ஜனாதிபதிக்கு என்ன நடந்துள்ளது என என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. 

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை உலகில் எந்தவொரு இடத்திலும் பதிவாகவில்லை. எம்.பி.க்கள், அமைச்சர்கள் கட்சி மாறுவதை அறிந்திருக்கின்றோம். ஆனால் நாட்டின் தலைவர் கட்சி மாறி செயற்படுவதை எங்கும் கண்டதில்லை.

 நாட்டின் தலைவர் ஒருவர் எதிர்த் தரப்புடன் இணைந்து தனக்கு ஆதரவு தெரிவித்த தரப்புக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்வது வரலாற்றில் நமது நாட்டில் தான் பதிவாகியுள்ளது என்று ராஜித சேனாரட்ன தெரிவித்தார். 

தற்போதைய அரசியல் நெருக்கடி நிலை தொடர்பில் வழங்கிய விசேட செவ்வியிலேயே  அவர் இதனை குறிப்பிட்டார்.  

செவ்வியின் முழு விபரம் வருமாறு 

கேள்வி: நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பாகவும் ஜனாதிபதியின் நடவடிக்கைள் குறித்தும் கருத்து தெரிவிக்க கூடிய, தகுதியான நபர் ஒருவருரே நீங்கள். உண்மையில் என்ன நடந்தது?

பதில்: நாட்டில் நடந்தவவை தொடர்பில் கதைக்கக் கூடிய தகுதியான நபராக நான் இருந்தேன். ஆனால் ஜனாதிபதி அண்மைக்காலமாக எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் கதைப்பதற்கு எனக்கு எந்த தகுதியும் இல்லை. ஜனாதிபதிக்கு என்ன நடந்துள்ளது என என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை உலகில் எந்தவொரு இடத்திலும் பதிவாகவில்லை. எம்.பி.க்கள், அமைச்சர்கள் கட்சி மாறுவதை அறிந்திருக்கின்றோம். ஆனால் நாட்டின் தலைவர் கட்சி மாறி செயற்படுவதை எங்கும் கண்டதில்லை. 

நாட்டின் தலைவர் ஒருவர் எதிர்த்தரப்புடன் இணைந்து தனக்கு ஆதரவு தெரிவித்த தரப்புக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்வது வரலாற்றில் நமது நாட்டில் தான் பதிவாகியுள்ளது. 

கேள்வி: 2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இருந்து நீங்களும் ஜனாதிபதியும் விலகி வந்தது மிகப்பெரிய பிரச்சினைக்குரிய தீர்மானமாகும். இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தற்போது எடுத்துள்ள தீர்மானங்களும் பாரிய பிரச்சினைக்குரியவை தானே?

பதில்: ஜனாதிபதியை பலமுறை தாக்குவதற்கு மஹிந்த ராஜபக்ஷ முயற்சி  மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்தே அவரின் அரசாங்கத்தில் இருந்து விலகி வந்தோம். மேலும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தால் ஆறடி குழிக்குள் தன்னை கொண்டு செல்ல மஹிந்த தீர்மானித்துள்ளார் எனவும் கூறினார். 

ஒருபோதும் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து அரசியல் செய்யமாட்டேன் என்றார். ஆனால் இன்று ஜனாதிபதி மைத்திரிபால செயற்படும் விதம் தொடர்பில் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

கேள்வி: ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுக்க என்ன காரணம் என நினைக்கின்றீர்கள்?

பதில்: கடந்த கால ஊழல்கள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் முறையாக இடம்பெறவில்லை. இந்த வழக்கு விசாரணைகளுக்கு ஒருபோதும் முடிவு கிடைக்காது. ஐந்து வருடங்கள் முடிவடைந்து ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும்.

இந்த தேர்தலில் மைத்திரி தோல்வியடைந்தால்  மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆட்சி சென்றுவிடும். இதனையடுத்து மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக உள்ள முறையற்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சிறை செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும். இதற்கு அஞ்சியே ஜனாதிபதி தற்போது இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கலாம்.

ஜனாதிபதி இவ்வாறான தீர்மானங்களை எடுப்பதற்கு நான் அறிந்த வகையில் வேறு எந்த அரசியல் பின்னணியும் இல்லை.

