ஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு

Published By: Digital Desk 4

12 Nov, 2018 | 10:21 PM
image

அமீர் அலி

உரிய காலத்துக்கு முன்கூட்டியே பாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் செயல் அரசியலமைப்புக்கு முரணானது என்று  தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் தவறும்பட்சத்தில் பொதுத்தேர்தல் நடைபெறுமேயானால், இலங்கை வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும்போது அவர்கள் முன்னால் ஒரேயொரு கேள்வியே இருக்கும். ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா? 

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் வரலாற்றிலே வேறு எந்தவொரு பொதுத்தேர்தலுமே இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அல்லது நெருக்கடியான தெரிவை மக்கள் முன்னிலையில் வைத்ததாகக் கூறுவதற்கில்லை.நாகரிக உலகில் ஒரு ஜனநாயக நாடு என்ற இலங்கையின் பெயரும் பொருளாதார சுபிட்சத்துடனான பண்பான நாடு என்ற வகையில் அதன் எதிர்காலமும் முற்றுமுழுதாக இத்தெரிவிலேயே தங்கியிருக்கிறது. 

ஒரு வகையில் நோக்குகையில் இந்த தெரிவை தீர்க்கமாகச்  செய்வதற்கு தங்களை நிர்ப்பந்தித்தமைக்காக வாக்காளர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றி சொல்லவேண்டும். தெரிவின் முக்கியத்துவத்தை இதைவிட மேலும் பலமாக எவரும் வலியுறுத்தமுடியாது.

இந்தக் கட்டத்துக்கு நாடு எவ்வாறு வந்தது? அந்தக் கதையை சர்வ வல்லமையும் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை அடிப்படையாகக் கொண்ட ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் அரசியலமைப்பில் இருந்தே தொடங்கவேண்டியிருக்கிறது. இந்த அரசியலமைப்பில் உள்ள அதிகாரங்களினால் ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றமுடியாதே தவிர மற்றைய எல்லாக் காரியங்களையும் செய்யமுடியும் என்று ஜெயவர்தன அன்று சொன்னார். 

ஜே.ஆரின் நரித்தனத்தினாலும் கொடூரமான அரசியல் சூழ்ச்சித் திட்டத்தினாலும்  அவவலங்களை சந்திக்கவேண்டிய கதிக்குள்ளான சிறுபான்மைச் சமூகங்கள் அன்று பெரும்பான்மைச் சிங்கள சமூகத்தின் மத்தியில் உள்ள முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகளுடன் கைகோர்த்து செயற்பட்டிருந்தால் இந்த அரசியலமைப்பு நடைமுறைக்கு வருவதைத் தடுத்திருக்கமுடியும். அவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தை தவறவிட்டார்கள். மிகுதி  நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான வரலாறாகும்.

ரணசிங்க பிரேமதாசவுக்குப் பிறகு ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட சகலருமே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்துக்கொண்டே பதவிக்கு வந்தார்கள்.ஆனால், அதிகாரம் என்பது போதைப்பொருளைப் போன்றது. அதற்கு அடிமையாகிவிட்டால் அதிலிருந்து மீளமுடியாது.அவ்வாறு மீளவேண்டுமானால், அதற்கு  துணிவாற்றலும் திடசங்கல்பமும் தேவை. அதன் காரணத்தினால் ஜனாதிபதியாக வந்தவர்கள் எல்லோருமே வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினார்கள்.ஒரு பதவிக்காலத்துக்கே பதவியில் இருக்கப் போவதாக உறுதியளித்துக் கொண்டு பதவிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன வரை ஜனாதிபதிப் பதவி ஒழிப்பு என்ற வாக்குறுதி மீறப்படும் வரலாறே தொடர்ந்துகொண்டிருந்தது.அதிகாத்தின் ருசி அவரையும் பழுதாக்கியது.தனது ஐந்து வருட பதவிக்காலத்துக்கு மேல் இரு வருடங்கள் பதவியில் இருக்க அவர் விரும்பினார்.அந்த இடத்தில்தான் பிரச்சினை தொடங்கியது.

அதேவேளை அரசியலமைப்புக்கான 19 வது திருத்தம் என்ற வடிவில் ஒரு உபநாடகம் அரங்கேறியது.அந்த திருத்தத்தையும் பாராளுமன்றக் கலைப்பு வரையான அண்மைய நிகழ்வுகளையும் எந்தக் கோணத்தில் இருந்து வியாக்கியானம் செய்தாலும் அது ஜனாதிபதியின் அதிகாரங்களை விளிம்புகளில் திருத்தம் செய்கின்ற ஒரு ஏற்பாடாக அமைந்தது என்பதே உண்மை நிலை.உண்மையான பிரச்சினை அரசியலமைப்பின் அடிப்படைகளை எவ்வாறு பொருள்கோடல் செய்வது என்பதிலேயே தங்கியிருக்கிறது.சகல அதிகாரங்களும் கொண்ட ஜனாதிபதி பதவியில் மறைந்திருக்கும் ஆபத்துக்கள் குறித்து லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி என்.எம்.பெரேரா பல வருடங்களுக்கு முன்னர் நாட்டுக்கு மிகுந்த தூரநோக்குடன்  எச்சரிக்கை செய்தார்.திடீரென்று குணம் மாறியிருக்கின்ற ஒரு சிறிசேனவின் கைளில் இருக்கும் ஜனாதிபதிப் பதவி கலாநிதி பெரேராவின் எச்சரிக்கையை நடைமுறையில் நிரூபித்திருக்கிறது.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற போர்டவயில் முற்றுமுழுதான சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்வதற்கு ஒரு சிறிய அடியையே எடுத்துவைக்கவேண்டியிருக்கிறது.

