" மற்றவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப என்னால் செயற்பட முடியாது"

Published By: Digital Desk 7

08 Dec, 2018 | 04:34 PM
image

மற்றவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றமுறையில் தன்னால் செயற்படமுடியாது என்றும் தனது பதவிக்காலம் அடுத்தவருடம் முடிவுக்கு வரும்போது நிச்சயமாக ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறும். இடைப்பட்ட காலத்தில் திடீர் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவதாக இருந்தால் கூட அதையும் தான் மாத்திரமே பிரகடனப்படுத்தமுடியும். ஆனால் அவ்வாறான திடீர் தேர்தலொன்றை அறிவிக்கும் உத்தேசம் எதுவும் தனக்கு இல்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். 

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு விரைவான தீர்வொன்று கிட்ட வேண்டுமென்று எதிர்பார்த்து உச்சநீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புக்காக முழு நாடுமே காத்துக்கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய தினம் டெயிலி மிறர் பத்திரிகைக்கு ஜனாதிபதி விரிவான நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கிறார்.

அதில் ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி விடுத்திருக்கும் கோரிக்கை குறித்து கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்.

 இரண்டாவது பதவிக்காலத்துக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திட்டம் ஏதாவது இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி சிறிசேன

'அதைத் தீர்மானிப்பதற்கு இன்னும் ஒரு வருட காலம் இருக்கிறது. இப்போது அதைத் தீர்மானிப்பதற்கான தேவை எதுவும் இல்லை.கடந்த ஒரு மாதகாலத்தை திரும்பிப் பார்ப்பீர்களேயானால் மணித்தியாலத்துக்கு ஒரு தடவை நிகழ்வுகள் மாறிக்கொண்டிருப்பதை அவதானித்திருப்பீர்கள்.  அதனால் அடுத்த ஒரு வருட காலத்துக்குள் என்னென்ன நடக்குமென்று இப்போது எப்படி கூறமுடியும்? ' என்று பதில் கேள்வியெழுப்பினார்.

ஜனாதிபதியின் நேர்காணலின் முக்கியமான பகுதிகளை கேள்வி- பதில் வடிவில் தருகிறோம்.

அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து ஜனாதிபதி என்ற வகையில் நீங்கள் சில அதிகாரங்களை இழந்துவிட்டீர்கள். பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தில் ஒரு வருடம் கடந்த பிறகு முன்னர் போன்று உங்களால் அதைக் கலைக்க முடியாது. 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்படாவிட்டால் தற்போதைய நெருக்கடியைக் கையாளக்கூடிய பலம்வாய்ந்த ஒரு நிலையில் இருந்திருப்பீர்கள். அந்த திருத்தத்திற்காக நீங்கள் வருந்துகிறீர்களா?

இல்லை. அது ஒரு நேர்மறையான திருத்தச் சட்டம். நிச்சயமாக அது நாட்டுக்குத் தேவை. நாட்டின் ஜனநாயக நிறுவனங்களை அது பலப்படுத்தியிருக்கிறது.மனித உரிமைகளைப் பேணிப்பாதுகாத்து நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிசெய்திருக்கிறது. அந்த திருத்தச் சட்டத்தை நாம் பாதுகாக்கவேண்டும்.

அவ்வாறிருந்தாலும் அரசியல் ரீதியில் விசனத்தைத் தோற்றுவிக்கக்கூடிய கலங்கலான பகுதிகள் அதில் இருக்கின்றன.உதாரணத்துக்கு இன்றைய பாராளுமன்றத்தில்  எந்தக் கட்சிக்குமே அறுதிப் பெரும்பான்மை இல்லை. அது ஒரு தொங்கு பாராளுமன்றமாக இருக்கிறது. இன்றைய அரசியல் நெருக்கடி நீடிப்பதற்கு அதுவே காரணமாகவும் இருக்கிறது. இத்தகைய சூழ்நிலைகளின் கீழ் ஒரு கட்சியினால் தீர்மானங்களை எடுப்பது கஷ்டமானதாக இருக்கிறது.

