ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் அனைவரும் ஒன்றிணைவோம் ;விக்னேஸ்வரன் 

Published By: Digital Desk 4

18 Nov, 2018 | 10:10 PM
image

ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் எம்மை ஒன்றிணைக்கும் பணியை தமிழ் மக்கள் பேரவையின் பிரமுகர்கள் மேற்கொள்வார்கள் என்று நம்புகின்றேன். என்னைப் பொறுத்த வரையில் தண்ணீர் கலந்த மிளகாய்த்தூளை யார் மேலுந் தெளிக்காது உங்கள் முடிவை மனமுவந்து ஏற்றுக் கொள்வேன்.என  தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

 கடந்த மாதம் 24 ஆம் திகதிய விசேட பெருங் கூட்டத்தின் பின்னர் இன்று கூடுகின்றோம். அன்று தமிழ் மக்கள் கூட்டணி என்ற அரசியல் கட்சியின் உருவாக்கம் பற்றி அறியத்தரப்பட்டது. அவ்வாறான உருவாக்கத்தின் பின்னரான சூழ்நிலை பற்றியும் தொடர்பு நிலை பற்றியும் இன்று பரிசீலிக்க வேண்டியுள்ளதாய் உள்ளது.

கட்சிகளின் சின்னங்கள் பல காலம் பாவிக்கப்படும் போது அவற்றுடன் அந்தந்தக் கட்சிகள் மேலுள்ள மதிப்பு, வெறுப்பு, எதிர்பார்ப்பு போன்றவை அடையாளப்படுத்தப்படுகின்றன. புதிதாக கொள்கை அடிப்படையில் அரசியலில் உள் நுழைவோர், அந்தந்தக் கட்சிகளின் சின்னங்களுடன் சேர்ந்து தேர்தலில் ஈடுபட்டால் அல்லது அவற்றின் கீழ் அடையாளப்படுத்தப்பட்டால் அந்தந்தக் கட்சி சின்னங்கள் சம்பந்தமாக மக்களிடையே இருக்கும் நம்பிக்கைகளும், அவ் நம்பிக்கைகளும் புதிய கட்சியின் மேலும் பதியும். 

அதன் பின்னர் சின்னத்தைத் தரும் அந்தக் கட்சியின் பொறுப்புக்களையும் இறந்த கால நிகழ்வுகளையும் புதிய கட்சி தாங்கிப் பயணிக்க வேண்டியிருக்கும். கொள்கைகளைப் பரப்ப வந்த நாங்கள் கடந்த கால கோபதாபங்களிற்கு ஆளாக நேரிடும். அதனால்த்தான் நாம் ஒரு பொதுவான சின்னத்துடன் அல்லது புதிய சின்னத்துடன் கொள்கைகள் சார்ந்து பயணிக்க வேண்டும் என்று எமது கட்சி பற்றி அபிப்பிராயம் தெரிவித்துள்ளேன்.

அடுத்து தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான எனது பொறுப்புக்கள் மீள் பரிசீலனை செய்யப்படவேண்டியுள்ளது. நான் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவராக இருந்த போதே தமிழ் மக்கள் கூட்டணி என்ற அரசியல் கட்சியின் ஸ்தாபகராகவும் செயலாளர் நாயகமாகவும் மாறியுள்ளேன். நான் தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவராக கடமையாற்றலாமா என்பதை உங்கள் பரிசீலனைக்கு விடுகின்றேன்.

எமது கட்சியின் அரசியல் குறிக்கோள்கள் பேரவையின் அரசியல் குறிக்கோள்களுக்கு மாறுபட்டதன்று. எமக்குள் நலவுரித்து முரண்பாடுகள் எழ வேண்டிய அவசியமில்லை. (Conflict of interests). ஆனால் பேரவையில் ஏற்கனவே இடம்பெற்றிருக்கும் கட்சிகளுக்கும் எமக்கும் கொள்கை அளவில் மாறுபாடுகள் இருக்கலாம். 

உதாரணமாக  சித்தார்த்தனின் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தே செயலாற்றி வருகின்றது. அதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை நான் ஏற்க முடியாததால்த் தான் நான் அதிலிருந்து வெளியேறினேன். அந்த வகையில் சித்தார்த்தனுடன் எமக்கு கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருக்கலாம். அதே போல் கூட்டமைப்பில் இணைந்திருக்கும் மற்றைய அரசியல் கட்சிகளின் நலங்களுடன் எமக்கு முரண்பாடுகள் எழக்கூடும். ஆனால் தமிழ் மக்கள் பேரவை என்ற மக்களின் கூட்டு சேர்ந்த இயக்கத்தில் இருந்து வெளிப்பட்டுள்ள தமிழ் மக்கள் கூட்டணி பேரவையுடன் கொள்கை ரீதியாக முரண்பாடுகளை எதிர்நோக்கக் காரணங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. 

அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனுசரணையுடன் முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளப்பட்ட நான் குறித்த பதவி முடியும் வரை தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவராகக் கடமையாற்றி வந்துள்ளேன். முரண்பாடுகள் எழவில்லை. அரசியல் முன்மொழிவுகள் அரசாங்கத்தின் முன் தமிழ் மக்கள் பேரவையினாலும் முன்வைக்கப்பட்டன. நான் அங்கம் வகித்த வடமாகாண சபையினாலும் முன்வைக்கப்பட்டன.

எது எவ்வாறு இருப்பினும் நான் தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவராகக் கடமையாற்றலாமா என்பது பற்றி நீங்களே தீர்மானிக்க வேண்டும். அடுத்து பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் கடந்த கால தேர்தல் செயற்பாடுகள் பற்றி ஆராய வேண்டியுள்ளதாக நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையுடன் ஒருமித்த கொள்கைகள் கொண்ட கட்சிகள் சில தமக்குள் முரண்பட்டுள்ள ஒரு நிலை இன்று காணப்படுகிறது. 

அவற்றைத் தீர்ப்பது அந்தந்தக் கட்சிகளின் சவாலும் பொறுப்பும் ஆகும். அந்த முரண்பாடுகளுக்கான காரணம் பொதுநலம் என எடுத்துக்காட்டப்பட்டாலும் கட்சி நலம் கலந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஆகவே தமிழ் மக்கள் பேரவையோ தமிழ் மக்கள் கூட்டணியோ அந்தக் கட்சிகளின் முரண்பாடுகளை தமக்குள் ஈர்க்க வேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது. அவர்களின் முரண்பாடுகளை மனதில் வைத்தே எமது கூட்டணி சுதந்திரமாகப் பொதுச்சின்னம் ஒன்றில் கட்சி அரசியலில் நுழையத் தீர்மானம் எடுத்துள்ளது. மற்றைய கட்சிகள் மற்றும் இயக்கங்கள் கொள்கை அடிப்படையில் எம்முடன் தேர்தல் உடன்பாடுகள் வைத்துக் கொள்ளலாம்.

எமது அங்கத்துவக் கட்சிகளின் முரண்பாடுகள் கொள்கை ரீதியானவையா கட்சி நல உரித்துக்கள் சம்பந்தப்பட்டவையா என்று நாம் பார்க்க வேண்டும். கட்சி நலவுரித்துக்கள் எம்மைக் கட்டுப்படுத்தாது. ஆனால் கொள்கை முரண்பாடுகள் எம்மை உள்ளீர்ப்பன. சில வேளைகளில் கொள்கைகள் ஒன்றாக இருக்க நடைமுறைச் செயற்பாடுகள் முரண்பாடுடையன என்று ஒரு கட்சி மற்றைய கட்சி பற்றி விமர்சிக்கக்கூடும். அவற்றைத் தீர்த்து வைக்க தமிழ் மக்கள் பேரவை அவர்களின் முரண்பாடுகளிடையே உள்நுழைய வேண்டும் என்பதில்லை. 

தனிப்பட்ட ரீதியில் பேரவையின் இணைத்தலைவர்களோ அங்கத்தவர்களோ அம் முரண்பாடுகளை நீக்க இரு சாராரினாலும் கோரப்பட்டார்கள் என்றால் அவற்றைத் தீர்க்க அவர்கள் முன்வரலாம். உதாரணத்திற்கு கஜேந்திரகுமாரின் கட்சிக்கும்  சுரேஷ் பிரேமச்சந்திரனின் கட்சிக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடுகளை நீக்க எமது இணைத்தலைவர் ஒருவர் முன்வரலாம். ஆனால் அது அந்த இணைத்தலைவரின் தனித்துவமான அவரின் ஏற்புடைத் தன்மையைப் பொறுத்து ஏற்கப்பட்ட கடமையாகவே இருக்கும்.

