தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக  ஒன்றரை மாத ஆண் சிசுவொன்று மரணித்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் 5ஆம் குறிச்சியைச் சேர்ந்த வெற்றிவேல் ஹபினேஸ் எனற  பிறந்து  70 நாட்களான  குழந்தையே நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 

கடந்த செப்டெம்பெர் மாதம் 05 ஆம் திகதி லதா – வெற்றிவேல் என்ற தம்பதிக்கு 5 வது பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.

அந்த இரட்டையர்களில் ஒருவரான ஹபினேஸ் எனும் குழந்தைக்கு அவரது தாயார் சம்பவ தினமான திங்கட்கிழமை இரவு தாய்ப்பால் ஊட்டிய நிலையில் கண்ணயர்ந்துள்ளார்.

பின்னர் நள்ளிரவு நெருங்கும் வேளையில் இரட்டையர்களில் மற்றைய குழந்தை அழுது கொண்டிருந்துள்ளது. அந்தக் குழந்தைக்குப் பாலூட்ட தாயார் கண்விழித்தபோது ஏற்கெனவே தாய்ப்பாலருந்திய குழந்தை வாயினாலும் மூக்கினாலும் தாய்ப்பால் வெளிவந்த நிலையில் மூர்ச்சித்துக் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து குழந்தையை உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் குழந்தை ஏற்கெனவே மரணித்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் சடலம் உடற்கூறாய்வின் பின்னர் பெற்றோரிடம் நேற்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது.

இரட்டையர்களில் மற்றைய குழந்தை தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக பெற்றோர் தெரிவித்தனர்.