மைத்திரி மஹிந்த இணைவு இனப்பிரச்சினைக்கு தீர்வளிக்கும்

Published By: Digital Desk 4

21 Oct, 2018 | 08:00 PM
image

நேர்காணல் ஆர்.ராம்

மஹிந்த ராஜபக்ஷவே ஜனாதிபதி மைத்திரியிடம் கட்சியை ஒப்படைத்தார். ஆகவே, அவர்கள் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் பாரிய இடைவெளி ஏற்பட வாய்ப்பில்லை என சு.கா வின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் பி. திஸானாயக்க தெரிவித்துள்ளார்.

கேள்வி:- கூட்டு அரசாங்கத்திலிருந்து வெளியேறிய நீங்கள் உள்ளிட்ட 16பேரும் உங்களுடைய இலக்கை அடைவதற்கான பாதையில் எவ்வளவு தூரம் பயணித்துள்ளீர்கள்?

பதில்;:- சுதந்திரக்கட்சியை கூட்டு அரசாங்கத்திலிருந்து வெளியேறச்செய்து கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசாங்கமொன்றை அமைப்பதை இலக்காக கொண்டே நாம் வெளியேறினோம். அதனை மையப்படுத்திய கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. இருதரப்பிலும் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

இருப்பினும் நாம் நீண்ட தூரம் பயணிக்கவில்லை. இலக்கை அடைவதற்கான சகல முயற்சிகளையும் தொடர்ந்து எடுத்து வருகின்றோம். உடனடியாக அனைத்தும் நடைபெறும் என்று கூறமுடியாது.

கேள்வி:- உங்களது அணியில் இருந்த தயாசிறி ஜயசேகர எம்.பி.நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டுள்ளாரா?

பதில்:- சு.க கூட்டு அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று எழுத்துமூலமாக கோரியுள்ளோம். நாமும் சு.காவில் தான் இன்னும் இருக்கின்றோம். எனினும் தயாசிறி நிலைப்பாட்டினை மாற்றியதால் நாம் அவரைக் கைவிட்டுவிட்டோம்.

கேள்வி:- சு.க.கூட்டு எதிர்க்கட்சியினருடன் இணைந்து ஆட்சி அமைக்க முடியாதுபோனால் என்னவாகும்?

பதில்;:- அவ்வாறு நிகழும் என நான் கருதவில்லை. அப்படி நிகழ்ந்தால் சு.க.வில் இருந்து கொண்டு பொதுஜனபெரமுனவுடன் கூட்டிணைந்து அடுத்து வரும் தேர்தல்களுக்கு முகங்கொடுப்போம்.

கேள்வி:- அடுத்த தேர்தல்களை முகங்கொடுப்பதற்காக பரந்துபட்ட கூட்டணியை அமைக்க தயாராகியுள்ள சு.க, பொதுஜனபெரமுனவுடன் கூட்டிணைய முன்வருமா?

பதில்:- சு.க.வினை பலப்படுத்த வேண்டியது உண்மைதான். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து இருக்கும் வரையில் அவர்களுக்கு சு.க.வின் வாக்காளர்களோ அல்லது இடதுசாரித்துவ நிலைப்பாட்டில் உள்ளவர்களோ வாக்களிக்கப்போவதில்லை. கடந்த தேர்தலில் இது நிருபணமாகியுள்ளது. ஐ.தே.க. மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளே கிடைத்திருந்தன. வடக்கு கிழக்கில் ஜனாதிபதி மைத்திரியுடன் இருந்ததன் காரணத்தால் டக்ளஸ், அதாவுல்லா, ஹிஸ்புல்லா போன்றவர்களுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தன.