கேள்வி: ஜனாதிபதியுடன் நெருக்கமாக இருந்தவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு இதுதான் காரணம் என்கின்றீர்களா?

பதில்: ஆம். வேறு ஏதாவது  அரசியல் பின்னணி தொடர்பான பிரச்சினை இருந்திருந்தால் அது தொடர்பில் ஜனாதிபதி என்னுடன் கலந்துரையாடியிருப்பார். அவருடைய குடும்பப் பிரச்சினை காரணமாகவே இதுதொடர்பில் அவர் என்னும் எதையும் கதைக்கவில்லை. 

கேள்வி: சுதந்திரக் கட்சி வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றது. எனவே வரலாற்றில் தனது பெயருக்கு அவதூறு ஏற்படாமல் இருக்க    இவ்வாறான தீர்மானங்களை எடுத்ததாக கூறப்படுகின்றதே?

 பதில்: இல்லை. சரியான முறையில் கையாண்டிருக்கலாம். ஐக்கிய தேசிய முன்னணி, சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்து சரியான முறையில் செயற்படுமாறு கூறினேன். கட்சியின் தலைவர் என்ற வகையில் தற்போது செயற்படுவது போன்று அன்றும் செயற்பட்டிருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது.

கேள்வி: பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: இது வரலாற்று ரீதியான முடிவாகும். நீதிமன்றில் அறிவித்தல் வருவதற்கு முன்னர் நமது நாடு தொடர்பில் தவறான நிலைப்பாடு காணப்பட்டது. 

அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளாத, நீதி தர்மத்தை நிலைநாட்டாத மிலேச்சத்தனமான நாடாக இலங்கை காணப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பின் மூலம் இலங்கையில் அந்த கறுப்பு புள்ளி (தவறான நிலைப்பாடு) அகற்றப்பட்டுள்ளது. சிலர் சர்வதிகாரமாக செயற்பட்டாலும் கூட நீதித்துறை சுயாதீனமாக தான் செயற்படுகின்றது. நீதிமன்றின் அறிவிப்பு மூலம் நாடு இன்னமும் அதலபாதாள நிலைமைக்கு செல்லவில்லை என்பது புலப்படுகின்றது.  நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புக்கு நாம் எமது தாய் நாடு சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கின்றோம்.

கேள்வி: இது தொடர்பான இறுதி தீர்ப்பு எவ்வாறு அமையும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்: இறுதி தீர்ப்பு இந்த விடயங்களுடன் தொடர்புபட்டதாகவே இருக்க வேண்டும். ஜனாதிபதி அரசியல் அமைப்புக்கு முரணாக தான் பாராளுமன்றத்தை கலைத்துள்ளார் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. மீண்டும் பின்னோக்கி சென்று நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்காது. எனவே இது தொடர்பில் எவ்வாறான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என அறிவிப்பார்கள்.

கேள்வி: .அடுத்து என்ன நடக்க வேண்டும்? 

பதில்: மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றில் பெரும்பான்மை பெற்ற ஒருவரே பிரதமராக பதவி வகிக்க முடியும். இதன் அடிப்படையில் மஹிந்தவின் பிரதமர் பதவி காலாவதியடைகின்றது. மஹிந்தவால் தொடர்ந்து பிரதமர் பதவியை வகிக்க முடியாது என்பதை அறிந்த சபாநாயகர் வாக்கெடுப்பின் இறுதி தீர்மானத்தை அறிவிப்பதற்கு முன்னர், மஹிந்த ராஜபக்ஷ சபையை விட்டு வெளியேறினார்.

கேள்வி: மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகாவிட்டால்..?

பதில்: அப்படியாயின் நாட்டில் நீதிக்கு புறம்பான அரசாங்கமே அமையும். நீதிக்கும் புறம்பான ஜனாதிபதியே காணப்படுவார். இந்நிலைமை ஏற்படும் என்றால் அதற்கு எதிராக மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

கேள்வி: ஆரம்பத்தில் ஜனாதிபதியுடன் ஒன்றாக இருந்த நீங்கள்  பின்னர் அவரிடம் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து விட்டீர்களா?

