(எம்.மனோசித்ரா)

சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களின் சுதந்திரக் கட்சி உறுப்புரிமை தொடர்பில் மத்திய செயற்குழுவில் தீர்மானிக்கப்படவுள்ளதுடன் இந்த விடயம் தொடர்பில் கட்சிக்குள்ளும் ஆதரவாளர் மத்தியிலும் கேள்விகள் எழுப்பட்டுள்ளது. 

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தணிந்தவுடன் கட்சி என்ற வகையில் தீர்மானங்கள் எடுக்கப்படும் என சுதந்திர கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா பொது ஜனபெரமுவின் உறுப்புரிமையை ஏற்றுக்கொண்டிருந்தனர். 

இந்நிலையில் அவர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை நீக்குவது தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், 

ஒரே நபர் இரு கட்சிகளின் அங்கத்துவத்தினைக் கொண்டிருக்க முடியாது. தற்போது நாட்டில் காணப்படும் அரசியல் நெருக்கடியின் காரணமாக இந்த விடயம் தொடர்பில் கட்சி ரீதியிலான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. 

எனவே இந்த அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னரே இது தொடர்பில் தீர்மானிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.