கூட்டமைப்பு, மு.க, அ.இ.ம.க கட்சிகளின் வாக்குகள் குறைவடைந்தன. எவ்வாறாயினும் ஒட்டுமொத்தமாக சு.கவிற்கு கிடைத்த 14இலட்சம் வாக்குகளில் இரண்டு இலட்சம் கூட சு.கவினது இல்லை. சு.கவின் வாக்குகள் அனைத்தும் பொதுஜனபெரமுனவிற்கே சென்றன. ஆகவே ஐ.தே.க.வுடன் இணைந்திருக்கும் பட்சத்தில் சு.க.வினை மறுசீரமைக்கவே முடியாது. இந்த யதார்த்தத்தினை உணர்ந்தால் கூட்டிணைய வேண்டியது அவசியமாகின்றது.

கேள்வி:- இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரியிடம் பேசினீர்களா?

பதில்:- ஆம், நாம் இவற்றைக் கூறுகின்றபோது அதனை அவர் ஏற்றுக்கொள்கின்றார். ஆனால், தீர்மானம் எடுத்து நடைமுறைப்படுத்துவதில் தான் தாமதங்கள் ஏற்படுகின்றன.

கேள்வி:- ஜனாதிபதி நீங்கள் கூறிய விடயங்களை ஏற்றுக்கொள்வாராயின் கூட்டு அரசாங்கத்திலிருந்து வெளியேறும் முடிவினை எடுப்பதற்கு பின்னடிப்பதேன்?

பதில்:- ஐ.தே.க.வுடன் இணைந்து செயற்பட முடியாது என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார். எனினும் அவர் ஜனாதிபதியாகுவதற்கு ஐ.தே.க உதவியளித்துள்ளதால் அரசாங்கத்திலிருந்து வெளியேறும் தீர்மானம் எடுப்பதற்கு அக்கட்சி அழுத்தங்களைப் பிரயோகித்து தடுகின்றது. மறுபக்கத்தில் ஜனாதிபதியுடன் உள்ள 23பேரும் அமைச்சுப்பதவிகளை வகிக்கின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் அமைச்சுப்பதவிகளில் நீடிப்பதற்கு விரும்புகின்றார்கள். அவ்வாறானவர்கள் பொய்யான கதைகளை வலிந்து கூறி அழுத்தங்களை பிரயோகிக்கின்றார்கள்.

குறிப்பாக அடுத்த தேர்தலில் ஜனாதிபதி மைத்திரியை பொதுவேட்பாளராக ஐ.தே.க களமிறக்கும் என்று அவருக்கு நம்பிக்கை அளிக்கின்றார்கள். அது ஒருபோதும் நடக்கப்போவதில்லை. ஒருவேளை அவ்வாறு களமிறக்கினாலும் ஐ.தே.க வாக்குகள் ஜனாதிபதியை ஏமாற்றமுடியாது. அவருடன் இருக்கும் 23பேரில் ஒரு சிலர் ஐ.தே.வின் பக்கம் சென்றுவிடுவார்களோ என்ற சந்தேகமும் அவருக்கு உள்ளது.

அரசாங்கத்திலிருந்து வெளியேறி சு.க.தலைமையில் அரசாங்கத்தினை அமைத்தால் தற்போதைய நிலையில் ஒருவரே ஐ.தே.க பக்கம் செல்வார். தொடர்ந்தும் அரசாங்கத்தில் நீடித்தால் ஐ.தே.க.பக்கம் செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கேள்வி:- சு.க அரசாங்கத்திலிருந்து வெளியேறினால் கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள அதன் உறுப்பினர்கள் மீளவும் உள்ளீர்க்கப்படுவார்களா?

பதில்;:- அவ்வாறில்லை. முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட சு.க உறுப்பினர்கள் உத்தியோக பூர்வமாக மொட்டுக் கட்சிக்கு சென்றாகிவிட்டது. ஆகவே அக்கட்சி உட்பட தினேஸ், விமல், வாசு, திஸ்ஸ போன்றவர்களின் கட்சிகளை இணைத்து சு.க முன்னணியொன்றையே அமைக்க முடியும்.

