உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புவரை சபைக்குள் காடைத்தனம் தொடருமா?

Published By: J.G.Stephan

19 Nov, 2018 | 09:59 AM
image

- வீரகத்தி தனபாலசிங்கம்

 
கடந்தவாரம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பாராளுமன்றத்திற்குள் நடந்தவை நாட்டு மக்கள் சகலரையும் கடுமையாகப் பாதித்திருக்கின்றன.பாராளுமன்ற செயற்பாடுகளை தொலைக்காட்சயில்  நேரடி ஒலிபரப்பு செய்யும் நடைமுறை இருப்பதால் எமது பாராளுமன்ற உறுப்பினர்களில் கணிசமான பிரிவினர் கடந்த வௌள்ளிக்கிழமை சபைக்குள் முன்னென்றும் இல்லாத வகையில் கட்டவிழ்த்துவிட்ட காடைத்தனத்தை நாட்டு மக்கள் முழுமையாகப் பார்க்கக்கூடியதாக இருந்தது. அந்த பாராளுமன்ற உறுப்பினர்களைத் தங்களது பிரதிநிதிகள் என்று இனிமேலும் அழைக்க மக்கள் விரும்பவேமாட்டார்கள். சபைக்குள் காடைத்தனம் செய்பவர்கள் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று கோருகின்ற தரப்பைச் சேர்ந்தவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மீண்டும் தேர்தல் நடைபெற்றால் இந்த ' பாராளுமன்றக் காடையர்கள் ' மக்களால் தெரிவுசெய்யப்படமாட்டார்கள் என்று எவராலும் துணிந்து கூறமுடியாது. அரசியல் குற்றச்செயல் மயப்படுத்தப்பட்டும் குற்றச்செயல் அரசியல் மயப்படுத்தப்பட்டும் பல தசாப்தங்கள் கடந்துவிட்டன. மாற்றமுடியாத ஒரு படுமோசமான அரசியல் கலாசாரத்துக்குள் வாழவேண்டிய துரதிர்ஷ்டம்.      

இன்று தீவிரமடைந்திருக்கும் அரசியல் நெருக்கடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளே முக்கிய காரணம் என்பதை எவரும் மறுதலிக்கமுடியாது. பாராளுமன்றத்தில்  பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைக்கொண்டிருக்கக்கூடிய எவரையும் பிரதமராக நியமித்து அவரை ஆட்சியமைக்குமாறு கேட்பதற்கான அதிகாரத்தை அரசியலமைப்பு ஜனாதிபதிக்கு வழங்குகிறது. இந்த அதிகாரத்தை ஜனாதிபதி சிறிசேன உகந்தமுறையில் பயன்படுத்தத் தவறியதன் விளைவே இன்றைய நிலைவரம். பிரதமராக இருந்துவந்த ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்குவதற்கு சிறிசேன தீர்மானிப்பதற்கு முன்னதாக அவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டாரா இல்லையா என்பதை முதலில் உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். ஆறு மாதங்களுக்கு முன்னர் தனக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை 46 பெரும்பான்மை வாக்குகளினால் விக்கிரமசிங்க தோற்கடித்தார் என்பதை ஜனாதிபதி நினைத்துப் பார்த்திருக்கவேண்டும். ஆனால், தனது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்த ஒருசில மணிநேரத்திற்குள்ளாகவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார் சிறிசேன.      

அக்டோபர் 26 நிகழ்வுகளையும் அடுத்துவந்த தினங்களில் இடம்பெற்றவையையும் அடிப்படையாகக்கொண்டு அகவுணர்வுக்கு அப்பால் சிந்திக்கும் எவரும் அரசியலமைப்புச் சதி அரங்கொன்று பலநாள் இரகசியத் திட்டமிடலுக்குப் பிறகு அரங்கேற்றப்பட்டிருந்தது என்பதை ஒத்துக்கொள்வர். இன்று இலங்கையில் மாத்திரமல்ல வெளியுலகிலும் இதுவே பரவலான அபிப்பிராயமாக இருக்கிறது. பாராளுமன்றத்தில் தனது புதிய பிரதமருக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கவில்லை என்று  சிறிசேனவுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது என்பதும் அமைச்சுப் பதவிகளையும் பணத்தையும் காட்டி மறுதரப்பிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை விலைபேசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவதற்கு கால அவகாசத்தைக்  கொடுப்பதற்காகவே பாராளுமன்றத்தை அவர் 19 நாட்களுக்கு இடைநிறத்தினார் என்பதும் தேவையான 113 உறுப்பினர்களின் ஆதரவை ராஜபக்ச தரப்பினரால் திரட்டமுடியவில்லை என்று உணர்ந்து கொண்டதும் பாராளுமன்றத்தைக் கலைக்கும் வரத்தமானிப் பிரகடனத்தை அவர் வெளியிட்டார் என்பதும் இப்போது பழைய கதை.

