ரஷ்ய - உக்ரெய்ன் கடல் மோதல் ; அச்சமூட்டும் நிலவரம்

Published By: Digital Desk 4

29 Nov, 2018 | 08:35 PM
image

கிழக்கு ஐரோப்பாவில் சர்ச்சைக்குரிய அசோவ் கடலில் 20 கடற்படை வீரர்களுடன் உக்ரெய்னின் மூன்று கடற்படைக் கப்பல்களைக் கைப்பற்றிய ரஷ்யாவின் நடவடிக்கை ஐரோப்பாவின் கிழக்கு வழித்தடங்களின் முரண்நிலை மீது சர்வதேச கவனத்தை மீண்டும் திருப்பியிருக்கிறது. 

இந்த சம்பவத்தையடுத்து பதற்றநிலை தீவிரமடைந்துகொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. உக்ரெய்ன் அரசாங்கம் இராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியிருப்பதுடன் கைதுசெய்யப்பட்டிருக்கும் கடற்படையினரை போர்க்கைதிகளாக நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறது. அதேவேளை,   ரஷ்யாவினால் இணைத்துக்கொள்ளப்பட்ட கிறிமியாவில் உள்ள நீதிமன்றமொன்று அவர்களை அதன் கடல் பிராந்தியத்திற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில்  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது.

கடற்படைக் கப்பல்கள் கேர்ச் நீரிணையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றன.  மாஸ்கோவுடன் செய்துகொள்ளப்பட்ட இருதரப்பு உடன்படிக்கையொன்றின் கீழ் அந்த நீரிணையில் ரோந்துசெய்வதற்கு தங்களுக்கு அதிகாரமளிக்கப்படடிருக்கிறது என்று உக்ரெய்ன் அரசாங்கம் வலியுறுத்திக் கூறியிருக்கிறது. ரஷ்யப் பெருநிலப்பரப்பை கிறிமியாவுடன் இணைக்கும் அந்த நீரிணைக்கு லோக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் புதிய பாலம் பிராந்தியத்தில் ரஷ்யாவுக்கு இருக்கக்கூடிய கூடுதல் கடடுப்பாட்டையும் செல்வாக்கையும் குறித்து விசனங்களைத் தோற்றுவித்திருக்கின்றது.

உக்ரெய்னை ஐரோப்பாவுடன் ஒன்றிணைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து 2013 நவம்பரில் தலைநகர் கீவின் மெய்டான் சதுக்கத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் ஐந்தாவது வருடாந்தத்துடன் நிகழ்வுப்பொருத்தமாக கடல் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. அந்த ஆர்ப்பாட்டங்களே 2014 இல் உக்ரெய்னின் கிறிமியா மீதான ரஷ்யப் படையெடுப்புக்கு முதற்காரணமாக அமைந்தது. அதன் விளைவாகத் தொடர்ந்த மோதலகளில் இதுவரையில் சுமார் 10 ஆயிரம் பேர் பலியாகியிருப்பதுடன் இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்தனர். நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.

2015 மின்ஸ்க் சமாதான உடன்படிக்கை விமானக்குண்டு வீச்சுக்களையும் பிரங்கித் தாக்குதல்களையும் தடைசெய்திருக்கிறது.ஆனால், தகராறு புகைந்தெரிந்துகொண்டு தீவிரந்தணிந்த மோதலாகத் தொடருகிறது. அதேவேளை, உக்ரெய்ன் -- ரஷ்ய நெருக்கடி சமய நிறுவனத்தில் உட்பூசல்களாகவும் விரிவடைந்திருக்கிறது.உக்ரெய்ன் மரபுத்திருச்சபை  ரஷ்ய மரபுத் திருச்சபையிடமிருந்து சுயாதீனமாக இயங்க அக்டோபரில்  அனுமதிக்கப்பட்ட செயல்  மாஸ்கோவின் கடும் கண்டனத்துக்குள்ளானது. அடுத்து உக்ரெய்னிடமிருந்து விலகிச்சென்ற தூரகிழக்கு பகுதிகளான  டொனெட்ஸ்க்கும் லுகான்ஸ்க்கும் தனியான பாராளுமன்றங்களையும் அரசாங்கங்களையும் தெரிவு செய்வதற்கு மாஸ்கோவின் ஆதரவுடன் இந்த மாதம் நடத்தப்பட்ட  தேர்தல்களை உக்ரெய்னும் முன்னணி ஐரோப்பிய வல்லரசுகளும் கண்டனம் செய்திருக்கின்றன. மின்ஸ்க் உடன்படிக்கையை மீறிய செயலாக தேர்தல்களை அமெரிக்கா சாடியிருக்கிறது.

