- முஹம்மத் அயூப்

        

இந்தியா அதன் மதசார்பற்ற ஜனநாயகத்தின் எதிர்காலம் இடருக்குள்ளாகியிருக்கும் நிலையில், நெருக்கடிமிக்க திருப்பக்கட்டத்தில் நிற்கிறது. முக்கியமான ஐந்து மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள் பூர்த்தியடையும் வெவ்வேறு கட்டங்களில் இருக்கும் அதேவேளை, அடுத்த வருடம் பொதுத்தேர்தலும் நடைபெறவிருக்கும் நிலையில் அரசியல் சூடு கொதிநிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது.போட்டி போட்டுக்கொண்டு இந்துத்வா அரசியல் பேசுவது முக்கியமாக அவதானிக்கக்கூடிய செயற்பாடாகியிருக்கிறது. வெளிவேடத்துக்கு மதசார்பற்றதாக இருக்கின்ற காங்கிரஸ் கட்சி இந்துவாத பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுத்தளத்திற்குள் ஊடுருவுவதற்காக தனது ' இந்துச் சான்றுகளை ' வெளிக்காட்டும் பிரயத்தனங்களில் இறங்கியிருக்கிறது.

       

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்துக் கோவில்களுக்குச் சென்று வழிபடுவதில் மும்முரம் காட்டுகின்ற அதேவேளை, தேர்தல் அனுகூலங்களுக்காக தனது குடும்ப - சாதி மரபு மூலங்களைப் பற்றி  பகிரங்கமாகப் பேசுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. பிரதமர் பதவிக்கான வேட்பாளராக வரவிரும்புகின்றவர்  நாட்டுக்கு தலைமை தாங்குவதற்கான அடிப்படைத் தகுதிகளாக வெளிப்படையாகவே தனது சாதி, மதம் ஆகியவற்றைப் பற்றி பேசுவது சுதந்திர இந்தியாவில் இதுதான் முதற்தடவையாகும்.

        

காங்கிரஸ் கட்சியின் மந்தமான இந்துத்வா எதிர்வரும் பொதுத்தேர்தலில் படுமோசமான தோல்வியைத் தேடித்தரக்கூடிய சகலவிதமான சாத்தியப்பாடுகளும் இருக்கிறது எனலாம். ஏனென்றால், பாரதிய ஜனதாவின் முரட்டுத்தனமான இந்துத்வாவின் ஒரு வெளிறிய நகல் போன்று தென்படுகின்ற இந்துவாதத்தை கடைப்பிடிப்பதன் மூலம் உண்மையான இந்துவெறியுடன்  போட்டிபோடமுடியாது.ராகுல் காந்தியும் அவரது ஆலோசகர்களும் புனைவுத்தனமான தனிப்பட்ட மத உணர்வு வெளிப்பாட்டை  இந்து தேசியவாதத்துடன் போட்டுக் குழப்புகிறார்கள். இந்து தேசியவாதம் என்பது )அரசியலமைப்பின் ஆத்மார்த்த நோக்கங்களுக்கும் அடிப்படையான உணர்வுக்கும் நேரடி விரோதமான முறையில் ) இந்தியாவுக்கு பிரத்தியேகமாக உரிமைகோரக்கூடியவர்கள் இந்துக்களே ; முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தக்கூடிய வெளியாரே என்ற எண்ணத்தின் அடிப்படையில் தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒரு அரசியல் கோட்பாடேயாகும். அது தனிப்பட்டவர்களின் கடவுள்பக்தியுடனும் இந்துமதத்தின் சித்தாந்தக்கூறுகளுடனும் எதுவிதத்திலும் சம்பந்தப்பட்டதல்ல.

