பாராளுமன்றத்தை ஒத்திவைப்பது மிக மோசமான ஜனநாயக மீறலாகும்: ரவூப் ஹக்கீம்

Published By: Vishnu

06 Nov, 2018 | 07:02 PM
image

கேள்வி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு பாராளுமன்றத்தில் 7 உறுப்பினர்கள் இருக்கின்றனர். தற்போதைய அரசியல் நிலைமை குறித்து உங்களது நிலைப்பாடு என்ன?

பதில்: அதியுயர் சபையான பாராளுமன்றத்தை நடாத்திச் செல்லும் மாலுமி என்ன வகையில், பாராளுமன்றத்தை மீண்டும் அவசரமாக கூட்டுகின்ற காரியத்தை நிறைவேற்றித் தருமாறு சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். நாங்கள் தனியாகவும், கூட்டாகவும் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இன்றைய கலந்துரையாடலை அவர் ஏற்பாடு செய்திருந்தார். எங்களுக்கு தேவையான பெரும்பான்மையைவிட கூடுதலாக இருப்பதாக அவரிடம் சுட்டிக்காட்டினோம். 

கேள்வி: சபாநாயகரிடம் எப்படியான கோரிக்கைகளை நீங்கள் முன்வைத்தீர்கள்?

பதில்: தற்போது ஏற்பட்டுள்ள அராஜக நிலையை கட்டுப்படுத்தி, நாட்டில் நீதியை நிலைநிறுத்துவதற்கு, எங்கள் உரிமைகளை பாதுகாக்கின்ற அடிப்படையில் பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டவேண்டுமென அனைவரும் கடுமையாக வலியுறுத்தியுள்ளோம். எங்களது பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற ஜனாதிபதி அரசியலமைப்புக்கு முரணான ஒரு விடயத்தை செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டைத்தான் நாங்கள் எல்லோரும் முன்வைத்திருக்கிறோம்.

பாராளுமன்றத்தில் ஒரு பிரதமருக்கு இருக்கும் பெரும்பான்மை ஆதரவை நிரூபிப்பதற்கான வாய்ப்பை வழங்காமல், வேண்டுமென்றே பாராளுமன்றத்தை இடைநிறுத்தி வைத்திருக்கும் ஜனாதிபதியின் செயற்பாடு மிக மோசமான ஜனநாயக மீறலாகும். பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகருக்கு தார்மீகப் பொறுப்பு மாத்திரமல்ல நீதியின் கடமையும் அவருக்கு இருக்கிறது.

நாட்டு மக்களை தலைநகருக்கு கூட்டிவந்து, ஆர்ப்பாட்டங்கள் நடாத்தி, தலைகளைக் காட்டி தங்களது நியாயங்களை சொல்கின்ற அரசியல் தலைமைகள், பாராளுமன்றத்தில் பிரதமருக்கு ஆதரவு தெரிவிக்கும் தலைகளை எண்ணுவதற்கான வாய்ப்பை ஏன் இல்லாமல் செய்கிறார்கள் என்று நாங்கள் அவர்களை தீவிரமாக கண்டிக்கிறோம். பாராளுமன்றத்தைக் கூட்டுவதன்மூலம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்ற அராஜக நிலைமையை கட்டுப்படுத்துவதுடன், நாட்டில் ஜனநாயகத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட முடியும். 

கேள்வி: சபாநாயகர் உங்களுக்கு என்ன உத்தரவாதங்களை தந்திருக்கிறார்கள்?

பதில்: தான் ஜனாதிபதியிடம் பேசியதற்கிணங்க, பாரளுமன்றத்தை கூட்டுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிவித்தார். ஆனால், பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படவில்லை. விரைவாக பாராளுமன்றத்தை கூட்டத் தவறினால், நாங்களாக சபாபீடத்துக்குள் நுழைவதற்கு தயங்கமாட்டோம் என்று அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்.

அரசியல் குழப்பநிலையை உண்டுபண்ணியவர்கள், பாராளுமன்றத்தின் தலைகளுக்கு விலைபேசுகின்ற மிக மோசமான, கீழ்த்தரமான ஒரு கலாசாரத்தை உருவாக்கி வருகிறது. காலம் செல்லச் செல்ல இந்த நிலைமை இன்னும் மோசமடையும் என்பதினால், இந்த நாட்டில் கெளரவமான நிம்மதியான அரசியலை செய்ய விரும்புவர்கள் என்ற அடிப்படையில் உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.

