வவுனியாவில் விபச்சாரம் காரணமாக அதிகமாக எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டு வருகிறது எனத் தெரிவித்த வவுனியா மாவட்ட பாலியல் நோய்த் தடுப்பு வைத்திய பொறுப்பதிகாரி கே.சந்திரகுமார், இதனால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி உலகம் பூராகவும் நினைவுகூரப்படுகிறது. அந்தவகையில் இலங்கையில் இம்முறை ஒவ்வொருவரும் தனக்கு எச்.ஐ.வி. உள்ளதா என பரிசோதனை செய்து அறிவதன் மூலம் 2025 ஆம் ஆண்டளவில் அதனை முற்றாக ஒழித்தல் என்னும் தொனிப் பொருளில் நடைபெறுகிறது.

வவுனியாவில் பாலியல் நோய் தடுப்பு பிரிவு எயிட்ஸ் விழிப்புணர்வு செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. 2003 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை வவுனியாவில் 20 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

அதில் 2018 ஆம் ஆண்டு ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதில் 7 பேர் மட்டுமே உயிருடன் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ச்சியாக மருந்து பாவிப்பதன் ஊடாகவே உயிர் வாழ்கின்றனர். 

இந்த எச்.ஐ.வி மூன்று முறைகளில் வேகமாக பரவுகிறது. எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களுடனான பாலியல் ரீதியான தொடர்புகள், எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களின் இரத்தம் பிறிதொரு நபருக்கு மாற்றுதல், எச்.ஐ.வி தொற்றுள்ள ஒரு அம்மாவுக்கு பிறக்கும் குழந்தை என்பவற்றின் ஊடாக வேகமாக பரவி வருகிறது. 

ஆனால், வவுனியாவை பொறுத்தவரை விபச்சாரம் காரணமாகவே எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனை இனங்காண ஓன்று  தொடக்கம் மூன்று மாதங்கள் தேவை. அந்த இடைவெளிக்குள் அவர்கள் மூலம் பலருக்கும் தொற்றி விடுகிறது எனத் தெரிவித்தார்.