்டில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதல் இன்னங்ஸுக்காக அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 250 ஓட்டங்களை குவித்தது. இதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 235 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

15 ஓட்டங்கள் என்ற முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி நேற்றைய மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களை பெற்றிருந்தது. புஜரா 40 ஓட்டத்துடனும், ரகானே ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந் நிலையில் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பிக்க இந்திய அணி 106.5 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 307 ஓட்டங்களை குவித்தது.

ஏற்கனவே முதல் இன்னிங்சில் 15 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் அவுஸ்திரேலியா அணிக்கு வெற்றியிலக்காக 323 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணி சார்பில் ரகானே 70 ஓட்டங்களையும், ராகுல் 44 ஓட்டங்களையும், அணித் தலைவர் விராட் கோலி 34 ஒட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் நெதன் லயன் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளையும், மிச்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டையும், ஹேசல்வுட் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்.

இதனையடுத்து 323 என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி இன்றைய நான்காம் நாள் ஆட்ட முடிவின்போது 4 விக்கெட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களை குவித்துள்ளது.

இதன் மூலம் அவுஸ்திரேலிய அணிக்கு இன்னும் 6 விக்கெட்டுக்கள் கையிலிருக்க 219 ஓட்டங்கள் தேவை என்ற நிலையுள்ளது.

ஆடுகளத்தில் ஷென் மார்ஸ் 31 ஓட்டத்துடனும், ஹெட் 11 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதுள்ளனர். பந்து வீச்சில் அஷ்வின், மெஹமட் ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

நாளை போட்டியின் ஐந்தாவது நாளாகும்.