மூன்றாவதாக இன்று நாம் பரிசீலிக்கப் போவது அங்கத்துவக் கட்சிகளின் தேர்தல் செயற்பாடுகள் பற்றிய பேரவையின் கொள்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதாகும். அதனை நீங்களே தீர்மானிக்க வேண்டும். தமிழ் மக்கள் கூட்டணி தமிழ் மக்கள் பேரவையில் இருந்து வெளிவந்த ஒரு கட்சி. பேரவை உருவாக்கும் போது அன்று நடைமுறையில் இல்லாத கட்சி. மற்றைய கட்சிகள் பேரவையை உருவாக்க உதவி புரிந்த கட்சிகள். இவற்றுள் வேறுபாடு காட்ட வேண்டுமா என்பது உங்களைச் சார்ந்தது. இப்பொழுது கூட பேரவையில் அங்கம் வகிக்கும் பலரே கூட்டணியின் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக இருக்கின்றார்கள். உதாரணத்திற்குப் பேராசிரியர் சிவநாதனைக் குறிப்பிடலாம். இவை யாவும் பற்றி நாம் இன்று கலந்தாலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.

நாம் ஒற்றுமையுடனும் பரஸ்பர நம்பிக்கையுடனும் கட்சி பேதங்களைக் கடந்து இதுவரை காலமும் செயற்பட்டதன் விளைவாகவே தமிழ் மக்கள் பேரவையை எமது மக்கள் நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் பார்த்து வந்துள்ளார்கள். எமது இந்த ஒற்றுமைதான் ‘எழுக தமிழ்’ போன்ற பல காத்திரமான செயற்பாடுகளை நாம் கடந்த சில வருடங்களில் இயற்ற வழிவகுத்திருந்தது. இது தொடரவேண்டும். எமது ஒற்றுமையின் மூலம் நாம் செய்யவேண்டிய பல காரியங்கள் இருக்கின்றன. நாம் எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் அரசியல் நடவடிக்கைகளிலும் இந்த ஒற்றுமை நிலவவேண்டும் என்று எமது மக்கள் சார்பாக நான் எதிர்பார்க்கின்றேன்.

கடந்த காலங்களில் எமக்கிடையே சில கசப்பான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம். இது சிலர் மனதை புண்படுத்தி இருக்கலாம். சிலருக்கு ஏமாற்றம் அளித்திருக்கலாம். சிலர் மத்தியில் பல சந்தேகங்களையும் அவநம்பிக்கைகளையும் ஏற்படுத்தியும் இருக்கலாம். நான் அவற்றைப் புரிந்துகொள்கின்றேன். அவற்றில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் அதே தவறுகள் இடம்பெறாமல் நாம் எவ்வாறு எமது மக்களுக்கு சேவை செய்யப்போகிறோம், எவ்வாறு எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடையப்போகிறோம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு கடமையாற்ற வேண்டிய காலகட்டத்தில் நாம் இன்று நிற்கின்றோம். 

எமக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்திக் கொண்டு மீண்டும் மீண்டும் நாம் முரண்பட்டுக் கொண்டு சண்டையிட்டுக்கொண்டு எம்மை நாமே அழிக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட நாம் இனிமேலும் இடமளிக்கமுடியாது. சில சக்திகள் எம்முள் முரண்பாடுகளை முன்னெடுக்க மும்முரமாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நாம் மறத்தலாகாது. எமக்கு இடையிலான அரசியல் ரீதியான காழ்ப்புணர்வுகள் மற்றும் வன்முறையான முரண்பாடுகள் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்துக்கு எந்தளவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதை வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் இங்கு இருக்கும் எந்தவொரு கட்சிக்கும் பக்க சார்பாக செயற்படமுடியாது. தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு கட்சியும் தனித்துவம் மிக்கவை. அந்த நிலைக்கு ஏற்ப அரசியலை எவ்வாறு எதிர்கொள்வது என்று நீங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் குறுக்கே நிற்கமாட்டேன். அது உங்களைப் பொறுத்த விடயம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எமது மக்களின் பிரச்சினையைக் கையாண்ட விதத்தில் எனக்கு எள்ளளவும் உடன்பாடு இருக்கவில்லை. அவர்கள் கொள்கை பிறழ்ந்தார்கள் என்று நான் நம்பியதால் அவர்களுடன் முரண்பட்டு வெளியேறினேன். அதற்காக இன்றுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் அமைப்பின் மீதோ அதன் தலைவர் சித்தார்த்தன் மீதோ எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த வித கோப தாபங்களும் இல்லை. அரசியலில் நண்பர் சித்தார்த்தனின் அணுகுமுறை வேறாக இருக்கலாம். ஆனால் அவர் எனது நண்பர். என் மதிப்புக்குரிய ஒருவரின் மகன். அவருடன் இணைந்து பல வேலைகளை தமிழ் மக்கள் பேரவையில் நாம் எல்லோரும் முன்னெடுத்திருக்கின்றோம். அவரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்சி ரீதியாக கூறு போடும் வேலையை நான் செய்யமாட்டேன்.