பதவிக்காலத்தில் ஒரு வருடம் கடந்தபிறகு பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு முன்னர் இருந்த அதிகாரத்தைத் தொடர்ந்தும் வைத்திருந்தால் தற்போதைய நெருக்கடியைக் கையாளுவது சுலபமாக இருந்திருக்கும். மக்கள் தான் தீர்மானிக்கவேண்டும்.அது அவர்களின் உரிமை.இன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விலை குறிக்கப்படுகிறது.

கட்சித் தலைவர்களினால் ஒரு தீர்மானத்தை எடுக்கமுடியாமல் இருக்கிறது.பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் தங்களது ஓய்வூதியம் பாதிக்கப்படுகிறதே என்று எம்.பி.மார் கவலைப்படுகிறார்கள்.அவர்கள் தங்களின் தனிப்பட்ட அக்கறைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.நாட்டையும் மக்களையும் பற்றி அவர்களுக்கு பெரிதாக கவலை கிடையாது.

 தற்போதையதைப் போன்ற நெருக்கடியான சூழ்நிலையில் பாராளுமன்றக் கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்துக்குச் செல்வது பொருுத்தமற்றது. பாராளுமன்றக் கலைப்பை நீதிமன்றம் நிராகரிக்க முடியுமா இல்லையா என்பதைப் பற்றி நான் கருத்துச்சொல்லப்போவதில்லை. எவ்வாறிருந்தாலும் நீதிமன்றத்தை நாடாமல் பாராளுமன்றமும் நிறைவேற்று அதிகாரபீடமும் இந்த நெருக்கடியைத் தீர்க்கக்கூடியதாக இருந்திருக்கவேண்டும்.நீதிமன்றத்துக்கு எவரும் போகாமல் இருந்திருந்தால் தற்போதைய நெருக்கடி இந்த நேரம் தீர்த்துவைக்கப்பட்டிருக்கும்.

 19 வது திருத்தத்தில் இருக்கும் சிக்கலான அம்சங்கள் நெருக்கடியைத் தீர்த்துவைப்பதற்கு தடைாக இருக்கின்றனவா? 

அந்த திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தினம் நன்றாக நினைவில் இருக்கிறது. மாலை 5 மணிக்கே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அது ஒரு மணி நேரம் நீடித்தது.அந்தச் செயன் முறைகளின்போது தோன்றிய பிரச்சினைகள் அவசர அவசரமாகக் கூட்டப்பட்ட ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு தீர்த்துவைக்கப்பட்டன. பதற்றமான சூழ்நிலையிலேயே அன்று பாராளுமன்ற அமர்வு  நடத்தப்பட்டது. கையில் இருந்த பிரச்சினைகளை நிதானமாக அமைதியாக ஆராய்வதற்கு வாய்ப்பிருக்கவில்லை. இவ்வாறாகத்தான் நாட்டின் எதிர்காலத்துக்குப் பாதகமான அந்த அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

அதை அவசரமாக நிறைவேற்றவேண்டிய தேவை ஏதாவது இருந்ததா? 

அத்தகைய அவசரம் எதுவும் இருந்ததாக நான் நினைக்கவில்லை. உண்மையிலேயே ரணில் விக்கிரமசிங்கவும் அவருக்கு உதவியாக இருந்த சிலருமே அந்த திருத்தம்  அவசரமாக நிறைவேற்றப்பட்டதற்கும் அதன் விளைவாக இன்று தோன்றியிருக்கும் அரசியல் நெருக்கடிக்கும் பொறுப்பானவர்கள்.