வார இறுதியில் இடம்பெற்ற கடல் மோதலையடுத்து மேற்குலக நாடுகள் இராஜதந்திர நெருக்குதல்களை மீண்டும் தொடங்கியிருக்கின்றன.பதற்றத்தை தணிக்கும்  நடவடிக்கைகளில் மாஸ்கோவும் கீவும் உடனடியாக இறங்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையும் நேட்டோவும் கோரிக்கை விடுத்திருக்கின்றன.ஆனால், இந்த நடவடிக்கைகள் எல்லாம் பெரிய வல்லரசு நாடுகளுடனான விவகாரங்களில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நிலைப்பாடுகளைக் கடுமையாக்கியிருப்பதையே காணக்கூடியதாக இருக்கிறது.அத்துடன் கிறிமியா மீதான படையெடுப்புக்குப் பிறகு மேற்குலகினால் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் விளைவான இன்னல்கள் பிராந்தியத்தில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு உதவவில்லை.

கிரெம்ளினுடன்  இராஜதந்திர நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்துபவர்களுக்கும் ரஷ்யாவின் அரசியல் தலையீடுகளுக்கு எதிராக மேலும் கடுமையான தடைகள் விதிக்கப்படவேண்டும் என்று கோருபவர்களுக்கும் இடையே ஐரோப்பிய வல்லரசுகள் பிளவுபட்டுக்கிடக்கின்றன.ஆனால், முன்னாள் கிழக்கு ஐரோப்பிய மற்றும் சோவியத் யூனியன் நாடுகளுக்குள் நேட்டோ தொடர்ச்சியாக முன்னெடுக்கின்ற விஸ்தரிப்பு நடவடிக்கைகளினால் மாஸ்கோ ஆத்திரமூட்டப்படுவதை பலரும் விரும்பவில்லை.அமெரிக்க நிர்வாகத்தில் உள்ள கடும்போக்காளர்கள் பேச்சுவார்த்தையைக் காட்டிலும் மோதலையே விரும்புகிறார்கள் என்பது ஒன்றும் இரகசியமானதல்ல.ஆனால், மாஸ்கோவுடன் மிகவும் கூடுதலான அளவுக்கு ஊடாட்டத்தைச் செய்யவேண்டிய புவிசார் அரசியல் கட்டாயம் இப்போது இருப்பதைப் போன்று முன்னர் ஒருபோதும் இருந்ததில்லை.

அதேவேளை, தற்போது தீவிரமடைந்திருக்கும் பதற்றநிலை உள்நாட்டில் தங்களுக்கு மக்கள் செல்வாக்கு குறைந்து வருவதை மறைப்பதற்கு அல்லது அதிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்கு ரஷ்யாவினதும் உக்ரெய்னதும் தலைவர்களுக்கு உதவவும் கூடும். உக்ரெய்ன் ஜனாதிபதி அடுத்த வருடம் பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்கவேண்டியவராக இருக்கிறார். அத்தேர்தலில் அவர் தோல்வியைச் சந்திப்பார் என்றே பரவலாக எதிர்வு கூறப்படுகிறது.ஆனால், தொடருகின்ற நெருக்கடியின் விளைவான மனிதாபிமான நிலைவரம் துரித தீர்வொன்றைக் காண்பதில் தாமதம் காட்டப்படக்கூடாது என்பதையே உணர்த்துகிறது. 

( வீரகேசரி இணையத்தள வெளியுலக அரசியல் ஆய்வுக்களம் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48