சவூதி அரேபியாவில் ஒரு பத்திரிகையாளரின் விமர்சனத்தின் விலை

Published By: Vishnu

12 Oct, 2018 | 12:26 PM
image

துருக்கிய அதிகாரிகளினால் கடந்த ஒரு வார காலமாக வெளியிடப்படுகின்ற அறிக்கைகள் திகைக்கும்படியான  துணிச்சலான குற்றச்செயல் ஒன்று நடந்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகின்றன. சவூதி அரேபியாவின் உரத்த மறுப்புகளுக்கு மத்தியிலும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை அல்ல என்று நம்புவதற்கு சகல காரணங்களும் இருக்கின்றன.

அஞ்ஞாதவாசம் செய்யும் சவூதி பத்திரிகையாளர் ஜமால் கஷொக்கி பத்து நாட்களுக்கு முன்னர் தனது விவாகரத்து தொடர்பான பத்திரங்களைப் பூர்த்திசெய்யுமுகமாக இஸ்தான்புல் நகரில் உள்ள தனது நாட்டின் துணைத்தூதரகத்திற்குச் சென்றார். அதற்குப் பிறகு அவரைக் காணவில்லை.விசாரணையொன்று தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஆனால், அவர் துணைத் தூதரகத்திற்குள் சென்ற அன்றைய தினமே சவூதி அரேபியாவில் இருந்து தனிப்பட்ட விமானமொன்றில் துருக்கி வந்த 15 பேர் கொண்ட தாக்குதல் குழுவினால் அவர் முதலில் சித்திரவதை செய்யப்பட்டு பிறகு கண்டதுண்டமாக வெட்டப்பட்டார் என்றே துருக்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

கஷொக்கி துணைத் தூதரகத்திற்குள் சென்ற பிறகு சுமார் இரு மணித்தியாலங்கள் கழித்து வாகன அணியொன்றின் அங்கமாக வளாகத்தில் இருந்து வெளியேறிய கறுப்பு நிற வான் ஒன்றின் மீதே துருக்கிய அதிகாரிகள் தங்கள் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்கள். அந்த வானில் பல பெட்டிகள் ஏற்றப்பட்டதற்கான அறிகுறிகள் இருக்கின்றன. ஆம், பெட்டிகள் தான் சவப்பெட்டி இல்லை. துணைத் தூதரகத்திற்குள் இருந்து தகவல் தருபவர்களினால் தெரிவிக்கப்பட்டிருக்கக்கூடிய விபரங்களின்படி பத்திரிகையாளர் கஷொக்கி கொலைசெய்யப்பட்டு அவரது சடலம் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு துருக்கிக்கு வெளியே கொண்டுசெல்லப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமான துருக்கிய அதிகாரிகள் நம்புகிறார்கள்.

துணைத்தூதரகத்திற்குள் பிரவேசித்த சொற்ப நேரத்திற்குள்ளாகவே கஷொக்கி அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிட்டார் என்று சவூதி அரேபியா கூறியிருக்கிறது. அவ்வாறானால் அதைச் சான்றுகளுடன் சவூதி நிரூபிக்கவேண்டும் என்று துருக்கிய அதிருப்தியாளர்களுடன் ஈவிரக்கமின்றி நடந்துகொள்பவர் என்று பெயரெடுத்த ஜனாதிபதி றிசெப் தயிப் எர்டோகான் கேட்டிருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக துணைத் தூதரகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்புக் கமராக்களுக்கு குறைவில்லை. சம்பவதினமான அக்டோபர் 2 ஆம் திகதி அந்த கமராக்கள் கண்காணித்ததைப் பதிவுசெய்யவில்லை என்று சவூதி அதிகாரிகள் நொண்டிச்சாட்டு ஒன்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.இதை தற்செயலானது என்று சொல்லமுடியுமா? 

கஷொக்கியை ஒழித்துக்கட்டுவதற்கு சவூதி அரசாங்கம் ஏன் விரும்பியிருக்கவேண்டும் என்பது மிகப்பெரியதொரு கேள்வியாகும்.அவர் சவூதி அரசாங்கத்தை இடையறாது விமர்சனம் செய்பவர் தான்.ஆனால், புரட்சி குறித்து நியாயப்படுத்தி அவர் பேசியதில்லை. தனது பத்திரிகைத்துறை வாழ்க்கையில் பெருமளவு காலம் கஷொக்கி சவூதியின் ஆளும் குடும்பத்துடன் மிகவும் நெருக்கமானவராகவே இருந்துவந்துள்ளார். சவூதி புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரான இளவரசர் துர்கி பைசால் லண்டனுக்கும் வாஷிங்டனுக்குமான தூதுவராக பணியாற்றிய காலத்தில் அவருக்கு ஆலோசகராக கஷொக்கி செயற்பட்டார். றியாத்துக்கு விஜயம் செய்கின்ற வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் சவூதியின் ஆளும் அல் சவூத் குடும்பம் எத்தகைய சிந்தனையைக் கொண்டிருக்கின்றது என்பதை அறிந்துகொள்வதற்கான ஒரு ஆதாரமாக கஷொக்கியையே நம்பினார்கள்.

ஒரு இளம் நிருபர் என்ற வகையில், கஷொக்கி அல்- கயெடா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் ஆப்கானிஸ்தானில் இருந்து செயற்பட்ட ஆரம்பக்கட்டத்தில்அவரது அணியினருடன் ஒன்றாக இருந்து செய்தி சேகரித்தார். அடுத்து அவர் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் தொடர்பில் சவூதி அரேபியா கொண்டிருந்த கடுமையான எதிர்ப்புணர்வை ஆட்சேபித்தார்.

