(ப.பன்னீர்செல்வம்)

நாட்டில் வாழும் அனைத்து மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் சூழலை ஏற்படுத்தி வடக்கு, கிழக்கு பிரச்சினைகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகான வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, கடந்த ஆட்சியாளர்கள் ஆடம்பரச் செலவுகளை செய்து நாட்டை கடன் சுமையில் தள்ளிவிட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். 

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே உயர் கல்வி, நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றும்போது, 

இருபது வருடங்களாக நாட்டை ஆட்சி செய்தவர்கள் பெற்றுக் கொண்ட கடன்களால் நாடு இன்று கடன் பொறிக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. இந்த கடன்பொறிக்குள் மேலும் பல கடன்கள் மறைந்துள்ளன. எனவே மொத்த கடன் எவ்வளவு என்பதனை கணக்கிட முடியாதுள்ளது.

இக் கடன்களினால் எமது நாட்டுப் பொருளாதாரமும் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது. எந்தவிதமான திட்டமும் இல்லாமல் வரையறை மீறப்பட்டு கடந்த ஆட்சியாளர்கள் கடன்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இவ்வாறு கடன்களைப் பெற்றுக் கொண்டு ஆடம்பரச் செலவுகளை செய்துள்ளனர். கூட்டுத்தாபனங்கள், வங்கிகளினூடாகவே திறைசேரி கடன்களைப் பெற்றுள்ளது.