அதேவேளை, கொள்கை ரீதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் முரண்பட்டு வெளியேறிய கட்சிகள் இங்கு இருக்கின்றன. அவர்களுடன் கொள்கை அடிப்படையில் ஒற்றுமையாக இணைந்து அரசியலில் செயற்படுவதே எனது விருப்பம்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளும் செயற்பாடுகளும் தமிழ் மக்கள் கூட்டணியுடன் முரண்படுவதால் நாம் சேர்ந்து மக்கள் முன்னிலையில் எமது கருத்துக்களை எடுத்துச் சொல்லி எமது கொள்கைகளுக்கு மக்களின் ஆதரவைப் பெற நாம் முயல வேண்டும் என்று கருதுகின்றேன். இந்த விதத்தில் தேசியக் கட்சிகளுடன் தற்பொழுது ஒரே கருத்துடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரே எதிர்மாறான கருத்துடைய ஒரு துருவக் கட்சியாக நாம் சேர்ந்து பயணிக்க வேண்டும். மாற்றுத் தலைமைத்துவத்தை உருவாக்கக் காலம் கனிந்துள்ளது. தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகளுடன் நாம் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டிய கடப்பாடு எமக்குண்டு.

நான் எந்தக் கட்சிக்கும் பக்க சார்பாக நின்று அவர்களின் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட முடியாது. இது எமக்கிடையிலான ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும். பிரிவினைகளை மேலும் ஏற்படுத்தும். தமிழ் மக்கள் பேரவைக்குள் பிளவை ஏற்படுத்தும். அதனால் தான், எந்தக் கட்சிக்கும் சார்பாகச் செயற்படாமல் ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுதி உள்ள எல்லோரையும் ஒன்றிணைக்கும் வகையில் தமிழ் மக்கள் கூட்டணியின் கீழ் போட்டியிட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே நிற்கும் EPDP தவிர்ந்த மற்றைய தமிழ்க் கட்சிகளை அழைக்கிறேன். மீண்டும் மீண்டும் எமக்குள்ளேயே குரோதங்களையும் விரோதங்களையும் வளர்த்துக்கொண்டு தொடர்ந்தும் எமக்குள் முரண்பட்டுக்கொண்டிருக்கும் நிலைமைகளுக்கு இடங்கொடாமல் எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை அடிப்படையில் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு ஊடாகத் தேர்தல் அரசியலை பயன்படுத்திக்கொள்வதற்கு என்னுடன் கைகோர்க்குமாறு அழைக்கிறேன்.

கொள்கை அடிப்படையில் நாம் ஒன்றாக செயற்படுவோம். எங்களுக்கிடையில் இருக்கின்ற முரண்பாடுகளை எமது மக்களின் நன்மை கருதி களைந்துகொள்ளுவோம். எமது கூட்டு வெற்றியை நம்பி செயற்படுங்கள். எம்முடன் ஒத்த கருத்துடைய யாவரும் இணையுங்கள். நாம் கொள்கையில் பற்றுறுதி கொண்டு செயற்படுவோம்.

அதேவேளை, ஒற்றுமை என்ற காரணத்துக்காக தவறுகளைக் கண்டும் காணாது இருந்துவிட முடியாது. எமது பயணத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் தவறுகளுக்கு நாம் இடம்கொடுக்க முடியாது. நான் தவறு விட்டால் அதனைச் சுட்டிக்காட்டி தக்க நடவடிக்கை எடுக்கும் கடமை உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. இதுவரையில் நடந்த எமது தவறுகளை மறப்போம், மன்னிப்போம். இதன் பின் நாம் ஒன்றாகக் கைகோர்த்து பயணிப்போம். ஆனால் இனிமேலும் தவறுகள் இடம்பெறாமல் இலட்சியத்தை மனதில் நிறுத்தி செயற்படுவோம். தவறுகளைத் தக்க முறையில் கையாள்வோம். ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் எம்மை ஒன்றிணைக்கும் பணியை தமிழ் மக்கள் பேரவையின் பிரமுகர்கள் மேற்கொள்வார்கள் என்று நம்புகின்றேன். என்னைப் பொறுத்த வரையில் தண்ணீர் கலந்த மிளகாய்த்தூளை யார் மேலுந் தெளிக்காது உங்கள் முடிவை மனமுவந்து ஏற்றுக் கொள்வேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27