இஸ்ரேல் மீது பாலஸ்தீன போராளிகள் 300ற்கும் மேற்பட்ட ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டுள்ள அதேவேளை இஸ்ரேலிய விமானங்கள் காஸா பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் தொடர் விமானதாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.

காஸா பள்ளத்தாக்கில் இஸ்ரேலின் விசேட படைப்பிரிவை சேர்ந்தவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதை தொடர்ந்தே மீண்டும் வன்முறை மூண்டுள்ளது.

70ற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளி;ன் இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பின் அல்அக்சா தொலைக்காட்சியின் அலுவலகத்தின் மீது தாக்குதல் இடம்பெற்றதாகவும் எனினும் பணியாளர்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டதால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இது பயங்கரவாத இலக்கு என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் இரு போராளிகள் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை காஸாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட டாங்கி எதிர்ப்பு பீரங்கி தாக்குலில் இஸ்ரேலில் பேருந்தொன்று சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட ரொக்கட் தாக்குதலிற்கு ஹமாஸ் அமைப்பும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பும் உரிமை கோரியுள்ளன.

ஆக்கிரமிப்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் எங்கள் புதல்வர்களின் உயிர்களிற்காக விலை செலுத்தவேண்டியிருக்கும் என்பதை அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக தாக்குதல்களை தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

காஸா பள்ளத்தாக்கில் இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கையில் ஹமாஸ் அமைப்பின் உள்ளுர் தளபதியொருவர் உட்பட எட்டு  பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதை தொடர்ந்தே வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன.

இஸ்ரேல் இதனை உறுதி செய்துள்ளதுடன் தனது விசேட படைப்பிரிவொன்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் இதன் போது தனது படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

கான் யூனிஸ் என்ற பகுதியில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

ஹமாஸ் அமைப்பு இந்த தாக்குதலை கோழைத்தனமானது என வர்ணித்துள்ளது.

காஸா பள்ளத்தாக்கிற்குள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரிற்குள்ளிலிருந்து  இஸ்ரேலிய விசேட படைப்பிரிவினர் தாக்குதலை மேற்கொண்டனர் என ஹமாஸ் தெரிவித்துள்ளது

இதன் பின்னர் இஸ்ரேல் விமானதாக்குதல்களையும் டாங்கிகளையும் பயன்படுத்தியுள்ளது.

ஹமாஸ் உறுப்பினரை கடத்தும் நோக்கத்துடனேயே இந்த தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன

கொல்லப்பட்டுள்ள ஹமாஸ் தளபதி நூர்டின் முகமட் சல்மா பராகே ஹமாஸின் சுரங்கப்பாதைகள் திட்டத்தில் முக்கிய பங்களிப்பு செய்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன