இன்றைய பௌர்ணமி போயா தினத்தில் விகாரையில் இடம்பெறும் சமய நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அதிகாலையிலேயே புறப்பட்டுச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வயோதிபப் பெண்கள் இருவர் உட்பட சிறுவன் ஒருவனும் வேகமாக வந்த லொறியில் மோதி உயிரிழந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் அநுராதபுரம் வீதியில் சாலியவெவ பிரதேசத்தில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ள இவ்விபத்தில் 83, 62 வயதுகளை உடைய இரு பெண்களுடன் 12 வயதுச் சிறுவன் ஒருவனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களாவர்.  

விபத்தில் உயிரிழந்த சிறுவனும், சிறுவனின் அம்மம்மா மற்றும் அப்பம்மா ஆகிய மூவரும் வீட்டிலிருந்து அப்பிரதேசத்தில்  உள்ள பௌத்த விகாரை நோக்கி வீதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளனர். 

இதன் போது புத்தளம் திசையிலிருந்து அவ்வீதியில் வேகமான வந்துள்ள லொறி ஒன்று வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிவிட்டு பின்னர் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளது. 

இவ்விபத்தில் இரு பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் சிறுவன் பலத்த காயங்களுடன் புத்தளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு உயிரிழந்துள்ளார். 

காயமடைந்த சிறுவனை விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியே லொறியில் ஏற்றிக் கொண்டு புத்தளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்துள்ளதாகவும், மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் சிறுவன் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்து வைத்தியசாலையில் சிறுவனை அனுமதித்துவிட்டு லொறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் வைத்தியசாலை பணியாளர் ஒருவர் குறித்த லொறியின் இலக்கத்தை குறித்துக் கொண்டுள்ளதாகவும் அந்த இலக்கத்தை வைத்து குறித்த லொறியினை அடையாளம் காண்பதற்கான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்விபத்தில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த பீ. ஏ. ஹேமலதா (வயது 62), கே. ஏ. யசோஹாமி (வயது 83) மற்றும் இமல்கா ஹேசான் (வயது 12) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர். உயிரிழந்த இரு பெண்களின் உடல்கள் நொச்சியாகம வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

சாலியவெவ பொலிஸார் இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.