யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு இழப்பீடுகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்ற போதும் அந்த மக்களை மீண்டும் பொருளாதார ரீதியாக பாதிப்படைய வைக்க முடியாது என மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி  பிரதி அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்வது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக பிரதி அமைச்சரை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் சொத்துக்களை இழந்த மக்களுக்கு அரசினால் இழப்பீட்டு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது.

இந்நிலையில் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதீக்கப்பட்ட மக்களுக்கு சொத்து அழிவு  இழப்பிடாக நிதியினை வழங்க மீள் குடியேற்ற அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில்,  சொத்துக்களை இழந்த மக்களுக்கு அரசினால்  இழப்பீட்டுத்தொகை வழங்கும் வகையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் சொத்துக்களை இழந்த மக்களுக்கு இழப்பீட்டு நிதியினை வழங்க மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் என்ற வகையில்   நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததோடு, மன்னார் உப்புக்குளத்தில் உள்ள   அலுவலகத்தில் வைத்து இழப்பீடுகளுக்கான விண்ணப்ப படிவங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொலிஸ் முறைப்பாட்டு படிவங்களுக்கு அமைவாக  வழங்கப்பட்டு வருகின்றது.

எனினும் குறித்த படிவத்தில் சமாதான நீதவான் ஒருவரின் கையொப்பம் மற்றும் உறுதிப்படுத்தல்கள் தேவை என்பதினால் பல விண்ணப்பதாரிகள் சமாதான நீதவானை நாடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் கராணமாக பொலிஸ் முறைப்பாட்டை மொழி பெயர்ப்பு செய்யவும் மற்றும்  விண்ணப்பத்தை பூரணப்படுத்தி உறுதிப்படுத்தவும் ஒரு சில சமாதான நீதவான்கள் 600 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை கட்டணமாக அறவீடு செய்கின்றதாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களிடம் இவ்வாறு அறவீடு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.பொலிஸ் முறைப்பாட்டை மொழி பெயர்ப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

எனவே இனி வரும் காலங்களில் மன்னார் மாவட்டத்தில் உள்ள எமது அலுவலகத்தினூடாக வினியோகிக்கப்படும் விண்ணப்பப் படிவங்கள் தொடர்பிலும், மக்கள் சமாதான நீதவானின் உறுதிப்படுத்தல் மற்றும், பொலிஸ் முறைப்பாட்டை மொழி பெயர்ப்பு செய்தல் தொடர்பிலும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் பொருளாதார ரீதியில் பாதிப்படையும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முடியாது எனவும் பிரதி அமைச்சர் கே.காதர்மஸ்தான் தெரிவித்தார்.

விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்தல் மற்றும் பொலிஸ் முறைப்பாட்டை மொழி பெயர்ப்பு செய்தல் தொடர்பில் விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளுபவர்கள்  எமது அலுவலக அதிகாரியிடம் உறுதி படுத்தி செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.