கேள்வி:- முன்னாள் ஜனாதிபதி உட்பட சு.கவின் முக்கிஸ்தர்களை கட்சியினுள் மீளிணைக்க முடியாதா?

பதில்:- அவர்கள் பொதுஜனபெரமுனவிலிருந்து இனி வருவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. சட்ட ரீதியான காரணங்களால் தான் அதனை அவர்கள் அறிவிக்காது உள்ளார்கள்.

கேள்வி:- 95உறுப்பினர்களே ஐ.ம.சு.மு. சார்பில் இறுதித் தேர்தலில் தெரிவாகியுள்ளதோடு அதற்குள்ளும் முரண்பாடுகள் உள்ள நிலையில் எவ்வாறு அரசாங்கத்தினை அமைப்பீர்கள்?

பதில்:- 120உறுப்பினர்கள் வரையிலானவர்கள் இருந்தால் போதுமானது. பாராளுமன்றில் அப்பெரும்பான்மையை காண்பிப்பது எமக்கு இலகுவானது.

கேள்வி:- ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சில உறுப்பினர்கள் இணைவார்கள் என்று கூறப்படுகின்றதே?

பதில்:- ஆம், நிச்சயம் இணைவார்கள்

கேள்வி:- அவ்வாறான கலந்துரையாடல்கள் ஏதும் இடம்பெற்றுள்ளனவா?

பதில்:- ஆம்

கேள்வி:- எத்தனை உறுப்பினர்கள் இணைவதற்கு சாத்தியமுள்ளன?

பதில்:- எண்ணிக்கையை கூற முடியாது. அவ்வாறு கூறுவது எமக்கு பாதகமாகும். எமக்கு தேவையானதை விடவும்

இணைவதற்கு உறுப்பினர்கள் உள்ளனர்.

கேள்வி:- சிறுபான்மை தரப்புக்கள் ஐ.தே.க கூட்டணியில் அல்லவா இருக்கின்றன?

பதில்:- தொண்டமான், டக்ளஸ் எம்முடனே இருக்கின்றார்கள். ரவூப், ரிஷாட் உட்பட ஏனையவர்களுக்கு நாம் அழைப்பு விடுப்போம். அப்போது அவர்களும் வருவார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. அவர்கள் எம்முடன் இணைந்து பயணிப்பதே அடுத்த பொதுத்தேர்லில் அவர்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்.

கேள்வி:- சு.க, பொதுஜனபெரமுன உள்ளிட்ட பரந்து பட்ட கூட்டணி அமையும் பட்சத்தில் இந்நாள் முன்னாள் ஜனாதிபதிகள் வெவ்வேறாக இருக்கின்றபோது கூட்டணிக்கான தலைமை, ஜனாதிபதி, பிரதமர் வேட்பாளர்கள் போன்ற தெரிவுகளை எல்லாம் சுமுகமாக செய்ய முடியும் என்று நம்புகின்றீர்களா?

பதில்:- இந்த விடயங்களை எல்லாம் கலந்துரையாடல்கள் மூலம் தீர்க்க முடியும். மஹிந்த ராஜபக்ஷவின் பக்கத்தில் தான் வாக்களர்கள் இருக்கின்றார்கள். ஆகவே அவர் பொருத்தமானவரை நியமிப்பார்.

கேள்வி:- மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது நம்பிக்கை உள்ளது என கருதுகின்றீர்களா?

புதில்:- 16 வருடங்களாக தலைவர், பொதுச்செயலாளராக கட்சியில் இருவரும் பணியாற்றியுள்ளார்கள். இதன்போது எவ்விதமான மோதல்களும் இருக்கவில்லை. பொதுவேட்பாளரான சமயத்தில் தான் சில கசப்புணர்வுகள் ஏற்பட்டன. எனினும் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சு.க.வினையும், ஆதரவாளர்களையும் பாதுகாக்குமாறு கூறியே மஹிந்த, ஜனாதிபதி மைத்திரியிடம் கட்சியை ஒப்படைத்தார். ஆகவே, அவர்கள் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் பாரிய இடைவெளி ஏற்பட வாய்ப்பில்லை.

