நக்குல் நடித்த ‘செய் ’ என்ற படத்தின் வெளியீடு திகதி அறிவிக்கப்படாமல் மீண்டும் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.

தமிழ் திரையுலகிற்கு புதிதாக அறிமுகமாகும் தயாரிப்பாளர் மன்னு தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் செய். இதில் நக்குல், அன்ஸால் முன்ஜால், அஞ்சலி ராவ், பிரகாஷ்ராஜ் , நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை மலையாள இயக்குநர் ராஜ்பாபு இயக்கியிருக்கிறார். இவர் இயக்கும் முதல் தமிழ் திரைப்படம் இது.

இப்படத்தின் வெளியீடு கடந்த மார்ச் மாதமே நடைபெற்றிருக்கவேண்டும். அப்போது திரையுலகில் வேலை நிறுத்தம் நடைபெற்றதால் படம் வெளியாகவில்லை. பிறகு தயாரிப்பாளர் திரையுலகில் யாருடனும் மனக்கசப்பு வேண்டாம் என்று பொறுமையுடன் காத்திருந்து, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட வெளியீட்டு ஒழுங்கு படுத்தும் குழுவிடம் பேசி, படத்தை நவம்பர் 16 ஆம் திகதியன்று வெளியிட அனுமதி பெற்றது. 

இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் படத்தை விளம்பரம் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் திடிரென்று நவம்பர் 16 ஆம் திகதியன்று விஜய் அண்டனி நடித்த ‘திமிரு புடிச்சவன் ’ என்ற படம் வெளியாகும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இதனால் செய் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலும் படக்குழுவினர் தங்களின் மன உளைச்சலை பகிர்ந்து கொண்டனர். அப்போது தயாரிப்பாளர் மன்னு பேசுகையில்,‘ தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் எங்களுக்கு ஆதரவாக பேசி வருகிறார். முழுமையான விவரங்கள் திங்கட்கிழமையன்று தெரிய வரும்.’ என்றார்.

இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு ‘செய் ’ படக்குழுவினர் தங்களது வெளியீட்டை திகதிக் குறிப்பிடாமல் தள்ளி வைத்திருக்கிறார்கள்.

இதனிடையே, இவையனைத்திற்கும் தீபாவளியன்று 600 க்கு அதிகமான திரையரங்குகளில் விஜய் நடித்த ‘சர்கார் ’ படம் திரையிடப்பட்டதே காரணம் என்றும், திரையுலகில் மீண்டும் திரையரங்க உரிமையாளர்களின் ஆதிக்கம் தான் மேலோங்கியிருக்கிறது என்றும், ரசிகர்கள் இந்த படத்தைத்தான் பார்க்கவேண்டும் என்று மறைமுகமாக நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்றும் கவலையுடன் திரையுலக பிரமுகர்கள் சிலர் தெரிவிக்கிறமை என்பது குறிப்பிடத்தக்கது.