கேள்வி: ஐக்கிய தேசிய முன்னணி சார்பிலேயே தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்தேன். அவ்வாறு இருக்கும் போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் தான் இணைந்து செயற்பட வேண்டும். 

மேலும் நாம் மஹிந்த அரசாங்கத்தில் இருந்து விலகி வந்த சம்பவத்துக்கு பின்னர் ஜனாதிபதி என்னை சந்தித்து, இந்த அரசாங்கத்தில் என்னை காப்பாற்றியவர்களில் உங்களைத் தவிர வேறு ஒருவரும் இல்லை என்றார். நான் எடுத்த நடவடிக்கைகளுக்கு நீங்கள் தான் எனக்கு பாதுகாப்பும் வழங்கினீர்கள். நீங்கள் எனது சகோரதன் போன்றவர் என கூறினார்.  இதன்மூலம் எனது பொறுப்புகள் என்னவென்று அவர் அறிந்துவைத்துள்ளார். இவ்வாறு ஒன்றாக இருந்தவர் என்னிடம் எதையும் கூறவில்லை.

எனது சிறிய மகனை பதுக்கி வைத்தே தேர்தலுக்கு முகம்கொடுத்தேன். தேர்தல் பெறுபேறுகள் எமக்கு சார்பாக இருந்த போதே சுமார் ஒன்றரை மாதங்களின் பின்னர் எனது மகனின் முகத்தை நேரில் கண்டேன். 

இதேபோன்று ஜனாதிபதியும்  தேர்தலின்போது  இரண்டு பிள்ளைகளையும், மனைவியையும் தலைமறைவாக வைத்திருந்தார். இந்த நிலைமையிலேயே மஹிந்த ராஜபக்ஷவுடன் போராடி தேர்தலை வெற்றிக்கொண்டோம். ஆனால் மஹிந்தவுடன் இணைந்துகொண்டு எமது அமைச்சை நீக்கியுள்ளார். மேடைகளில் பிரசாரம் செய்கின்றார். எமக்குள்ள அரசாங்க வாகனங்களை பறிக்கின்றார். நாங்கள் போராடி பெற்றவை இவை. இன்று தனியாக அனுபவிக்கின்றார்.

கேள்வி: 26 ஆம் திகதி அரசியல் மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதியை சந்தித்து என்ன கலந்துரையாடினீர்கள்?

பதில்: இந்த அரசியல் நெருக்கடியை இதற்கு அப்பால் எவ்வாறு நல்ல முறையில் தீர்த்துகொள்ளலாம் என்பது தொடர்பாக கலந்துரையாடினேன். மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடி நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுகொள்ளுமாறு அறிவுரை வழங்கினேன்.  அனைத்தையும் மறந்து அனைவரும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்போம் என ஆலோசனை வழங்கினேன். 

கேள்வி: ஏன் முடியாமல் போனது?

பதில்: எமது பக்கத்தில் இருந்த நபர் ஒருவர் கட்டுக்கதைகளை ஊடகவியலாளர் ஒருவரிடம் கூறியுள்ளார். அந்த ஊடகவியலாளரும் பொய்யான தகவல்களை சேர்த்து செய்தியை வெளியிட்டார். இதனைப் பார்த்து ஜனாதிபதி குழப்பமடையவில்லை. மாறாக மஹிந்த ராஜபக்ஷ அதிருப்தியடைந்துவிட்டார். இதனையடுத்து மீண்டும் என்ன செய்ய முயற்சிக்கின்றீர்கள் என என்னை சாடினார். இரண்டு பக்கமும் தனதுக்கு ஆதரவு இல்லாமல் போய்விடும் என பயந்து மீண்டும்   தேசிய அரசாங்கம் அமைப்பதிலிருந்து ஜனாதிபதி விலகிக்கொண்டார்.

கேள்வி: நீங்கள் விரக்தியடைந்துள்ளீர்களா?

பதில்: ஆம். இந்த நடவடிக்கைகளினால்  நான் கடுமையாக  விரக்தியடைந்துள்ளேன்.

கேள்வி: மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவாராயின் நீங்கள் அவர்களுடன் இணைந்து செயற்பட தயாரா?

பதில்: நிச்சயமாக இணைந்துசெயற்படுவேன்.

கேள்வி: விரக்திநிலையில் உள்ளதாக குறிப்பிட்டீர்களே?

