பிரதமர் பதவிக்கு உரிமைகோரும் இருவரும் மெய்யான அரசியல் தெரிவின்றி தடுமாறும் இலங்கையும்

Published By: Digital Desk 4

22 Nov, 2018 | 04:03 PM
image

  ரோஹினி மோகன்

  கொழும்பில் லிபேர்ட்டி சினிமாவுக்கும் பிரமாண்டமான  கடைத்தொகுதிக்கும் முன்பாக போக்குவரத்துச் சுற்றுவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக தினமும் மாலைவேளையில் மக்கள் கூட்டமொன்று குழுமிநிற்கின்றது.

ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தமிழிலும் கையால் எழுதப்பட்ட சுலோகங்களைக் கொண்ட பதாகைகளை அவர்கள் வைத்திருக்கிறார்கள்.' இதற்காக நாம் வாக்களிக்கவில்லை ' என்று ஒரு பதாகையில் எழுதப்பட்டிருந்தது. '  ஜனநாயகம் விற்பனைக்கு அல்ல ' என்றது இன்னொரு பதாகை. அந்தக் கூட்டத்தவர்களில் சட்டத்தரணிகள், நாடக கலைஞர்கள், அனுபவம்வாய்ந்த அரசியல் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மாத்திரமல்ல, மாணவர்கள், கோர்ப்பரேட் ஊழியர்கள் மற்றும் மூத்த பிரஜைகளும் காணப்பட்டனர்.

      ' லிபேர்ட்டி ஆர்ப்பாட்டம் ( Liberty Protests ) என்று அது பெயரெடுத்திருக்கிறது. அது நடைபெறுகின்ற இடத்தின் காரணமாக அந்தப் பெயர் வந்திருந்தாலும் அதன் நோக்கத்திற்கும் கூட மிகவும் பொருத்தமானதாகவே இருக்கிறது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சகலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இரவோடிரவாக ஆட்சிமாற்றத்தைச் செய்த அக்டோபர் 26 முதல் இந்த லிபேர்ட்டி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுவருகிறது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவிநீக்கிய ஜனாதிபதி அவரின் இடத்துக்கு முன்னாள் ஜனாதிபதியும் தனது அரசியல் எதிரியுமான மகிந்த ராஜபக்சவை நியமித்தார்.இதே ராஜபக்சவை எதிர்த்துத்தான் நான்கு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கி வெற்றியும் கண்டார்.இலங்கை சுதந்திரத்துக்குப் பின்னரான 70 வருடகால வரலாற்றில் பல தடவைகள் கிளர்ச்சிகளையும் மூன்று தசாப்த உள்நாட்டுப் போரொன்றையும் சந்தித்திருக்கிறது.ஆனால், தற்போது இடம்பெற்றிருப்பதைப் போன்று மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கமொன்று சட்டவிரோதமாக வெட்கக்கேடான  முறையில் பதவிநீக்கம் செய்யப்பட்டதை அது கண்டதில்லை.

பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படவேண்டும் என்றும் எவருக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதோ அவர் அதை நிரூபிக்கட்டும் என்று லிபேர்ட்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினார்கள்.அதேவேளை, ராஜபக்சவின் பக்கத்துக்கு மாறுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 50 கோடி ரூபா வரை இலஞ்சம் வழங்குவதற்கு சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்வைந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சொன்னார்.தாங்கிக்கொள்ள முடியாத ஏற்றத்தாழ்வு மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் அவலப்பட்டுக்கொண்டிருக்கும் இலங்கையர்கள் இந்த நிலைவரங்களினால் பெரும் விரக்தியடைந்திருக்கிறார்கள்.

பெரும் நெருக்குதல்களை எதிர்நோக்கிய சிறிசேன 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு முதலில் இணங்கினார்.ஆனால், பிறகு அதைக் கலைத்துவிட்டு புதிய பாராளுமன்றத்  தேர்தலுக்கான அறிவிப்பைச் செய்தார். திகைத்துப்போன மற்றைய கட்சிகள் அந்த  கலைப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடி நீதி கேட்டன. பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி சிறிசேன பிறப்பித்திருந்த வர்த்தமானிப் பிரகடனத்தை இடைநிறுத்தம் செய்த உச்சநீதிமன்றம் பாராளுமன்றம் மீண்டும் கூடுவதற்கு அனுமதித்தது.பிரதமர் ராஜபக்ச தரப்பு எம்.பி.க்கள் சபைக்குள் கதிரைகளையும் புத்தகங்களையும் தூக்கிவீசியும் சபாநாயகர் மீதும் பொலிசார் மீதும் மிளகாய்த்தூள் கரைக்கப்பட்ட நீரை விசிறியும் காடைத்தனம் செய்ததற்கு மத்தியிலும் அவருக்கு எதிராக இரு தடவைகள் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டு குரல்வாக்கு மூலம் நிறைவேற்றப்பட்டன.ஆனால், அவற்றை ராஜபக்ச நிராகரித்தார்.'மக்களின் வாக்குகள்' தனக்கு இருக்கிறது என்று வலியுறுத்தும் அவர்  பதவியில் இருந்து இறங்குவதற்கு மறுக்கிறார். 