பாராளுமன்றமும் நிறைவேற்று அதிகாரபீடமும் நெருக்கடியில் சம்பந்தப்பட்டிருக்கின்ற போதிலும் நாட்டில் நிலைமை சுமுகமாக இருக்கிறது. எந்தவித பதற்றமும் இல்லாமல் மக்கள் தங்கள் அலுவலகளைப் பார்க்கிறார்கள். அது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

 நிச்சயமாக நீங்கள் கூறுவது சரியானதே .இது குறித்து மேலும் சில விடயங்களை என்னால் கூறமுடியும். இப்போது பிரதமர் இல்லை. அமைச்சரவை இல்லை. ஆனால் ஜனாதிபதி மும்மணிகளின் ஆசியுடன் அமைச்சுகளின் செயலாளர்களின் உதவியுடன் நாட்டை நிருவகிக்கிறார். நாட்டில் எந்த மோதலும் இல்லை. அதற்கு காரணம் எமது ம்கள மத்தியில் இருக்கின்ற தார்மீக ஒழுக்கக் கட்டுப்பாடேயாகும். அரசியல்வாதிகள் தங்களுக்குள் குத்துவெட்டுக்களிலும் கழுத்தறுப்புகளிலும் ஈடுபடுகின்ற போதிலும் மக்கள் தங்களை விட நாட்டு நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.தங்களது அன்றாட அலுவல்களை அமைதியாக செய்கிறார்கள்.இது பல நூற்றாண்டுகளாக பௌத்த கலாசாரத்தினாலும் விழுமியங்களினாலும் போஷித்து வளர்க்கப்பட்ட எமது மக்களின் தார்மீகப் பண்பாகும்.

அத்துடன் இந்துமதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகியவற்றின் ஆன்மீக உணர்வும் எமது நாட்டில் உள்ள ஏனைய மக்களின் தார்மீக நடத்தைகளுக்கு பங்களிப்பைச் செய்திருக்கின்றன. இந்த மதங்களைப் பின்பற்றுகின்ற மக்களும் நாட்டை மதிக்கிறார்கள். இது குறித்து நான் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். அமைச்சுக்களின் செயலாளர்களுடன் சேர்ந்து நாட்டை நான் நிருவகிக்க மக்கள் எல்லோரும் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்.

புதிய அரசாங்கத்தை நீங்கள் நியமித்த பிறகு அது தேவையான பெரும்பான்மைப் பலத்தை பாராளுமன்றத்தில் பெறும் என்று நீங்கள் நம்பிக்கையுடன் பேசினீர்கள்.ஆனால் நிலைமை இப்போது அவ்வாறில்லை. உண்மையில் என்னதான் நடந்தது? 

சம்பந்தப்பட்ட  பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் 113 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறக்கூடியது சாத்தியம் என்று எனக்கு கூறப்பட்டது. பேச்சுவார்த்தைகளில் சம்பந்தப்பட்ட தரப்புகளினால் எனக்கு தரப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே நான் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்தினேன்.

தேவையான ஆதரவைப் பெறமுடியாமல் போனதற்கான  காரணம் குறித்து உங்கள் பார்வையில் என்ன கூறுகிறீர்கள?

இந்தச் செயற்பாடுகளின்போது எம்.பி.க்களுக்கு பணப்பெறுமதி குறிக்கப்பட்டது என்பது ஒன்றும் இரகசியமானதல்ல வழமையான வர்த்தக நடவடிக்கைகளின் போது கேள்விப்பத்திரம் கோருவது போன்று இது நடந்தது. சில எம்.பி.க்கள் 50 கோடி ரூபா தங்களுக்கு தந்தால் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கத் தயார் என்று நிபந்தனை விதித்ததாகவும் கேள்விப்பட்டேன். எவருடனும் நான் தனிப்பட்ட முறையில் இது தொடர்பில்  பேசவில்லை. எனது அரசியல் வாழ்வில் ஒரு உள்ளூராட்சி உறுப்பினருக்குத்தானும் ஒரு சிறுதொகையைக்கூட கையூட்டலாக நான் கொடுத்ததில்லை. எதிர்காலத்திலும் கூட இதை நான உறுதியாகப் பின்பற்றுவேன்.

எம்.பி.க்கள் தங்களுக்கு பாரிய தொகையை விலையாகக் குறித்ததன் காரணத்தினால்தான் மகிந்த ராஜபக்சவினால் பாராளுமன்றத்தில் போதுமான ஆதரவைத்திரட்ட முடியாமல் போய்விட்டது என்று நான் நினைக்கிறேன். இல்லையானால் அவரால் அந்த ஆதரவைத்திரட்டியிருக்க முடியும். தற்போதைய அரசியல் நெருக்கடியும் தவிர்க்கப்பட்டிருக்கும்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மகாநாட்டில் உரையாற்றியபோது ஒரு வாரகாலத்திற்குள் நெருக்கடியை தீர்க்கமுடியும் என்று நம்பிக்கை வெளியிட்டீர்களே?

