இலங்கை பாராளுமன்றத்தில் இன்று சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் வெட்கக்கேடானது நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தும் விதத்தில் அது அமைந்திருந்தது என இலங்கையின் வர்த்தக சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை வர்த்தக சம்மேளனம் உட்பட பல வர்த்தக அமைப்புகள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளன

இலங்கையின் அரசியல் நிலை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக வர்த்தக சம்மேளனங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதிக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளிற்கும் தீர்மானங்களை எடுக்கும்போது உரிய நடைமுறையை பின்பற்றவேண்டிய சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிக்கவேண்டிய கடமையுள்ளதாக நாங்கள் கருதுகின்றோம் என வர்த்தக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கடந்த சில வாரங்களாக இடம்பெற்றுவரும் சம்பவங்கள் மிக மோசமான ஸ்திரதன்மையின்மையை ஏற்படுத்தியுள்ளன இதனை இலங்கையால் எதிர்கொள்ள முடியாது எனவும் வர்த்தக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இது அபிவிருத்தியை பாதிக்கும் இலங்கையின் சமூக பொருளாதார நிலைமைகளில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் வர்த்தக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் முழுநிர்வாகமும் முடங்கியுள்ளது அரச அலுவலகங்கள் தங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் செயல் இழந்துள்ளன இதன் காரணமாக பாதிக்கப்படப்போகின்றவர்கள் இந்த நாட்டின் மக்களே என வர்த்தக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களே இதுவரை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களில் மிக மோசமானவை எனவர்த்தக அமைப்புகள் தெரிவித்துள்ளன.