ராகம பிரதேசத்தில் புகையிரத இயந்திர செலுத்துனர் ஒருவர் மீது நேற்று மாலை நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து ஏனைய செலுத்துனர்கள் பணிநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றமையால் நாடளாவிய ரீதியாக 20 அலுவலக புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில். அனைத்து புகையிரத வழித்தடங்களிலும் சேவைகள் தாமதமடையும் அல்லது ரத்து செய்யப்படலாம் எனவும் இன்று கண்டி மற்றும் மாத்தறைக்கு இடையிலான நகராந்தர சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

நேற்று, மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று பேருவலைக்கும் மக்கோனைக்கும் இடையே தடம்புரண்டதையடுத்து கொழும்பிற்கும் களுத்துறைக்கும் இடையிலான புகையிரத சேவைகள் பாதிப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், இன்று குறித்த வழித் தடத்தில் புகையிரத போக்குவரத்துக்கள் சீரடைந்து வழமைக்கு திரும்பியுள்ளது.