ஆம்.நிச்சயமாக.

எவ்வாறு ஒரு வாரகாலத்துக்குள் தீர்ப்பீர்கள்?

உச்சநீதிமன்றம் திங்கட்கிழமை தீர்பை வழங்கும். அவ்வாறு தான் நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஒரு வாரகாலத்துக்குள் தீர்வு காணமுடியும் எனற உத்தரவாதத்தை வழங்கினேன். பாராளுமன்றக் கலைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கக்கூடிய தீர்ப்பு பிரச்சினையை ஒரு வழிக்குக் கொண்டுவருவதற்கான நிலைமையை உருவாக்கும்.அது நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரும். பாராளுமன்றக் கலைப்புக்கு ஆதரவாக நீதிமன்றத் தீர்ப்பு வருமாக இருந்தால். பொதுத் தேர்தல் வரும்.பிரச்ினை முடிந்துவிடும். மற்றும்படி என்னால் தெரிவுசெய்யப்படுகின்ற ஒருவரின் கீழ் அரசாங்கத்தை அமைப்பதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்ட கட்சிக்கு நான்  வாய்ப்பளிக்கவேண்டியிருக்கும்.

எந்தச் சூழ்நிலையிலும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை இனிமேல் கொடுக்கப்போவதில்லை என்று கூறியிருந்தீர்கள்.ஆனால் பிரதமர் பதவிக்கு அவரையே பிரேரிக்கப் போவதாக ஐக்கிய தேசிய கட்சி கூறுகிறது. இதனால் மேலும் முட்டுக்கட்டை நிலை தொடரலாமல்லவா? 

நாட்டை ஆட்சிசெய்வதற்கு தகுதியற்ற, ஊழல்தனமான எவரையும் நான் பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று திட்டவட்டமாக நான் கூறிவிட்டேன்.எனது நிலைப்பாட்டை நான் மாற்றவில்லை.

 விக்கிரமசிங்கவை விட வேறு ஒருவரை நீங்கள் தெரிவுசெய்வது சாத்தியமா? 

ஏன் என்னால் செய்யமுடியாது?  விக்கிரமசிங்கவை விடவும் 224 பேர் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். அவரை விட வேறு ஒர எம்.பி.யை இந்த அரசியல் கட்சிகளினால் அடையாளம் காணமுடியாதா?

கடந்த காலத்தில் உங்களது உரைகளில் உலக நாடுகளை வென்றெடுத்துவிட்டதாக எப்போதும்  கூறினீர்கள். உலகில் இலங்கைக்கு நண்பர்கள்தான் இருக்கிறார்கள். எதிரிகள் இல்லை என்றும் பெருமைப்பட்டீர்கள்.ஆனால், அரசாங்கத்தை மாற்றிய உங்கள் நடவடிக்கையை மேற்குலக நாடுகளின் தூதுவர்கள்  கடுமையாக விமர்சித்திருக்கிறார்களே.நீங்கள் கட்டியெழுப்பிய சர்வதேச நம்பிக்கைக்கு என்ன நடந்தது? 

 என்னை எந்தத் தூதுவரும் அச்சுறுத்தவில்லை.எம்மீது தேவையற்ற செல்வாக்கோ நெருக்குதலோ பிரயோகிக்கப்படவில்லை.அவர்கள் தங்களது அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.எம்முடன் பேச்சுக்களை நடத்தினார்கள்.சந்திக்கவேண்டுமென்று நான் அழைத்த நேரங்களில் எல்லாம் அவர்கள் வந்து என்னுடன் பேசினார்கள்.தனியாகவும் சந்தித்திருக்கிறேன் குழுவாகவும் சந்தித்திருக்கிறேன்.அவர்கள் தங்களது நலைப்பாடுகளை வெளிப்படுத்துவார்கள்.நான் எனது நிலைப்பாடுகளை முன்வைப்பேன். இதை ஜனநாயகத்தின் ஒரு சாதனையாக நான் பார்க்கிறேன்.இதையொரு பெரிய பிரங்சினையாக ஊடகங்கள் நோக்குகின்றன.என்னைப் பொறுத்தவரை இவையெல்லாம் ஒரு பாரதூரமான பிரச்சினைகளே அல்ல.

