இந்தியாவை புகழ்ந்து பேசியது ஏன்? என்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் அப்ரிடி விளக்கம் அளித்துள்ளார். 

அப்ரிடி கருத்துக்கு எதிர்ப்பு

ஐ.சி.சி. இருபது-20  உலகக் கிண்ணத் தொடரில்  விளையாடுவதற்காக இந்தியா சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் அப்ரிடி கொல்கத்தாவில் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானை விட இந்தியாவில் எங்கள் மீது அதிக அன்பு காட்டப்படுகிறது. வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறோம். இங்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை நாங்கள் ஒருபோதும் உணர்ந்தது இல்லை’ என்று தெரிவித்து இருந்தார். 

இந்த பேட்டி அப்ரிடிக்கு பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அப்ரிடியின் கருத்து வெட்கக்கேடானது என்று முன்னாள் அணித் தலைவர் ஜாவித் மியாண்டட் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். பாகிஸ்தானை சேர்ந்த மூத்த சட்டத்தரணி அசார் சித்திக் என்பவர் அப்ரிடிக்கு மனு அனுப்பி இருக்கிறார். 

நேர்மறையாக பாருங்கள்

இந்த நிலையில் தனது கொல்கத்தா பேட்டி குறித்து அப்ரிடி விளக்கம் அளித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் சபையில்  ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஆடியோ பதிவாக வெளியிடப்பட்டுள்ள அப்ரிடியின் பேச்சில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பாகிஸ்தான் மக்களின் பிரதிநிதியாகவே இந்த போட்டியில் பங்கேற்றுள்ளேன். பாகிஸ்தான் ரசிகர்கள் இல்லாமல் நான் இல்லை. எனது பேச்சை நேர்மறையாக பாருங்கள். பாகிஸ்தானையும், ரசிகர்களையும் குறைத்து எதுவும் சொல்லவில்லை என்பது அப்போது புரியும். எல்லோரையும் விட பாகிஸ்தான் ரசிகர்கள் தான் எனக்கு முக்கியம். எனது முழுமையான அடையாளம் அளித்தது பாகிஸ்தான் தான். 

என்னிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களுக்கு நேர்மறையான பதில் அளிக்க முயற்சிக்கையில் சொன்ன வார்த்தை தான் (இந்தியாவை புகழந்தது) அது. நான் என்ன சொன்னாலும் அது உலகம் முழுவதும் கவனிக்கப்படும் என்பது எனக்கும் தெரியும். எனவே தான் நேர்மறையான பதிலை அளித்தேன். இந்தியாவில் விளையாடுகையில் நாங்கள் அதிகம் அனுபவித்து விளையாடுகிறோம் என்று நான் சொன்னதை தான் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், இன்ஜமாம் போன்றோரிடம் கேட்டாலும் சொல்லி இருப்பார்கள். ஏனெனில் அந்த அளவுக்கு இங்கு கிரிக்கெட் ஒரு மதமாக போற்றப்பட்டு வருகிறது. நான் நல்ல நோக்கத்துடன் தெரிவித்த கருத்தை சிலர் எதிர்மறையாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

வக்கார் யூனிஸ் கருத்து

இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் கருத்து தெரிவிக்கையில், ‘என்னை பொறுத்தமட்டில் அப்ரிடி சொன்னதில் சர்ச்சை எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அவரது மனதில் பட்டதையும், உணர்ச்சியையும் வெளிப்படுத்தி இருக்கிறார். நாங்கள் இந்த விவகாரத்தை தள்ளிவைத்து விட்டு, தரமான கிரிக்கெட்டை விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே சிறந்த திட்டமாகும்’ என்று தெரிவித்துள்ளார்.