பதில்: விரக்தி நிலை ஒருபுறத்தில் இருக்க, எவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட முடியும் என ஜனாதிபதி கூடி கலந்துரையாட வேண்டும். இதற்கான தீர்வும் என்னிடம் உள்ளது. 

அவருடன் கலந்துரையாடுவதன் மூலம் அதனை தெரிவிக்கலாம். அவருடன் எந்தவொரு விடயத்தையும் கதைகக்காமல் இருந்ததில்லை.

கேள்வி: மீண்டும் பிரதமராக ரணில் பதவியேற்றால் ஜனாதிபதியுடன் பயணிக்க முடியும் என நீங்கள் நம்புகின்றீர்கள்..?

பதில்: ஆம். கட்டாயம் முடியும். எமக்கு ஏற்றாற் போல் அனைத்தையும் அமைத்துக்கொள்ள வேண்டும்.

கேள்வி: இதற்காக முன்னின்று செயற்பட விருப்பமா?

பதில்: ஆம். அதற்கு தயாராகவே இருப்பதோடு விருப்பத்தோடும் இருக்கின்றேன்.

கேள்வி: இந்த அரசியல் நெருக்கடி தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் கலந்துரையாடினீர்களா?

பதில்: இல்லை. அவரை சில சந்தர்ப்பங்களில் சந்தித்திருந்தேன். ஆனால் இதுதொடர்பில் கலந்துரையாடவில்லை. 

கேள்வி: சந்திரிக்காவுடன் சேர்ந்து எந்த திட்டத்தையும்  வகுக்கவில்லையா?

பதில்: அவ்வாறு ஒன்றும் இல்லை. 

கேள்வி: ஜனாதிபதிக்கு யார் ஆலோசனை வழங்குகின்றார்கள் என தெரியுமா?

பதில்: ஜனாதிபதி ஏன் இவ்வாறான தீர்மானங்களை எடுத்தார் என தெரியவில்லை.  அருகில் இருந்தவர்களும் அறியவில்லை என்கின்றனர். மாறாக தனியாக தான் அந்த தீர்மானங்களையும் எடுத்தார் என்கின்றார்கள்.

கேள்வி: நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: தனியாக தீர்மானம் எடுத்தால் இவ்வாறான நிலைமைதான் ஏற்படும். தன்னிச்சையான தீர்மானத்தால் நாட்டை சரியாக வழிநடத்த முடியாது. 

கேள்வி: மீண்டும் பாராளுமன்றை ஜனாதிபதியால் ஒத்திவைக்க முடியுமா?

பதில்: முடியும். 

கேள்வி: இது சரியாக இருக்குமா? 

பதில்: ஒழுக்கமற்ற விடயமாகும். நடந்த விடயங்கள் அதைத்துமே ஒழுக்கத்துக்கு விரோதமானவையாகும். 

கேள்வி: ரணில் விக்கிரமசிங்கவை ஒருபோதும் பிரதமராக  மீண்டும் நியிமிக்கமாட்டேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளாரே? அவ்வாறு ரணில் மீண்டும் பிரதமராக பதவியேற்றால் தான் இரண்டு மணித்தியாலங்களில் பதவி விலகுவேன் என்றும் கூறியுள்ளாரே?

பதில்: இதுபோன்று தான் கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவுடன் சேர்ந்து ஒருபோதும் அரசியலில் ஈடுபடமாட்டேன் என ஜனாதிபதி கூறியிருந்தார். ஆனால் தற்போது என்ன நடக்கின்றது. அவருடன் இணைந்து செய்படுகின்றார்.

கேள்வி: ரணிலை தவிர வேறுஒருவரை பிரதமராக நியமிப்பேன் என்று கூறியிருந்தாரே?

பதில்: ஏன் அப்போது மஹிந்த ராஜபக்ஷ தரப்பிடம் மஹிந்தவை தவிர வேறு ஒருவரை பிரதமராக நியமிப்போம் என கூறவில்லை. அங்கு அவ்வாறு செயற்பட முடியுமென்றால் ஏன் ரணிலை பிரதமராக்க முடியாது.

கேள்வி: அவ்வாறு முடியுமா?