2014 இல் ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து நீங்கள் வெளியேறியபோது அவர் மீது மோசமான தாக்குதல்களைத் தொடுத்தீர்கள். ஐக்கிய தேசிய கட்சி தலைமைத்துவத்துடன் கைகோர்த்தீர்கள். இன்று ராஜபக்ச விக்கிரமசிங்கவை விடவும் சிறப்பானவர் என்று கூறுகிறீர்கள்.உங்களது மனப்போக்கு மாற்றத்துக்கான காரணம் என்ன? 

இதற்கு ஒரு கிராமிய பழமொழியொன்றைக் கூற விரும்புகின்றேன்.ஒரு பறவை களம்பிப்பறக்கும்போது தான் அதன் உண்மையான நிறம் தெரியும் என்பார்கள்.விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையிலும் கூட இதுதான் நிலை.அவர் அதிகாரத்தைப் பொறுப்பேற்ற பிறகுதான் அவரின் உண்வமயான சுபாவம் தெளிவாகத் தெரியவந்தது. விடாப்பிடியான- பேச்சவார்த்தைக்குத் தயாரில்லாத - மற்றவர்கள் சொல்வதைக் கிரகிக்க விரும்பாத ஒருவராக விக்கிரமசிங்க இருப்பார் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.

 விக்கிரமசிங்க ஜனநாயகத்தைப் பற்றி பெரிதாக கூச்சல் போடுகிறார்.ஆனால் கடந்த 25 வருடங்களாக ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஜனநாயகத்துக்கு இடமளிக்காத ஒருவர் அவர்.கடந்த நான்கு வருட காலத்திலும் பிரதமராக இருந்துகொண்டு ஜனாதிபதியின் அதிகாரங்களைத் தனக்காக்கிக்கொண்டவர் அவர். அவருக்கு நன்றியுடையவனாக இருக்கவேண்டும் எனற காரணத்தால் நான் அமைதியாக இருந்தேன்.

மகிந்த ராஜபக்சவுடன் மிக நீண்டகால அரசியல் தொடர்பு எனக்கு இருக்கிறது.விக்கிரமசிங்கவுடன் நான்கு வருடங்களே அரசியல்  தொடர்பு.இருவரையும் நன்கு அறிவேன்.

தற்போதைய நெருக்கடியான கட்டத்தில் சபாநாயகரின் செயற்பாடுகளை எவ்வாறு பார்க்கிறீர்கள்? 

 அவரது நடத்தைகள் தொடர்பில் எம்.பி.க்கள் வேறுபட்ட அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கிறார்கள். இந்த நெருக்கடி தோன்றிய பிறகு அவரை என்னால் சந்திக்கக்கூடியதாக இருந்தது.பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடினோம். என்னைச் சந்திக்க இங்கே வந்தார். அதேபோன்றே நானும் தொலைபேசியில் அவருடன் தொடர்பு கொண்டேன். பல பிரச்சினைகள் குறித்து அவருடன் என்னால் பேசக்கூடியதாக இருந்தது. அரசியல் பக்குவம், அறிவு மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்தி பல பிரச்சினைகளை எம்மால் தீர்க்கக்கூடியதாக இருந்தது. மற்றவர்கள்  அதுவும் குறிப்பாக விக்கிரமசிங்க நாங்கள் இருவரும் விவகாரங்களைக் கையாளுவதில் காண்பித்த பக்குவத்தை வெளிக்காட்டியிருந்தால் பிரச்சினை சுலபமாகக் கையாளப்பட்டிருக்கும். என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48