                 

காங்கிரஸின் மந்தமான இந்துத்வா அரசியலமைப்பில் பொதிந்திருக்கும் மதசார்பின்மையின் சித்தாந்தக்கூறுகளை கடுமையாக மங்கச் செய்வதன் மூலமாக தத்துவார்த்த செயற்களத்தை பாரதிய ஜனதாவுக்கு விட்டுக்கொடுக்கின்றது. தேர்தல் அனுகூலங்களுக்காக வெளிப்படையாக  பயன்படுத்துவதைத்  தவிர்த்த நீண்டகால  நியமங்கள் இப்போது கடந்தகாலத்து சமாச்சாரமாகிவிட்டது. அரங்கேறுகின்ற இந்த நாடகத்தின் மிகவும் ஆபத்தான ஒரு அம்சம் என்னவென்றால் மிரட்டலின் மூலமாக முனனெடுக்கப்படுகின்ற  அரசியலின் துரித விரிவாக்கமாகும். அந்த அரசியல் சட்டத்தின் ஆட்சியை மலினப்படுத்துவதுடன் இந்தியாவின் ஜனநாயக கட்டுமானத்தை அச்சுறுத்துகிறது. அண்மையில் அயோத்தியில் விஷ்வ இந்து பரிஷத்தும் ராஷ்டிரிய சுவயம்சேவக்கும்( ஆர்.எஸ்.எஸ்.) சிவசேனா மற்றும் இந்து தேசியவாத அமைப்புக்களும் ஆயிரக்கணக்கில் பக்தர்களை அணிதிரட்டிய செயல் இதற்கு  சிறந்த உதாரணமாகும்.

        

1992 டிசம்பரில் நிர்மூலமாக்கப்பட்ட பாபர் மசூதி  இருந்த இடத்தில் உடனடியாக இராமர் கோவிலைக் கட்டுவிப்பதற்கு அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்கும் தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாகவே இந்த அணிதிரட்டல்கள் அமைந்திருக்கின்றன. தங்களுக்கு சினேகபூர்வமானதாக இன்றைய அரசாங்கத்தை நோக்கும் இந்துத்வா அமைப்புகள் இத்தகைய நெருக்குதலைக் கொடுப்பதன் மூலமாக நோக்கத்தைச் சாதித்துக்கொள்ளலாம் என்று நம்புகின்றன.ஆனால், இது இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு நேரடியான ஒரு சவால் என்பது முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியதாகும். அயோத்தி பாபர் மசூதி சர்ச்சை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.அதனால் நீதித்துறையை கடுமையாக மலினப்படுத்துவதாக இந்துத்வா அமைப்புக்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. அயோத்தி பேரணியில் உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவாத் " சட்டத்தின் வாசகங்களினால் மாத்திரம் சமூகம் நகருவதில்லை.அது தனது சொந்த விருப்பங்களினாலும் நகருகிறது " என்று குறிப்பிட்டிருந்தார். அவரது கருத்து நீதித்துறைக்கான சவாலை உணர்த்துவதாக இருந்தது. ஏனைய பேச்சாளர்கள் பகவாத்தின் உரையைக் காட்டிலும் கூடுதலான அளவுக்கு வரம்புகடந்தவையாக அமைந்திருந்தன. ஒரு சொத்து தகராறாக ஆரம்பித்த பிரச்சினை நீதிமன்றத்தின் நோக்கெல்லைக்கு அப்பால் ஒரு மத நெருக்கடியாக மாற்றப்பட்டிருக்கிறது.

         

அதேநேரத்தில், ஜனநாயக விரோத அலையொன்றும் நாடு பூராவும் பரவி வருகிறது. தாராளபோக்குடைய ஜனநாயகமல்ல, ஜனரஞ்சகவாதமே இந்திய அரசியல் சமுதாயத்தின் தன்மையை வரையறுக்கின்ற போக்கு அதிகரித்துக்கொண்டுவருகிறது.

             

கடுந்தீவிர தேசியவாதத்தின் குறுகிய பகட்டு ஆரவாரத் தேசியக் கொள்கை வடிவம் ஒன்று மக்கள் மத்தியில் ஆதரவுடையதாக மாறியிருக்கிறது.தொலைக்காட்சி விவாதங்களில், கலந்துரையாடல்களில் பங்கேற்பவர்களுடன் அரசியல்வாதிகள் கிரமமாக இத்தகைய ஆரவாரப்பேச்சுக்களில் ஈடுபடுவதைக்காணக்கூடியதாக இருக்கிறது.அதை முறைமை உடையதாகக்காட்டுவதில் பங்களிப்புச் செய்பவர்களாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் சிலரும் கலந்துரையாடல்களில் கலந்துகொள்கிறார்கள்.இது அரசியலமைப்பில் பேணப்படுகின்றதும் சுதந்திர இந்தியாவின் முதலாவது தலைமுறைத் தலைவர்களினால்  பெரிதும் நேசிக்கப்பட்டதுமான  தாராளவாத விழுமியங்களுடன் இணைந்ததான தேசப்பற்றுக்கு நேர் எதிரானதாகும்.

