அக்டோபர் 26 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த பிறகு இலங்கையில் அரசியல் நிகழ்வுப்போக்குகள் விரைவு வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றன. 

ஜனாதிபதியின் நடவடிக்கையை அரசியலமைப்புக்கு முரணானது என்று குற்றஞ்சாட்டிய விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தனக்கே பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்பதை நிரூபிப்பதில் உறுதியாக இருந்தார். ஆசன எண்ணிக்கை விக்கிரமசிங்கவுக்குச் சாதகமாக இருந்தபோது பாராளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி சிறிசேன 2019 ஜனவரி 5  பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார்.

நிலைவரங்களில் இன்னொரு திடீர்த்  திருப்பமாக ராஜபக்ஷவும் அவருடன் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களில் 44 பேரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்துவிலகி அவரது சகோதரர் பசில் ராஜபக்சவினால் சுமார் இரு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சியில் இணைவதற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தீர்மானித்தனர்.

சிறிசேனவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் இடையே பல மாதங்களாக பகைந்துகொண்டிருந்த முரண்பாடுகள் பகிரங்கத்துக்கு வந்ததையடுத்து இலங்கையில் இப்போது தீவிரமான அதிகாரச்சண்டை மூண்டிருக்கிறது. பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மைப் பலத்தைக்கொண்ட விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியும் வேறுசில கட்சிகளும் பாராளுமன்றத்தைக் கலைத்த சிறிசேனவின் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்குச் சென்றிருக்கின்றன.

சிறிசேனவின் நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தின் பரவலான கண்டனத்துக்குள்ளாகியிருக்கின்றன. இதுவரையில் புதிய பிரதமர் ராஜபக்சவின் நியமனத்தை அங்கீகரித்திருக்கும் ஒரே நாடு சீனாவேயாகும். ஜனாதிபதியாக பதவி வகித்த சர்ச்சைக்குரிய சுமார் 10 வருடங்களிலும் ராஜபக்ச அரசியல் மற்றும் நிதி ஆதரவுக்காக பெய்ஜிங் மீதே பெரிதும் தங்கியிருந்தார். இலங்கை சீனா பக்கம் சாயவேண்டுமா அல்லது இந்தியா பக்கம் சாயவேண்டுமா  என்பது சிறிசேனவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் இடையேயான வேறுபாடுகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று. ஆனால், இலங்கை நிலைவரங்களை அவதானிக்கும்போது இந்தியா அவற்றை சீனாவின் நிறப்பிரிகையின் ஊடாக மாத்திரம்பார்ப்பது விவேகமானதாக இருக்காது.இலங்கையில் அரசியல் உறுதிப்பாடின்மை தொடருமானால் அதனால் இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கவேண்டும்.

கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த அயல்நாட்டில் அரசியல் குழப்பநிலை கவலைக்குரிய விவகாரமே என்பதை தனிப்பட்ட முறையில் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டிருக்கின்ற போதிலும் தற்போதைக்கு இந்தியா "பொறுத்திருந்து பார்க்கும் " அணுகுமுறையையே கடைப்பிடிக்கிறது. இலங்கை நெருக்கடியைத் தீர்த்துவைக்கும் முயற்சியில் இந்திய உயர் தலைமைத்துவம்  தொடர்பாடலுக்கான சகல வழிமுறைகளையும் பயன்படுத்தக்கூடியதும் நிச்சயம்.இலங்கை நிலைவரங்கள் தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவையாகும். மாலைதீவு  அரசியல் நெருக்கடியைக் கையாண்டதில் இருந்து பெற்றிருக்கக்கூடிய படிப்பினைகள் இந்திய வெளியுறவுக்கொள்கை வகுப்பாளர்களுக்கு நீண்டகால நோக்கில் இது விடயத்தில் உதவும். ஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்துவதில் இலங்கைக்கு புதுடில்லி உதவமுடியும்.பிராந்தியத்தின் ஏனைய வல்லாதிக்க நாடுகளைவிடவும் இந்தியா  இதைச் செய்வதற்கு முற்றிலும் தகுதிவாய்ந்த நாடு என்பது நிச்சயம்.

 ( இந்துஸ்தான் டைம்ஸ் ஆசிரிய தலையங்கம், 12 நவம்பர் 2018)