கேள்வி:- ஜனாதிபதி மைத்திரி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைய வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டினை எடுத்துள்ளாரா?

பதில்:- நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று ஐ.தே.கவுடன் பயணிக்கமுடியாது என்ற நிலைப்பாட்டினை எடுத்துள்ளார். அதற்கு மேல் எனக்கு எதையும் கூற முடியாது. அது எமக்கே பாதகத்தினை ஏற்படுத்தும்.

கேள்வி:- தற்போது ஐ.தே.கவுடன் சு.க இணைந்திருப்பதை விமர்சிக்கும் நீங்கள் தேர்தலின் பின்னர் இணைவதற்கான முடிவை எடுக்கும் போது அதுகுறித்த பாராதூரமான நிலைமைகளை கூறவில்லையா?

பதில்;:- ஜனாதிபதி மைத்திரிபால பொதுவேட்பாளராக களமிறங்கியபோது, துமிந்த, சொய்ஸா, ஜனக்க, ரெஜினோல்ட் போன்றவர்கள் மாற்று அரசாங்கம் சம்பந்தமாக என்னுடன் கலந்துரையாடினார்கள். சந்திரிகாவின் காலத்தில் சு.க.வினை விட்டு நான் வெளியேறி ஐ.தே.கவுடன் இணைந்தது தான் செய்த மிகப்பெரும் தவறு என்பதை உணர்ந்தேன். அதன் பின்னர் மீண்டும் சு.கவில் இணைந்துகொண்டேன். ஆகவே நான் மாற்று யோசனையை ஏற்கமாட்டேன் என்று கூறிவிட்டேன். 

பின்னர் ஜனாதிபதி மைத்திரி வெற்றி பெற்றபின்னர் அவ்வாறான தீர்மானம் எடுத்தபோது நாம் எதிர்ப்பினை வெளியிட்டோம். அதன்போது நாட்டையும், கட்சியையும் பாதுகாப்பதற்காக என்னுடன் இணையுங்கள். ஐ.தே.கவின் அரசாங்கம் இல்லை. எனது தலைமையிலான அரசாங்கம் என்பதால் அனைவரும் இணைந்து கொள்ளுங்கள் என்றார். முதலில் ஒருவருடகாலத்திற்கு என்றே கூறப்பட்டது. ஜனாதிபதி நாட்டின் தலைமையைக் கொண்டிருந்தாலும் பொருளாதார விடயங்கள் அனைத்தையும் ரணிலே கையாண்டார். அந்தவிடயங்கள் அனைத்தும் தோல்வியடைந்து நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

கேள்வி:- தாய்லாந்தில் விருதுபெற்ற மங்கள தேரருக்காக கண்டியில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் முன்னாள் இந்நாள் ஜனாதிபதிகள் அரங்கிலிருந்தபோது தாங்களும் அருகில் இருந்தீர்களே அரசியல் சார்ந்த கருத்துக்கள் பகிரப்பட்டனவா?

பதில்:- அந்த நிகழ்வினை நானே ஏற்பாடு செய்து இரு ஜனாதிபதிகளையும் அழைத்திருந்தேன். அங்கு எவ்விதமான அரசியல் கருத்துக்களும் பரிமாறப்படவில்லை. ஆனால் சுமுகமாக  லந்துரையாடினார்கள்.

கேள்வி:- இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுமா? 

பதில்:- இடைக்கால அரசாங்கத்தை உத்தியோக பூர்வமாக ஏற்படுத்துவதற்கு சட்ட ரீதியாக இயலாது. ஐ.தே.க. தவிர்ந்து இடதுசாரித்துவ முற்போக்கான அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பதே எமது  நிலைப்பாடாகும். அதனை இடைக்கால, காபந்து அரசாங்கம் என்று அழைக்க முடியாது.