பதில்: முடியும். அன்று வீதியில் இறங்கி போராடிய அப்பாவி மக்கள் வழங்கிய  ஆதரவின் பெறுமதியை புரிந்துகொள்ள வேண்டும்.

கேள்வி: தற்போது கூட ஜனாதிபதி உங்களுடன் சேர்ந்து செயற்பட முடியும் என்று கருதுகின்றீர்களா? 

பதில்:  அவர் . எம்மோடு கைகோர்ப்பதை தான் அனைவரும் விரும்புகின்றார்கள்.

கேள்வி: இந்த அரசியல் நெருக்கடி காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய பங்களிப்பை உங்களுக்கு வழங்கியிருந்தது. அவர்களுக்கு நீங்கள் வழங்கும் பிரதி உபகாரம் என்ன?

பதில்: தேசிய அரசியல் பிரச்சினைக்கு தீர்வை காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தது. தமது இனத்துக்காக மாத்திரம் வேறுப்பட்டு காணப்பட்ட வடக்கு அரசியல்வாதிகள் தேசிய அரசியல் பிரச்சினைக்கு ஒன்று கூடியமை வரவேற்க கூடிய விடயமாகும். இது எதிர்காலத்திற்கு நல்ல சமிக்ஞ்னையாகும்.

கேள்வி: இது எதிர்காலத்தில் எவ்வாறு அமையும்?

பதில்: இந்த சகோதரத்துவம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்ட செல்லும். காலப்போக்கில் எமது உறவு இறுகிய பாறை போன்றதாகிவிடும். 

கேள்வி: முஸ்லிம் காங்கிரஸின் பங்களிப்பு தொடர்பில் கூறமுடியுமா?

பதில்: நிச்சயமாக கூறலாம். ஹக்கீம், ரிசாத் ஆகியோர் ஒன்றிணைந்து தேசிய அரசியல் பிரச்சினைக்கு தீர்வைப்பெற பூரண ஆதரவை வழங்கியிருந்தார்கள். இதனை நாம் மறந்துவிட முடியாது.

கேள்வி: ரணிலை மறைமுகமாகவாவது  பாதுகாப்பதற்காக ஜே.வி.பி.யினர் இதுபோன்ற  முயற்சியை எடுப்பார்கள் என எதிர்பார்த்தீர்களா?

பதில்: ஜே.வி.பி. யினர் இப்போது ஜனநாயகத்துக்காக குரல்கொடுகின்றார்கள். என்னை அவர்கள் விமர்சித்தாலும் பாராளுமன்றில் ஜனநாயக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.  

கேள்வி: மீண்டும் ஜனாதிபதியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் உங்கள் கேள்வி  என்னவாக இருக்கும்?

பதில்: தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வை பெற்றுக்கொள்ள அவருக்கு உதவி செய்வேன். ஆலோசனை வழங்குவேன். 

கேள்வி: அவருக்கு உதவி செய்து அவருடன் பயணிக்க தயாராக இருக்கின்றீர்களா?

பதில்: ஆம். அதற்கான திறமை என்னிடம் உள்ளது. 3 நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியை சந்தித்த சிலரிடம், மீண்டும் ரணிலை இந்தப் பக்கம் அழைத்துவர வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் ரணில் விக்கிரமசிங்கவை   சந்திக்க என்னிடம்  இணக்கம் தெரிவித்தார். எனவே எனக்கு அந்த திறமை இருக்கின்றது. சிலர் குழப்பியடித்தமை காரணமாகவும் ஜனாதிபதியால் சரியாக பயணிக்க முடியாமல் போய்விட்டது.

கேள்வி: ராஜித சேனாரத்தன தற்போது எந்த கட்சி? எதிர்காலத்தில் எந்த கட்சியில் இடம்பெற போகின்றார்?

பதில்: நான் இன்னமும் ஐக்கிய தேசிய முன்னணியில் தான் இருக்கின்றேன். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டு கொண்டிருக்கின்றேன். எதிர்காலத்தில் பரந்தளவிலான ஒரு கூட்டணியை அமைக்க உள்ளோம். இந்த கூட்டணியில் இணைந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்போம். சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் இணைந்துகொள்ளலாம். 

கேள்வி: ராஜித சேனாரத்ன ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகினவே?

