(கொல்கத்தாவிலிருந்து நெவில் அன்தனி)

கொல்கத்தா ஈடன் கார்ட்ன் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான குழு 2இற்கான சுப்பர் 10 உலக இருபது 20 கிரிக்கட் போட்டியில் சகல துறைகளிலும் பிரகாசித்த பாகிஸ்தான் 55 ஓட்டங்களால் வெற்றியீட்டியது மிகவும் அவசியமான 2 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.

அண்மைக்காலமாக பின்னடைவு கண்டுவந்த பாகிஸ்தானுக்கு இந்த வெற்றி உற்சாகமூட்டுவதாக அமைகின்றது என அணித் தலைவர் ஷஹித் அவ்றிடி போட்டி முடிவில் குறிப்பிட்டார்.

சிரேஷ்ட வீரர் என்ற வகையிலும் அணித் தலைவர் என்ற வகையிலும் பொறுப்புளை ஏற்று செயற்பட வேண்டும் என கருதியதால் பயிற்றுநருடன் ஆலோசனை நடத்தி முன்வரிசையில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்ததாகவும் அது வெற்றி அளித்ததாகவும் ஆட்ட நாயகன் ஷஹித் அவ்ரிடி தெரிவித்தார். 

பாகிஸ்தான் அணியில் அஹ்மத் ஷேஹ்ஸாத் மீண்டும் விளையாடும் அதேவேளை பங்களாதேஷ் அணியில் மிக முக்கிய வேகப்பந்துவீச்சாளர் முஷ்தாஃபிஸ{ர் ரஹ்மான் இடம்பெறவில்லை. 

இலங்கைக்கு எதிரான ஆசியக் கிண்ண கிரிக்கட்  போட்டிக்குப் பின்னர் உபாதைக்குள்ளான முஸ்தாஃபிஸ{ர் ரஹ்மான் இன்னும் உபாதையிலிருந்து மீளவில்லை என இன்றுக் காலை அறிவிக்கப்பட்டது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்களை இழந்து 201 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்ப வீரர் அஹமத் ஷேஹ்ஸாத் 39 பந்துகளில் 8 பவுண்ட்றிகள் அடங்கலாக 52 ஓட்டங்களையும் 3ஆம் இலக்க வீரர் மொஹமத் ஹவீஸ் 42 பந்துகளில் 2 சிக்சர்கள், 7 பவுண்ட்றிகள் அடங்கலாக 64 ஓட்டங்களையும் பெற்றனர். 

இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கட்டில் 68 பந்துகளில் 116 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்தமை பாகிஸ்தானின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தது.

துடுப்பாட்ட வரிசையில் தன்னை 4ஆம் இலக்கத்திற்கு உயர்த்திக்கொண்ட அணித் தலைவர் ஷஹித் அவ்றிடி அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 19 பந்துகளில் 4 சிக்சர்கள், 4 பவுண்ட்றிகள் அடங்கலாக 49 ஓட்டங்களைக் குவித்தார்.

அத்துடன் மூன்றாவது விக்கட்டில் ஹவீஸ{டன் 22 பந்தகளில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

முதல் பத்து ஓவர்களில் ஒரு விக்கட்டை இழந்து 90 ஓட்டங்களைப் பெற்றிருந்த பாகிஸ்தான் கடைசி பத்து ஓவர்களில் 4 விக்கட்களை மாத்திரம் இழந்து 111 ஓட்டங்களைக் குவித்தது.

பங்களாதேஷ் பந்துவீச்சில் தஸ்கின் அஹ்மத் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கட்களையும் அரபாத் சனி 34 ஓட்டங்களுக்கு 2 விக்கட்களையும் கைப்பற்றினர்.

202 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் முதலாவது ஓவரின் மூன்றாவது பந்தில் சௌமியா சர்காரின் விக்கட்டை இழந்தது. ஆனால் இரண்டாவது விக்கட்டில் தமிம் இக்பாலும் சபிர் றஹ்மானும் வேகமாக துடுப்பெடுத்தாடி 32 பந்துகளில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அதன் பின்னர் விக்கட்கள் சரிய 20 ஓவர்கள் நிறைவில் பங்களாதேஷ் 6 விக்கட்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் ஷக்கிப் அல் ஹசன் (50 ஆ.இ.,), சபிர் றஹ்மான் (25), தமிம் இக்பால் (24) ஆகிய மூவரே சிறப்பாக செயற்பட்டனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் மெஹமத் ஆமிர், ஷஹித் அவ்றிடி ஆகிய இருவரும் தலா 27 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கட்களை வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக சயிட் அப்பரிடி தெரிவு செய்யப்பட்டார்.