உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் அவனுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெறும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் அவுஸ்திரேலிய அணியினர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுடன் இணைந்து குறித்த சிறுவனும் தற்போது அவுஸ்திரேலிய அணியின் சீருடை அணிந்து கொண்டு உற்சாகத்துடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றான்.  

ஆறு வயதுடைய ஆர்ச்சி ஷில்லர் என்ற மேற்படி சிறுவன் இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவனுக்கு 13 முறை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆக வேண்டும் என்பதே அவனது விருப்பமாக அமைந்துள்ளது. அவனது கிரிக்கெட் ஆவலையும் உடல் நலக்குறைவினையும் அறிந்துகொண்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஷில்லரை அவுஸ்திரேலிய அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கியுள்ளது. 

மெல்போர்னில் இடம்பெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டி வரை அவுஸ்திரேலிய அணி வீரர்களுடன் பயிற்சியில் தொடர்ந்தும் ஈடுபடவுள்ள ஷில்லர், விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்வதே தனது மிகப்  பெரிய இலக்கு எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.