இன்றைய நவீன உலகில் போக்குவரத்து என்பது மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. ஒரு நாட்டின் போக்குவரத்துறை எந்தளவுக்கு சிறப்பாக காணப்படுகின்றதோ அதனை வைத்து நாட்டின் அபிவிருத்தியை மதிப்பிட்டு கொள்ளலாம்.

போக்குவரத்து எவ்வளவுதான் சிறப்பாக காணப்படாலும் கூட தனி ஒரு நபருக்காக போக்குவரத்து சேவையை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்ற விடயமாகும்.

எனினும், மாணவி ஒருவருக்காக மாத்திரம் ஜப்பானில் ரயில் சேவை ஒன்று இயங்கி வருகின்றது.

கல்லூரிக்குச் செல்லும் குறித்த மாணவியை கல்லூரிக்கு காலை 7.4 மணியளவில் செல்வதற்கும் பின்னர் அங்கிருந்து அவரை 5.8 மணியளவில் அழைத்து வருவதற்காகவும் அந்த ரயில் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானின் வட பகுதியிலுள்ள தீவுகளில் ஒன்றான ஹொக்கைடொ (uokkaido) தீவிலுள்ள கமி-ஷிராட்டகி (Kami-Shirataki) ரயில் நிலையத்திலிருந்தே குறித்த ரயில் சேவை நடைமுறையில் உள்ளது.

1932 இல் ஆரம்பிக்கப்பட்ட 78.9 கிலோ மீற்றர் வரை இயங்கும் குறித்த ரயில் சேவையை ஆரம்பத்தில் பலர் பயன்படுத்தி வந்த போதிலும் பிரதேசம் மிகவும் பின்தங்கியதாகக் காணப்படுவதால் குறித்த ரயிலின் போக்குவரத்து பாதையில், பயணிக்கும் நபர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைவடைந்ததுள்ளது. 

இதனையடுத்து, ஜப்பானிய ரயில் திணைக்களத்தால், குறித்த ரயில் நிலையத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ஆயினும், குறித்த ரயில் சேவையை கல்லூரி மாணவி ஒருவர் ஒருவர் பயன்படுத்துவது தெரியவந்தது.

எனவே, குறித்த ரயில் சேவையை, அவர் தனது பட்டத்தை முடிக்கும் வரை தொடர அந்நாட்டு ரயில் திணைக்களம் தீர்மானித்தது.

அத்துடன், குறித்த மாணவியின் கல்லூரி நேரத்திற்கு அமைய, சேவை நேரத்தையும் மாற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாரம் அவர் தனது பட்டப்படிப்பை முடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் 26 ஆம் திகதி குறித்த ரயில் சேவையை மூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் CCTV யினால் இது குறித்த செய்திகள் வெளியிடப்பட்ட போதிலும் குறித்த மாணவி பற்றிய தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கல்விக்காக இவ்வாறு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் பாராட்டும் வகையில் கருத்துகளை வெளியிட்டுள்ள போதிலும், தனி நபர் ஒருவருக்காக இவ்வாறு பணத்தை விரயம் செய்வது ஏற்க முடியாது என பலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கருத்துகளை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.