            

தற்போது சேவையில் இருக்கும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள்  சர்ச்சைக்குரிய உள்நாட்டு பிரச்சினைகள் மற்றும் வெளியுறவுக் கொள்கை விவகாரங்கள் தொடர்பில் பகிரங்கமாகக் கருத்து வெளியிடுகின்ற போக்கு ஜனநாயக விழுமியங்கள் அரித்துச் செல்லப்படுகின்றமையின் இன்னொரு வெளிப்பாடாகும்.அரசாங்கத்தையும்  எதிரணியையும் சேர்ந்த சிவிலியன் அரசியல்வாதிகளின் பிரத்தியேகமான களமாக விளங்கவேண்டிய விவாதங்களில் குறிப்பாக சட்டவிரோத குடியேற்றம், மற்றும் இந்திய - பாகிஸ்தான் உறவுகள் போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தொடர்பான விவாதங்களில் இராணுவ அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். முன்னையதொரு யுகத்தில்இவ்வாறு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிக்காது.ஏனென்றால் என்ன விலை கொடுத்தேனும் இராணுவ அதிகாரிகளுக்கு மேலான சிவிலியன் உச்ச உயர்நிலை மேலாண்மை பாதுகாக்கப்படவேண்டும் என்பதிலும் அரசியல் களத்தில் இருந்து இராணுவம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கவேண்டும் என்பதிலும் இந்தியக் குடியரசின் தாபகத்தலைவர்கள் மிகுத்த உறுதியாக இருந்தார்கள்.

              

இந்திய அரசியலின் தற்போதைய போக்கு அயல்நாடான பாகிஸ்தானின் முதல் தசாப்தத்தின் அரசியல் நிகழ்வுகளை அச்சவுணர்வுடன்  நினைவுபடுத்துகின்றது. மதரீதியான சகிப்புத்தன்மையின்மையினால் தூண்டிவிடப்பட்ட பெரும்பான்மையினவாதத்தின் தீவிரமும் அரசியல் களத்தில் இராணுவத்தின் படிப்படியான ஆர்வமும் இறுதியில்  1958 ஆம் ஆண்டில் முதலாவது இராணுவச் சதிப்புரட்சிக்கு வழிவகுத்தன.இது அடுத்தடுத்து தொடர்ச்சியான இராணுவ ஆட்சிகளைக் கொண்டுவந்தது. அத்தகைய ஒரு இராணுவ ஆட்சி  1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் பிரிவினையில் முடிந்தது.பின்னரான காலகட்டத்தில் 1980 களில்  உருவெடுத்த பயங்கரவாதம் இந்தியாவையும் ஆப்கானிஸ்தானையும் அச்சுறுத்திக்கொண்டிருப்பது மாத்திரமல்ல பாகிஸ்தானின் சமூகக்கட்டுமானத்தையும் கிழித்தெறியும் ஆபத்துடன் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

       

பாகிஸ்தானின் ஆரம்ப வருடங்களில் இழைக்கப்பட்ட தவறுகளின் விளைவாகத் தோன்றிய நிகழ்வுப்போக்குகளில் இருந்து அந்த நாடு ஒருபோதுமே மீட்சிபெறமுடியவில்லை.இன்று கூட அதற்கான விலையைப் பாகிஸ்தான் செலுத்திக்கொண்டேயிருக்கிறது. அதே பாதையில் இந்தியா போகாது என்று நம்புவோமாக.உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் அத்தகைய இருண்ட ஒரு எதிர்காலத்தைத் தாங்கமாட்டாது.

( இந்து)