கேள்வி:- 2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்துடன் மாற்று அரசாங்கத்திற்கு வாய்ப்பு உண்டா?

பதில்:- மாற்று அரசாங்கம் உடனடியாகச் சாத்தியமில்லை. அடுத்த தேர்தலிலாவது எமது இலக்கு சாத்தியமாகும்.

கேள்வி:- 19ஆவது திருத்தச்சட்டத்தில் காணப்படுகின்ற பலவீனத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமுடியும் எனக் கூறுப்படுகின்றதே?

பதில்:- நான் சட்டத்தரணி அல்ல. இருப்பினும் அது இயலாது என்றே கருதுகின்றேன். ஜனாதிபதி மைத்திரிபால தனது பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்திடம் கோரியபோது ஐந்தாண்டுகள் என்றே தீர்ப்பளித்துள்ளதால் அது மஹிந்தவுக்கும் பொருந்தும் என்றே கருதுகின்றேன்.

கேள்வி:- அடுத்த ஜனாதிபதி வேட்பாளருக்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய அல்லது பசில் ஆகியோரில் ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டால் எத்தகைய நிலைப்பாட்டினை எடுப்பீர்கள்?

பதில்:- அவர்கள் இருவரும் தமது இரட்டைக் குடியுரிமையை நீக்க வேண்டும். இவர்கள் இருவரல்ல அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக எவர் முன்மொழியப்பட்டாலும் நாம் எமது ஆதரவை முழுமையாக வழங்குவோம்.

கேள்வி:- தங்களது அரசியல் பட்டறிவின் பிரகாரம் நீடிக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டமுடியாது போனமைக்கு பிரதான கட்சிகள் காரணமாகின்றன என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்:- தமிழர்கள் அதிகாரத்தினை 1905இல் முதலில் கோரினார்கள் 1912, 1921, 1936,1946,1948,1978 என தொடர்ச்சியாக கோர ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் நிருவா ரீதியாக இணைத்துக்கொள்ளுமாறும், பின்னர் மூன்றிரண்டு, ஐம்பதுக்கு ஐம்பது, சமஷ்டி, தனி ஈழம் என அதிகாரங்களைப் பகிர்ந்து வழங்குமாறு கோரினார்கள். இக்காலத்தில் அரசியல் ரீதியான இப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. பிரதான அரசியல்கட்சிகளான ஸ்ரீ.சு.க, ஐ.தே.க. ஆகிய இரண்டும் இந்த விடயத்தில் தவறிழைத்துள்ளன. அவை இதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கேள்வி:- தற்போதைய சூழலில் நீடிக்கும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு சந்தர்ப்பங்கள் உள்ளனவா?

பதில்:- இந்தப்பிரச்சினைக்கு பிரதமராக இருக்கும் ரணிலால் ஒருபோதும் தீர்வினை வழங்க முடியாது. ரணில் எந்த தீர்வினை தமிழர்களுக்கு வழங்கினாலும் முழு நாடும் வழங்கப்பட்டு விட்டதாகவே பெரும்பான்மை சிங்கள மக்கள் கருதுவார்கள். ஆகவே அவரால் ஒருபோதும் தீர்வினை வழங்க இயலாது. அதேநேரம் சிங்கள, பௌத்த மக்கள் நம்பிக்கை கொண்டுள்ள தலைவர்களாலேயே தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்க முடியும். அதற்கு பொருத்தமான இரண்டு தலைவர்களாக மைத்திரியும், மஹிந்தவும் இருக்கின்றார்கள். மஹிந்தவை பெரும்பான்மை பௌத்த சிங்களவர்களும், மைத்திரியை சிறுபான்மை மக்களும் நம்புவதால் தீர்வு காண்பது இலகுவானதும், சாத்தியமானதுமாகும். ஆகவே இவ்விரண்டு தலைவர்களும் தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்கின்றபோது நாட்டில் உள்ள அனைவரும் அதனை ஏற்றுக்கொள்வார்கள்.