கேள்வி: பாராளுமன்றத்தை கூட்டுவதாக சொல்லப்பட்ட திகதிகள் தள்ளிக்கொண்டே செல்வதற்கு என்ன காரணம்?

பதில்: தேவையான தலைகளை அவர்களால் இன்னும் சேகரிக்க முடியவில்லை. இன்னும் பல தலைகளுக்கு விலைபேசிக் கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் பாராளுமன்றத்தைக் கூட்டுவதில் அவர்கள் காலத்தை இழுத்தடிக்கிறார்கள். எங்களது தலைகளுக்கு விலைபேசும் இந்த கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். எங்களது நேர்மையை, சுயகெளரவத்தை, அரசியல் உரிமையை பாதுகாத்து தருமாறு சபாநாயகரை வேண்டியிருக்கிறோம்.

கேள்வி: இப்படியான சந்தர்ப்பங்களில் சிறுபான்மைக் கட்சிகள் அரசாங்கம் அமைக்கப்படும் பக்கத்துக்கு தாவுவதான குற்றச்சாட்டுகளும் இருக்கின்றதே?

பதில்: அரசியல் ரீதியாக பேரம்பேசுவதும் தேர்தலுக்கு முன்னரோ, பின்னரோ எங்களது கோரிக்கைகளை பிரதான கட்சியிடம் ஜனநாயக ரீதியாக முன்வைப்பதும் நடந்துவருகிறது. ஆனால், இப்போது நடந்திருப்பது அவ்வாறானதல்ல. இது அப்படியானதொரு காலகட்டமல்ல. பாராளுமன்றத்தை கூட்டாமல் ஒத்திவைப்பதினூடாக அராஜகம் மேலோங்கும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறி இந்த சட்டவிரோத செயல் நடந்திருக்கிறது.

பாராளுமன்றத்தை கூட்டாமல் ஒத்திவைப்பதன் மூலம் மேலுமொரு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ஸ்திரத்தன்மையற்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சி என்ற முறையில் இவ்வாறான முறைகேடாக செயற்பாட்டை ஒன்றுபட்டு கண்டிப்பதற்கு எங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கின்றது. விலைபேசுவதை விட்டுவிட்டு, முன்னர் இருந்த இடத்துக்குச் செல்வது அவசியமாகும்.

கேள்வி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாரை ஆதரிக்கும்?

பதில்: எங்களது நிலைப்பாட்டில் மாற்றம் எதையும் கொண்டுவரவில்லை. சட்டபூர்வமான பிரதமரை உருவாக்கும் உரிமை பாராளுமன்ற அமர்வுகளில் மாத்திரம்தான் இருக்கிறது. சட்டத்தை மீறிச் செய்யப்பட்ட இந்த விடயத்தை அவர்கள் சட்டபூர்வமானதாக மாற்றுவதற்கு பாராளுமன்றத்தை கூட்டாமலிருப்பதன் மூலம் சட்டபூர்வமற்ற பிரதமராகத்தான் நியமிக்கப்பட்ட பிரதமர் இருந்துகொண்டிருக்கிறார். பாராளுமன்றத்தில் யார் பிரதமர் என்ற வாக்களிப்பு வரும்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்கும். 

கேள்வி: நீங்கள் இன்னும் ரணில் விக்கிரமசிங்கவைத்தான் ஆதரிக்கிறீர்களா?

பதில்: ஆம். அதில் மாற்றம் எதுவுமில்லை என்பது மிகத் தெளிவான விடயம். 

கேள்வி: உங்களது கட்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை பிரித்தெடுப்பதற்காக பேரம் பேசப்படுவதாக சொல்லப்படுகிறதே?

பதில்: எங்களது உறுப்பினர்கள் யாரும் விலைபோகமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. தலைவருடன் இருந்துகொண்டுதான் இதற்கு தீர்வுகாணவேண்டும் என்பதில் அவர்கள் தீர்க்கமாக இருக்கிறார்கள். நாங்கள் ஒருமித்து செயற்படுவதில் தீவிரம் காட்டிவருகிறோம். 