முன்கூட்டியே பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் நடத்தப்படக்கூடிய பொதுத்தேர்தல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்து ஜனநாயகத்தை மீளநிலைநிறுத்துவது என்ற ஒரே ஆணையுடன் முற்போக்கு சக்திகளையும் ஜனநாயக சக்திகளையும் உள்ளடக்கிய கூட்டணியொன்றைத் தெரிவுசெய்வதற்கு இலங்கை வாக்காளர்களுக்கு கிடைக்கிற இன்னொரு வாய்ப்பாக அமையும்.

இதை நடைமுறைச் சாத்தியமாக்க வேண்டிய பொறுப்பு பெருமளவுக்கு இரு சிறுபான்மைச் சமூகங்களினதும் தோள்களிலேயே விழுகிறது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் தேசியப்பட்டியல் ஊடாக நியமனஞ்செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் பணத்துக்காகவும் அமைச்சர் பதவிகளுக்காகவும் வேறு வரப்பிரசாதங்களுக்காகவும் கட்சிமாறிக்கொண்டிருந்ததை கடந்த இரு வாரங்களாக எம்மால் காணக்கூடியதாக இருந்தது.

பாராளுமன்றப் பதவிகள் மற்றும் சிறப்புரிமைகள் ஊடாக செல்வத்தைக் குவிப்பதில் தங்களுக்கு இருக்கும் சுயநல நோக்கத்தை அவர்கள் வெட்கமேதுமின்றி வெளிக்காட்டுகிறார்கள்.அவர்களில் சிலர் பாராளுமன்றத்துக்கு வெளியே வேலைவாய்ப்புச் சந்தையில் எந்தவொரு தொழிலையும் தேடிக்கொள்வதற்கான தகுதியையும் கொண்டவர்கள் அல்ல.அடுத்த தேரதலில் அவர்கள் தங்களது சமூகத்தின் வாக்காளர்களினால் தண்டிக்கப்படவேண்டியவர்கள்.பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் உள்ள முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகளுடன் சிறுபான்மைச் சமூகங்கள் வெளிக்காட்டக்கூடிய ஒருமைப்பாடு இலங்கையின் எதிர்காலத் தலைவிதியைத் தீர்மானிக்கும்.

அதேவேளை  ஜனாதிபதியின் அரசியலமைப்புக்கு விரோதமான நடவடிக்கைகள் மீதான வெறுப்பை மல்வத்தை பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீசித்தார்த்த சுமங்கள தேரர் பகிரங்கமாக வெளிக்காட்டியது திருப்தி தருகின்ற ஒரு செயலாகும்.அது ஒரு அறிவார்ந்த மதத்தலைவரின் முன்னுதாரணமான வெளிப்பாடாகும்.அதை ஏனைய மதத்தலைவர்களும் பின்பற்றவேண்டும்.

எதிர்வரும் பொதுத்தேர்தல் இலங்கையின் வரலாற்றில் தனித்துவமான தேர்தலாக அமையும்.நாட்டின் ஐக்கியம், சுபிட்சம் மற்றும் சமூகங்களுக்கிடையிலான சௌஜனயம் எல்லாம் அதில் தங்கியிருக்கின்றன.அது ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் சுதந்திரத்துக்கும் அடிமைத்தனத்துக்கும் நயநாகரிகத்துக்கும் காட்டுமிராண்டித்தனத்துக்கும் இடையிலான போட்டியாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய மாகாணத்தின் முதலாவது சப்ததள 108...

2024-03-19 10:37:23
news-image

மலையக கட்சிகள் யாருக்கு, எதற்கு ஆதரவளிக்க...

2024-03-19 10:34:04
news-image

சுவீடனின் நேட்டோ உறுப்புரிமை: இந்தோ -...

2024-03-19 09:09:10
news-image

கனடாவிலும் இலங்கையிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய 6...

2024-03-18 14:07:20
news-image

வலுவடையும் இலங்கையின் ரூபாய் : பொதுமக்கள்,...

2024-03-18 13:49:53
news-image

இந்தோனேஷியாவின் புதிய ஜனாதிபதியாக பிரபோவோ  

2024-03-18 13:37:22
news-image

மாகாண சபை முறைமை சுயாட்சிக்கான படிக்கல்

2024-03-18 13:31:57
news-image

அமெரிக்க தேர்தல் களம் : ட்ரெம்புக்கு...

2024-03-18 13:23:47
news-image

தேர்தல்கள் மட்டுமே தீர்வுகளை கொண்டுவருமா?

2024-03-18 13:08:50
news-image

வளமான வாழ்வுத் தேடலில் உயிரை இழக்கும்...

2024-03-18 13:05:14
news-image

சர்வதேச சவால்கள் ‘ஏழு’

2024-03-18 12:53:09
news-image

கோட்டா தனக்குத் தானே வெட்டிய குழி

2024-03-18 12:41:45