தனது பதவிநீக்கம் அரசியலமைப்புக்கும் ஜனநாயக நடைமுறைகளுக்கும் முரணானது என்று குற்றஞ்சாட்டி தானே இன்னமும் சட்டபூர்வமான பிரதமர் என்று அடம்பிடித்து அலரிமாளிகையை விட்டுவெளியேறாமல் இருந்துவரும் விக்கிரமசிங்க தனது பதவிநீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்குச் செல்லவிவல்லை. தனது விவகாரம் பாராளுமன்றத்திற்குள் தீர்த்துக்கொள்ளப்படவேண்டியது என்ற உறுதியான நிலைப்பாட்டைக்கொண்டிருந்த அவர் பாராளுமன்றக் கலைப்புக்கு எதிராக எதிரணிக் கட்சிகளுடனும் சிவில் சமூக அமைப்ப்புகளுடனும் சேர்ந்த உச்சநீதிமன்றத்தில் மனத்தாக்கல் செய்தார். கடந்த வாரம் உச்சநீதிமன்றம் பாராளுமன்றக் கலைப்பு வர்த்தமானியை இடைநிறுத்தம் செய்து பிறப்பித்த உத்தரவையடுத்து பாராளுமன்றத்தை  கடந்த புதன்கிழமை மீண்டும் கூட்டக்கூடியதாக இருந்தது.

தற்போதைய நெருக்கடியில் ஜனாதிபதியின் செயற்பாடுகளில் இருக்கும் அரசியலமைப்புக்கும் ஜனநாயக நடைமுறைகளுக்கும் முரணான அம்சங்களை சபாநாயகர் கரு ஜெயசூரிய சுட்டிக்காட்டியதையடுத்து நிறைவேற்று அதிகார பீடத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையே தகராறு மூளும்நிலை ஏற்பட்டது. பாராளுமன்றத்தை இடைநிறுத்திய ஜனாதிபதியின் உத்தரவையும் மீறி சபையைக்கூட்டுவது குறித்து சபாநாயகர் பரிசீலனை செய்துகொண்டிருந்த நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்ததால் அதற்கான தேவை ஏற்படவில்லை. இடைநிறுத்தத்துக்குப் பின்னர் சபையைக் கூட்டுவதற்கான தினம் என்று ஜனாதிபதியே அறிவித்த நவம்பர் 14 ஆம் திகதியே பாராளுமன்றம் கூடியது. அது கூடிய மூன்று நாட்களில் ராஜபக்ச அரசாங்கத்துக்கெதிராக ஜனதா விமுக்தி பெரமுனையினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையிலாப் பிரேரணை பெரும் அமளிதுமளிக்கு மத்தியில் குரல் வாக்கு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதை ராஜபக்சவின் அரசாங்கமும் ஜனாதிபதியும் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த இடத்திலேயே பிரச்சினை இப்போது வந்து நிற்கிறது.

            
பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை உகந்த நடைமுறைகளைப் பின்பற்றி வாக்கெடுப்புக்கு விடுவதன் மூலமாக அரசியல் நெருக்கடிக்கு முடிவொன்றைக்காணும் நோக்கில்  ஞாயிறு இரவு ஜனாதிபதி முன்னிலையில் கட்சித்தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளிலும் இணக்கமான தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. திங்கட்கிழமை மீண்டும் பாராளுமன்றம் கூடுகிறது. கடந்த வாரத்தைய காடைத்தனங்கள் இல்லாமல் சபை அமைதியாகக்கூடுவற்கு வாய்ப்பு இருக்குமா? அல்லது டிசம்பர் 5,6,7, ஆம் திகதிகளில் உச்சநீதிமன்றத்தில் பாராளுமன்றக்கலைப்புக்கு எதிரான மனுக்கள் முழுமையாக விசாரணைக்கு எடுக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு வரும்வரை பாராளுமன்றக் கூட்டங்களை நடத்தமுடியாத சூழ்நிலையை உறுதிப்படுத்த காடைத்தனம் தொடருமா? நாடு ஆளப்படமுடியாததாகிவிட்டது என்ற தோற்றப்பாட்டைக் காட்டுவதன் மூலம் புதிய தேர்தலுக்கு வழிவகுத்தால் தன்னால் பிரதமராக இலகுவாக மீண்டும் அதிகாரத்துக்கு வரமுடியும் என்றும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தனது புதிய கட்சியின் சார்பில் களமிறங்கக்கூடிய தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வெற்றிபெறக்கூடிய சூழ்நிலையை உறுதிசெய்துகொள்ளமுடியும் என்றும் மகிந்த ராஜபக்ச நம்புகிறார்.

 திங்கள் (19-11-2018) பாராளுமன்றக் கூட்டம் அடுத்துவரக்கூடிய நிகழ்வுப்போக்குகளுக்கு கட்டியம் கூறுவதாக அமையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21