அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் புஜாராவின் சதத்தின் துணையுடன் இந்திய அணி பெரும் சரவிலிருந்து மீண்டு 9 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை குவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அவுஸ்திரேலியாவுடன் மூன்று இருபதுக்கு 20 போட்டி, நான்கு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் இருபதுக்கு 20 தொடர் சமநிலையில் முடிவடைந்த நிலையில் இன்று அடிலெய்டில் இவ் விரு அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார். 

அதன்போடி இந்திய அணி சார்பாக முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு ஆடுகளம் புகுந்த கே.எல்.ராகுலும், முரளி விஜய்யும் சொற்ப ஓட்டத்துடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். ராகுல் 2 ஓட்டத்துடன் ஹேசல்வுட்டினுடைய பந்து வீச்சிலும், முரளி விஜய் 11 ஓட்டத்துடன் ஸ்டாக்கினுடைய பந்து வீச்சிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இவர்களின் வெளியேற்றத்தையடுத்து புஜார மற்றும் அணித் தலைவர் விராட் கோலி ஆகியோர் ஜோடி சேர்ந்தாட ஆரம்பிக்க விராட் கோலி 3 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து இந்திய அணியின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து ரகானே 13 ஓட்டத்துடனும், ரோஹித் சர்மா 37 ஒட்டத்துடனும், ரிஷாத் பந்த் 25 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேற இந்திய அணி 49.1 ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டத்தை பெற்றுக் கொண்டது. 

அதன் பின்னர் 6 ஆவது விக்கெட்டுக்காக புஜாராவும் அஸ்வினும் ஜோடி சேர்ந்தாடி வர புஜாரா 58.4 ஆவது ஓவரில் 4 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்களாக சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்ததையடுத்து இந்திய அணி 150 ஓட்டங்களை கடந்தது.

இவர்கள் இருவரும் இணைந்து தொடர்ந்தும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 189 ஓட்டங்களை 6 விக்கெட் இழப்பிற்கு பெற்றது. எனினும் 73 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் அஷ்வின் 25 ஓட்டத்துடன் பேட் கம்மின்ஸின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இவருக்கு அடுத்தபடியாக ஆடுகளம் நுழைந்த இஷாந் சர்மாவும் 4 ஓட்டத்துடன் ஸ்டாக்கினுடைய பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

இந் நிலையில் 84.2 ஆவது ஓவரில் பொறுமையாக ஆடிவந்த புஜாரா 7 நான்கு ஓட்டங்கள் அடங்களாக சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்து 123 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஆடுகளத்தில் மொஹமட் ஷமி 6 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக மிச்செல் ஸ்டாக், ஹேசல்வுட், பேட் கம்மின்ஸ் மற்றும் நெதன் லியோன் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 

நாளை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்.