பதில்: சூழ்நிலை சந்தர்ப்பங்களே பொறுத்தே இவை அமையும். சந்தர்ப்பங்கள் அமையும் போது தீர்மானிக்கலாம். கடந்த 2014 ஆம் ஆண்டும் ஜனாதிபதி வேட்பாளராக என்னை போட்டியிடுமாறு ரணில் விக்கிரமசிங்க கேட்டுகொண்டார். நான் மைத்திரியை ஜனாதிபதி வேட்பாளராக இனம்காட்டினேன். இதுபோன்று நாளை என்னிடம் வந்து ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்தால் நான் தகுதியானவன் என்றால் நான் கட்டாயம் போட்டியிடுவேன். 

கேள்வி: ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்கவுடன் முரண்பட்டே விலகி சென்றீர்கள்? தற்போது ரணிலை தலைமைத்துவத்தில் இருந்து விலகுமாறு தகவல்கள் கசிந்துள்ளதே. உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: ரணில் விக்கிரமசிங்கவுடன் எனக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்ததில்லை. விடுதலைப் புலிகள் இயத்தை தோற்கடிப்பது தொடர்பான முரண்பாடு காரணமாக அன்று ரணில் விக்கிரமசிங்கவுடன் இருந்து விலகி சென்றேன். எனது நாட்டை பயங்கரவாதிகளிடம் இருந்து விடுவிக்க நான் பிரிந்து சென்றேன். அங்கு சென்று போராடி நான் வெற்றி பெற்றேன். நான் கடந்த காலங்களில் எடுத்த நடவடிக்கைகளில் தோல்வியடைந்த சரித்திரம் இல்லை. இதேபோன்று மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கவும் போராடினேன். தமிழ் மக்களின் அடிப்படை உரிமை தொடர்பான பிரச்சினை உச்சமடைந்தது. இதனையடுத்து அங்கிருந்து வெளியேறி மைத்திரிபாலவை ஜனாதிபதியாக்கி எமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்தோம்.

நாட்டில் சமாதானம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த போராடினோம். ஊடகங்களின் உரிமை, மக்களின் உரிமைக்காக போராடினோம். இதிலும் வெற்றிபெற்றோம். இவ்வாறு போராடி பெற்ற ஜனநாயக உரிமைகளை, பெற்றுகொடுத்த நபேரே அவற்றை  அழித்துகொண்டிருக்கின்றார். எனவே இதற்கு எதிராக நான் மீண்டும் போராட்டத்தில் குதிப்பேன். 

கேள்வி: ஐக்கிய தேசிய முன்னணியில் ரணில் விக்கிரமசிங்கவா பிரதமர் பதவிக்கு தகுதியானவர்?

பதில்: தற்போதைய நிலைமையில் பாராளுமன்ற தேர்தல் ஒன்றும் நடைபெறபோவதில்லை. இருக்கும் நபருடன் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். தற்போது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி அனைத்தையும் நாசமாக்கி விடமுடியாது. போட்டி வரும் போது யார் தகுதியானவர்என தீர்மானிப்போம்.

கேள்வி: 26 ஆம் திகதி பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் தமிழ் மக்கள் மறக்கப்பட்டுள்ளனர் போல் தெரிகின்றதே  

பதில்: தமிழோ சிங்களமோ. முதலில் நாடு நல்லமுறையில் இருக்க வேண்டும். முதலில் நீதி, அரசியல்அமைப்பு, ஜனநாயகம் நாட்டில் நிலவ வேண்டும். இவை அனைத்தும் சக இனத்திற்கும் பொதுவானவையாகும். இந்த அரசியல் நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தை வெற்றிக்கொள்ளாமல் எவ்வாறு தமிழ் மக்களின் உரிமை தொடர்பில் கதைக்க முடியும். தமிழ் மக்களின் உரிமை இதில் பகுதியாகும்.

கேள்வி: அரசியல் நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக்கொண்டதன் பின்னர் தமிழ் மக்களின் உரிமை தொடர்பில் அவதானம் செலுத்துவீர்களா?

பதில்: நிச்சயமாக அது நடக்கும். இறுதி முடிவு இதுவாகத்தான் இருக்கும்.

( நேர்காணல் - ரொபட் அன்டனி )