இன்று இலங்கையில் பிரதமர் பதவிக்கு உரிமைகோரும் இருவர் இருக்கிறார்கள்.ஆனால், மக்களுக்கு மெய்யான அரசியல் தெரிவு எதுவும் இல்லை.நவம்பர் 4 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட யுவதியொருவர் வைத்திருந்த பதாகையில் காணப்பட்ட சுலோகம் ஒன்று இலங்கையின் திரிசங்கு நிலையைப் பிரகாசமாக வெளிக்காட்டியது ; " மகிந்த ஒரு புற்றுநோய், ரணில் அதற்கு மருந்து அல்ல".

 அன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் சிவில் சமூகம், முஸ்லிம் ஒருமைப்பாட்டுக்குழுக்கள், மீனவ தொழிலாளர்கள்,  காணாமல்போனவர்களின் தாய்மார் மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் என்று பல தரப்பினரும் பங்கேற்றனர்.அது சுதந்திரத்துக்காக அழைப்பு விடுப்பது இலங்கையில் ஒன்றும் புதியதல்ல என்பதை நினைவுபடுத்துவதாக அமைந்தது.வன்முறைகள், ஊழல்மோசடிகள் அல்லது அலைக்கழிக்கும் வறுமையினால் மூலைக்குள் தள்ளப்பட்ட இந்தக்  குழுக்களில் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து பதவியில் இருந்த அரசாங்கங்களை எதிர்த்து நின்று தீர்வுகளைக் கோரிவந்திருக்கின்றன.

விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியுடன் சிறிசேன அணி சேர்ந்தபோது 2015 ஆம் ஆண்டில் நம்பிக்கை ஒளிக்கீற்று ஒன்று தென்பட்டது. காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதாகவும் இராணுவத்தால் பறிக்கப்பட்ட தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதாகவும் போர்க்குற்றங்களைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகின்ற அரசியல்வாதிகளையும் ஜெனரல்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் சீனாவுடன் நெருக்கத்தைக் குறைத்துக்கொண்டு மேற்குலகிற்கு அனுகூலமான முறையில் செயற்படுவதாகவும் இருவரும் சேர்ந்து உறுதியளித்தார்கள்.அரசியல் விந்தையொன்று நடக்கும் என்ற ஐக்கிய நாடுகளும் அயல்நாடான இந்தியாவும் இலங்கையின் தமிழ்ச் சமூகமும்  முஸ்லிம் சமூகமும்  ஆவலுடன் எதிர்பார்த்தன.

மக்கள் சிலவகை அரசியல் சுதந்திரங்களைப் பெறக்கூடியதாக இருந்தது.ஆனால், அரசியலமைப்புச் சீர்திருத்தச் செயன்முறைகள் நாளடைவில் முடங்கிப்போயின.ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் அதிகரித்தன.முற்றிலும் தனிப்பட்ட உணர்வுகளின் தூண்டுதலால் சிறிசேன அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்யத்தொடங்கினார்.அதாவது எந்த அதிகாரங்களை மட்டுப்படுத்தப்போவதாக  முன்னர் சூளுரைத்தாரோ அதே அதிகாரங்களைத் தனக்கு வசதியான முறையில் மட்டுமீறிப் பயன்படுத்துகின்ற ஒரு ஜனாதிபதியாக அவர் மாறியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

ஆனால், மக்கள் விக்கிரமசிங்கவையும் விரும்புவதாக இல்லை.தாங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்காக அல்ல, ஜனநாயகத்துக்காகவே போராடுவதாக லிபேர்ட்டி ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரகடனம் செய்கிறார்கள். காணாமல்போன 21 வயது இளைஞன் ஒருவனின் தாய் யாழ்ப்பாணத்திலிருந்து என்னுடன் தொலைபேசியல் பேசினார். மகனுக்கு நேர்ந்த கதியைக் கூறுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து நடத்திவரும் போராட்டத்தின் 700 வது  தினத்திலேயே அவர் என்னுடன் தொடர்பு கொண்டார்." ரணில் எனது மகனைத் தேடிக்கண்டுபிடித்துத் தரமாட்டார்.ஆனால், எனது தொண்டை கட்டிப்போகும்வரை நீதிகோரி நான் கோஷமெழுப்வாவது அவர் அனுமதிப்பார்.மகிந்தவின் கீழ் நானும் காணாமல்போய்விடுவேன் " என்று அவர் சொன்னார்.உண்மையான லிபேர்ட்டியை( சுதந்திரத்தை ) அந்தப் பெண்மணி பல தசாப்தங்களாக அனுபவிக்கவிலலை.ஆனால் அந்தச் சுதந்திரத்தை தன்னிடம் இருந்து திருடியவர்களை அவர் நன்கு அறிவார்.