கேள்வி:- தற்போது புதிய அரசியமைப்புக்கான இறுதி வரைவு தயாராகியுள்ள நிலையில் அது சாத்தியமாகாது போய்விடுமா?

பதில்:- புதிய அரசியலமைப்பு என்பது வெற்றியடையாத விடயமாகும். அது ரணிலின் பொய்யான செயற்பாடாகும். இச்செயற்பாட்டின் ஈற்றில் மைத்திரி இதனை எதிர்கின்றார் என்று காரணங்கூறி அதனை கைவிடுவதே ரணிலின் திட்டமாகும்.

கேள்வி:- தங்களுடைய பார்வையில் எந்த அடிப்படையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று கருதுகின்றீர்கள்?

பதில்:- முதலில் என்ன பிரச்சினை இருக்கின்றது என்று கூறுங்கள் பார்க்கலாம்?

கேள்வி:- தேசிய ரீதியாக பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் பிரதான கட்சிகள் பொறுப்புக்கூற வேண்டும் என்று தாங்களே கூறியுள்ளீர்கள் அல்லவா? அதிகாரப்பகிர்வு முதல் பல்வேறு கோரிக்கைகள் உள்ளனவே?

பதில்:- தற்போதுள்ள அதிகாரங்களை வைத்து என்ன செய்துள்ளார்கள்? உண்மையான நிலைமை அதுவல்ல. வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் பலர் விடுதலைப்புலிகளுக்கு பயந்தவர்கள். தற்போது கூட இத்தகைய அரசியல்வாதிகளை புலம்பெயந்த நாடுகளில் உள்ளவர்கள் புலிகளின் நிதியைப் பயன்படுத்தி கையாளுகின்றார்கள். இந்த அரசியல்வாதிகளின் பிள்ளைகள் வெளிநாடுகளில் புலிகளின் பணத்திலேயே உயர்கல்வியை மேற்கொண்டு சுகபோகமாக வாழ்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இது பொருந்தும். அவர்களின் பிள்ளைகளும் இவ்வாறு தான் உள்ளார்கள்.  ஆகவே இத்தகைய பின்னணியைக் கொண்ட அரசியல்வாதிகளுக்கு சுதந்திரமாக சிந்திக்கவோ செயற்படவோ முடியாது.

ஆகவே தான் அந்த அரசியல்வாதிகள் பிரச்சினைகள் உள்ளதாக காட்டிக்கொண்டு தமது விடங்களை நகர்த்துக்கொண்டு செல்கின்றார்கள். அப்படியிருக்கையில் தற்போதுள்ள முதலமைச்சருக்கு சிறந்த நீதியரசராக இருந்தபோதும் அரசியல் ரீதியாக எதுவுமே அவருக்கு தெரியாது. இளைஞர்கள் கை தட்டுவதற்கு ஏற்ப கோஷங்களை எழுப்பிக்கொண்டிருக்கின்றார். அவருக்கு எந்தவிமான அரசியல் கொள்கையும் கிi;டயாது.

சிறுபிள்ளைத்தனமாக அவர் நடந்து கொள்கின்றார். இந்த நாட்டில் ஒருபோதும் ஈழத்தினையோ சமஷ்டியையோ அவர்களால் பெற்றுக்கொள்ள முடியாது. 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள காணி பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் இருதரப்பும் பாதகமற்ற வகையில் ஏற்றுக்கொள்ளும் தீர்மானங்களை எடுத்து அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கே சந்தர்ப்பம் உள்ளது. அதற்கு மேல் எதுவும் சாத்தியமில்லை. அதற்கு மேல் செல்வதற்கு நாம் முன்வந்தாலும் இந்தியா இடமளிக்காது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22