தவான் மற்றும் ரிஷாத் பந்தின் அதிரடி ஆட்டத்தினால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. 

சென்னை சிதம்பரம் மைதானத்தில் மாலை 7:00 மணியளவில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களின் நிறைவில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ஓட்டங்களை குவித்தது.

மேற்கிந்திய அணி சார்பில் நிக்கஷல் பூரன் 53 ஓட்டங்களையும், பிராவோ 43 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

182 என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி 2 ஆவது ஓவரின் இரண்டாவது பந்திலேயே 13 ஓட்டத்தை பெற்றிருந்த நிலையில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.

அதன்படி அணித் தலைவர் ரோகித் சர்மா 4 ஒட்டத்துடன் கீமோ பவுலின் ஓட்டத்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவரின் ஆட்டமிழப்பினையடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுலும் 5.2 ஆவது ஓவரில் 10 பந்துகளை எதிர்கொண்டு 17 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இந் நிலையில் இரண்டாவது விக்கெட்டுக்காக தவானுடன் கைகோர்த்த ரிஷாத் பந்த் தொடர்ந்தும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த  இந்திய அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டினை இழந்து 76 ஓட்டங்களை பெற்றது. 

தவான் 35 ஓட்டத்துடனும், ரிஷாத் பந்த் 18 ஓட்டத்துடனும் அதிரடி காட்டிவர இந்திய அணி 11.5 ஆவது பந்தில் 100 ஓட்டங்களை பெற்றதுடன் தவான் 11 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் 36 பந்துகளை எதிர்கொண்டு 8 நான்கு ஓட்டம், 1 ஆறு ஓட்டம் அடங்களாக சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் 8 ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

மறுமுணையில் அனைத்து திசைகளிலும் மேற்கிந்திய அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளை தெறிக்க விட்ட ரிஷாத் பந்த் 30 பந்துகளை எதிர்கொண்டு 9 நான்கு ஓட்டம், 1 ஆறு ஓட்டம் உள்ளடங்களாக இருபதுக்கு 20 அரங்களில் கன்னி அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

18.2 ஆவது ஓவரில் கிமோ பவுலினுடைய பந்து வீச்சில் ரிஷாத் பந்த் 58 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற மனிஷ் பாண்டே களமிங்கினார். 

இறுதியாக இந்திய அணி அணிக்கு வெற்றிக்கு 2 பந்துகளுக்கு 1 ஓட்டங்கள் என்ற நிலையில் இருக்க 19.5 ஆவது பந்தை அலெய்னுடைய பந்து வீச்சை உயர்த்தியடித்த தவான் பொலாட்டிடம் பிடிகொடுத்து 92 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இறுதியாக 1 பந்துக்கு 1 ஓட்டம் என்ற நிலையில் இருக்க மனீஷ் பாண்டே ஒரு ஓட்டத்தை தடுமாற்றத்துடன் பெற்று ஆட்டத்தை முடித்து வைத்தார். 

இதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2:0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3:1 என்ற கணக்கிலும், இருபதுக்கு 20 தொடரை 3:0 என்ற கணக்கிலும் வெற்றி கொண்டு கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.