(ப. பன்னீர்செல்வம்)

மின்சரத் தடை சதியா? அரசியலா? தொழில்நுட்ப கோளாறா? என்ற முக்கோணங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் போது பொறுப்புக்களை கைவிட்டவர்கள் யார்? பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார்? பொறுப்பாளிகள் யாரென்பது கண்டுபிடிக்கப்பட்டு  கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்த அரசாங்கம் இலங்கை மின்சார சபையின் நிர்வாகம் முழுமையாக மாற்றப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்தது.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாடு இன்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போது அரசாங்கம் இதனை அறிவித்தது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்வலு பிரதியமைச்சர் அஜித் பீ.  பெரேரா,

நாடு முழுவதும் ஏற்பட்ட மின்தடை தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதோடு இதற்கு அவசர தீர்வு காண்பதற்கு குறுகிய கால நடவடிக்கைகள் மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் என்னவென்பதை ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்கு அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

இக்குழு விஞ்ஞானிகள் மற்றும் மின்னியல் பொறியியலாளர்களின் கருத்துக்களை கேட்டறியும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் “அங்கவீனமுற்ற பிள்ளைக்கு ஒப்பானதாகும்” இன்று அப்பிள்ளையை சுகதேகியாக வளர்த்து இயங்க வைக்க வேண்டிய  பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.

தற்போது கடந்த கால நிலை பற்றி பேசுவதால் பலனில்லை. எனவே எதிர்காலத்தை கருத்திற் கொண்டு நாம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

மின்சக்தித் துறையின் “இருண்ட மேகங்களுக்குள் வெள்ளிக் கீற்றை” ஏற்படுத்துவோம்.

மீண்டும் இவ்வாறானதொரு நிலை ஏற்படாத வண்ணம்  அமைக்கப்பட்டுள்ள குழு பரிந்துரைகளை முன்வைக்கும்.

 ஒரு வாரகாலமாக ஏற்பட்ட மின்சார பிரச்சனை மீண்டும் ஏற்படமாட்டாது . அதற்கு அரசாங்கம் உத்தரவாதம் வழங்குகின்றது.

அத்தோடு இன்னும் ஒன்றரை மாதங்களுக்குள் நாடு முழுவதும் மின்சாரம் வழங்கப்படும். அத்தோடு மின்சாரத் துறையில் தீர்க்கப்படாத பல விடயங்களுக்கு தீர்வுகளை காண்போம்.

அதற்கான சந்தர்ப்பம் அரசுக்கு கிடைத்துள்ளது. அத்தோடு நாடு முழுவதும் ஏற்பட்ட மின்சாரத் தடைக்கு பின்னணி சதியா? அரசியலா? அல்லது  தொழில்நுட்ப கோளாறா? என்பது தொடர்பில்  முக்கோணத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இதன்போது  பொறுப்புக்கூறலை நிறைவேற்ற வேண்டியவர்கள் யார்? பொறுப்பாளர்கள் யாரென்பது கண்டறியப்பட்டு  கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.