ராஜபக்ச பதவிப்பிரமாணம் செய்த அரை மணித்தியாலத்துக்குள்ளாகவே இனிமேல் என்ன நடக்கப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகளைக் காணக்கூடியதாக இருந்தது.அவரின் குண்டர்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பத்திரிகை நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆசிரிய பீடங்களைத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தார்கள்.அரசாங்க வானொலி நிலையம்  இரவு பூராவும் நாட்டார் இசையை ஒலிபரப்ப நிர்ப்பந்திக்கப்பட்டது. நடந்தேறியதை " சட்டபூர்வமான சதிப்புரட்சி " என்று அவரின் ஆதரவாளர்கள் விசித்திரமான முறையில் உரிமைகோரிக்கொண்டார்கள்.

    மக்கள் செல்வாக்குடைய எதேச்சாதிகாரி என்பதற்கு ராஜபக்ச ஒரு  கச்சிதமான ' பாடநூல் ' உதாரணம்.முன்னர் ஜனாதிபதி என்ற வகையில் தனது இரு பதவிக்காலங்களின்போது தமிழ் குடிமக்களுக்கு எதிராக அப்பட்டமான போர்க்குற்றங்களைச் செய்ததன் மூலமாக நீண்டகால இனப்போரை அவர் முடிவுக்குக் கொண்டுவந்தார்.பட்டுப்போல் பளபளக்கும் நெடுஞ்சாலைகளையும் ஆட்கள்  காணாமல்போகின்ற  கலாசாரத்தையும் கொண்ட இராணுவ அரசொன்றை அவர் முன்னெடுத்தார்.முஸ்லிம் சமூகத்துக்கெதிராக சிங்கள பௌத்த சக்திகளின் தாக்குதல்களையும் அவர் தொடக்கிவைத்தார்.ஆனால், சீனாவுடனான ராஜபக்சவின் நட்புறவும் அவரது ஊழல்தனமான குடும்பத்தின் கடுமையான ஆதிக்கமும் அவரது அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராகவும் ஒரு மிகவும் குறுகிய காலத்துக்கு பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த சிறிசேனவை வெளியேற வைத்தன.விக்கிரமசிங்கவுடன் இணைந்துகொண்ட 2015 ஜனாதிபதி தேர்தலில் குறிப்பாக தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் ஆதரவுடன் வெற்றி பெற்றார்.ஆனால், சிங்களவர்களின் பெரும்பான்மை வாக்குகள் ராஜபக்சவுக்கே கிடைத்தன.சிங்கள பௌத்த மேலாதிக்கவாதம் கசிந்தொழுகுகின்ற தனது வசீகரப் பேச்சாற்றல் காரணமாக தனது குடும்ப அரசியல் ஆதிக்கத்தையும் ஊழலையும் அவரால்  மூடிமறைக்கக்கூடியதாக இருக்கிறது.

தற்போதைய அரசியல் நெருக்கடியில் விக்கிரமசிங்க சிலவேளை வெற்றி பெற்றாலும் கூட 2019 ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச வெற்றியடையக்கூடிய நிலைமையே காணப்படுகிறது. அவரால் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடமுடியாது. 

( 2015 ஆம் ஆண்டில் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட 19 வது திருத்தம் இரு பதவிக்காலங்களுக்கே ஒருவர் ஜனாதிபதியாக இருக்கலாம் என்ற மட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.) ஆனால், தனக்கு விசுவாசமான ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றிபெறச் செய்து பிறகு 2020 பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு ராஜபக்சவினால் வரமுடியும்.வியப்பைத்தரக்கூடிய புதிய போட்டி வேட்பாளரும் புதிய சிந்தனைகளும் வெளிக்கிளம்பாத பட்சத்தில், மக்களால் தெரிவுசெய்யப்படுகின்ற -- பெரும்பான்மைவாத கொடுங்கோலர்களின் உலக கழகத்துக்கு இலங்கையும் ஒரு உறுப்பினரை வழங்குவதாகவே நிலைவரங்கள் போய்முடியும்.

( பத்திரிகையாளரான ரோஹினி மோகன் The seasons of Troubles ; Life Amid the Ruins of SriLanka's Civil War என்ற நூலை எழுதியவராவார்)

 Courtesy : Hindustan Times 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54