கேள்வி: ஜனாதிபதி, ஐ.தே.க. தலைமை மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அவ்வாறான ஒருவர் மீண்டும் பிரதமராக வந்தால் நாட்டை முன்கொண்டு செல்லமுடியுமா?

பதில்: அவரின் இந்தக் கூற்றினால் அறிந்தோ, அறியாமலோ இன்னொரு இக்கட்டான நிலையை ஏற்படுத்தப்போகிறார். அதைவிட, கட்சிக்குள் சீர்திருத்தத்தை ஏற்படுத்தி அல்லது தலைமைத்துவத்தை மாற்றுவதற்கான முயற்சியொன்றை மேற்கொள்வதன் மூலம் தீர்வினை காணமுடியும். இப்போதுகூட ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தர்களுடன் இதுபற்றி கலந்தாலோசித்து வருகிறோம். ஐக்கிய தேசிய முன்னணியின் பங்களார் என்ற வகையில் எங்களாலும் அதற்கு ஒத்துழைக்க முடியும்.

கேள்வி: ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமரானால் ஒரு மணித்தியாலம் கூட பதவியை நீடிப்பதில்லை என்று ஜனாதிபதி கூறியிருக்கிறார். இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: அவர் இராஜினாமா செய்தால், நாங்கள் பாராளுமன்றத்தினால் ஜனாதிபதி ஒருவரை பதவியில் அமர்த்தும் நிலை ஏற்படும். 

கேள்வி: கடந்த 3 வருடங்களில் இந்த அரசாங்கம் சாதித்தது என்ன? அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை இல்லாமல் செய்யும் காரியத்தில் ஈடுபட்டதாக கூறுகிறார்கள். இதுபற்றி என்ன கூறுகிறீர்கள்?

பதில்: அவ்வாறில்லை. இந்த நாட்டில் நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தப்பட்டது மக்களின் ஜனநாயகம், சுதந்திரம், ஊடக சுதந்திரம் என்பவற்றை நிலவச் செய்வதற்குத்தான். அதற்காக பாராளுமன்றத்தில் மசோதாக்களை கொண்டுவந்தும், செயற்திட்டங்கள் மூலமாகவும் அபிவிருத்திகள் மூலமாகவும் நிறையச் செய்திருக்கிறோம்.

அதுமட்டுமல்ல இதற்கு முன்னிருந்த அரசாங்கத்தை விட நாங்கள் கூடுதலான அபிவிருத்திகளைச் செய்திருக்கிறோம். ஆனால், ஊடகங்களில் அவற்றுக்கு போதியளவு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இப்போது கூட சில ஊடகங்கள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், பக்கச்சார்பாக நடந்துகொள்வதையும் அவதானிக்க முடிகிறது.

கேள்வி: மஹிந்த ராஜபக்ஷவினால் பெற்றோல், டீசல் மற்றும் அத்தியவசியப் பொருட்களுக்கு விலை குறைக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

பதில்: வேறொன்றுமில்லை, இப்போதே அவர்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டு அவசர அவசரமாக பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் ஒன்றுக்குச் செல்லும் அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனூடாக அரசாங்கத்தின் முக்கிய பாத்திரமாக தன்னை பிரசித்தப்படுத்திக்கொள்ளும் காரியம் அரங்கேறி வருகிறது. 

கேள்வி: தேர்தல் ஒன்றுக்கு சென்று பிரச்சினையை தீர்த்துக்கொள்வது உசிதம் என்று கருதுகிறீர்களா?

பதில்: அவ்வாறானதொரு சிக்கலான நிலைமை ஏற்பட்டால், இதைத்தவிர வேறு மாற்று வழியில்லை. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள அராஜக நிலைமையிலிருந்து மீட்டெடுப்பதற்கு ஜனாதிபதியும், இந்த இழுபறியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் மொட்டு கட்சியின் சொந்தக்காரரும் சுமூகமாக பேசி ஒரு தீர்மானத்துக்கு வரவேண்டும். அதற்கு ஒத்துழைக்க நாங்களும் தயாராக இருக்கிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04