மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், மனைவியின் வீட்டிற்கே சென்று அவரை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இந்தியாவின் தமிழகத்தில்  இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தின் திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரத்தை சேர்ந்த 24 வயதான  பார்வதிக்கும் 30 வயதான  ராஜ்குமார் என்பவருக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான  நிலையில் தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் கார் ஓட்டுனரான ராஜ்குமார் சில ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்த நிலையில் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் பார்வதி நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவிக்கிடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.

இதையடுத்து ஒரு மாதத்துக்கு முன்னர் ஏற்பட்ட சண்டையில், ஆத்திரமடைந்த ராஜ்குமார், பார்வதியை அவர் பெற்றோர் வீட்டில் விட்டார். இந்நிலையில் நேற்று இரவு பார்வதியை பார்க்க அவர் வீட்டுக்கு சென்ற ராஜ்குமார் அவருடன் பேசி கொண்டிருந்தார்.

பக்கத்து அறையில் பார்வதியின் தந்தை தங்கவேலும், தாய் ருக்மணியும் உறங்கிக் கொண்டிருந்தனர். இரவு 10.30 மணிக்கு ராஜ்குமார் பார்வதியுடன் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து ஆத்திரத்தில் தான் கொண்டு வந்திருந்த கத்தியால் பார்வதியை சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

பார்வதியின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் படுத்திருந்த பெற்றோர் ஓடி வருவதற்குள்.  ராஜ்குமார் அங்கிருந்து தப்பிவிட்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார் பார்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து பதுங்கியிருந்த ராஜ்குமாரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.