குறிப்பாக , எகிப்தில் முஸலிம் சகோதரத்துவ இயக்கத்தின் முஹமத் முர்சி ஜனாதிபதியாக இருந்தபோது அவரது அரசாங்கத்தைக் கவிழ்த்த சதிப்புரட்சிக்கு சவூதி அரசாங்கம் முழு மனதுடன் பங்களிப்புச் செய்தததை கஷொக்கி அடியோடு வெறுத்தார். சவூதி அரேபியாவுக்குள் உள்ள பழமைவாத மதத்தலைவர்களை அவர் எதிர்த்தார்.

தனது இந்த எதிர்ப்புகளுக்காக ஒரு விலையை கஷொக்கி செலுத்தவேண்டியேற்பட்டது.தண்டனைகள் பலவிதமானவையாக இருந்தன.அல் - வடான் பத்திரிகையின் ஆசிரியர் பதவியை அவர் இழந்தார்.பஹ்ரெயினைத் தளமாகக் கொண்டியங்கிய சவூதிக்குச் சொந்தமான தொலைக்காட்சி சேவையின் தலைவர் பதவியில் இருந்தும் விலகவேண்டியிருந்தது.பஹ்ரெயின் அதிருப்தியாளர் நேரகாணலை ஒளிபரப்பிய கையோடு அந்த தொலைக்காட்சி அலைவரிசை மூடப்பட்டது.அவ்வாறு பதவிகளை இழந்தாலும் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் வரவில்லை.அவரது சுதந்திரமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகவில்லை.

பிறகு முஹம்மத் பின் சல்மானின் செல்வாக்கு அதிகரிக்கத்தொடங்கியதும் நிலைவரங்கள் மாறின. அவர் முதலில் முடிக்குரிய துணை இளவரசராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் வந்தார்.அடுத்து முடிக்குரிய இளவரசரானார்.மெய்யாகவே ஆட்சியை அவரே நடத்துபவராக காட்டிக்கொண்டார்.வெள்ளை மாளிகையுடனும் இஸ்ரேலின் லிகுட் கட்சியின் மேலிடத்துடனும் நேரடியான நெருக்கமான தொடர்புகளையும் அவர் வளர்த்துக்கொண்டார்.

முஹம்மத் பின் சல்மானின் 2030 சீர்திருத்த நோக்கிற்கு கஷொக்கி எந்தவகையிலும் எதிரானவராக இருக்கவில்லை.யேமன் போர் ஆரம்பிக்கப்பட்டதையும் அவர் வெளிப்படையாக ஆட்சேபிக்கவில்லை.ஆனால், முற்போக்கான நிகழ்ச்சித் திட்டம் என்று சொல்லிக்கொண்டு முஹம்மத் பின் சல்மான் முனனெடுத்த செயற்பாடுகளின் பின்னணியில் முற்றுமுழுதாக அதிகாரத்தைத் தன்வசப்படுத்தும் எண்ணத்தை அவர் கொண்டிருப்பதை கஷொக்கி விளங்கிக்கொள்ளத்தொடங்கினார் போலத் தெரிகிறது.

தனது நண்பரகள் ( அவர்களில் பலர் சீர்திருத்தவாதிகள்) சிறையலடைக்கப்பட்டதை அடுத்து சொற்ப காலத்துக்கு வெளிநாட்டில் வாழ்வதே தனக்கு பாதுகாப்பானது என்று கஷொக்கி தீர்மானித்தார்.தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெறவேண்டிய நிலை ஏற்படுவதையும் பிள்ளைகளிடமிருந்து பிரிந்துவாழவேண்டியதையும் கூட பொருட்படுத்தாமல் அவர் அந்த தீர்மானத்தை எடுத்தார்.அவரது பிள்ளைகளில் சிலர் தந்தை காணாமல் போனது தொடர்பாக சவூதியின் உத்தியோகபூர்வ விளக்கத்தையே கிளிப்பிள்ளை போன்று ஒப்புவிக்க தூண்டப்பட்டார்கள்.

வெளிநாட்டில் வாழ்வதற்கு எடுத்த முடிவு விவேகமானது தான்.ஆனால், அவருக்கு போதுமானளவுக்கு நல்லதாக அது அமையவில்லை.முடியாட்சியை தூக்கியெறிவதை நியாயப்படுத்தி கஷொக்கி பேசாவிட்டாலும், அண்மைய வருடங்களாக அவர் கூடுதலான அளவுக்கு மதசார்பின்மை மற்றும் ஜனநாயகமயமாக்கம் நோக்கி தனது கவனத்தைத் திருப்பினார்.வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு எழுதிய கிரமமான பத்திகளில் அவர் முஹம்மத் பின் சல்மானின் அடக்குமுறைப் போக்குகளை அடிக்கடி கடுமையாகச் சாடினார்.யேமன் போரையும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகுவுடனும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனும் சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு இராச்சியமும் நெருக்கமான உறவுகளை வளர்த்துவருவதையும் கஷொக்கி கண்டனம் செய்தார்.

தனது பாதுகாப்பு குறித்து நண்பர்களிடம் அவர் கவலையை வெளிப்படுத்தியுமிருந்தார்.ஆனால், ஒரு ஆலோசகராகச் செயற்படுவதற்கு றியாத்திற்கு திரும்புமாறு முஹம்மத் பின் சல்மானிடமிருந்து அவருக்கு அழைப்பும் வந்தது.அதை அவர் நிராகரித்துவிட்டார்.காணாமல் போவதற்கு ஒரு வாரம் முன்னதாக இஸ்தான்புல்லில் சவூதி துணைத்தூதரகத்துக்கு கஷொக்கி சென்றபோது அங்குள்ள உத்தியோகத்தர்கள் அடருடன் மிகவும் மரியாதையாகவும் சினேகபூர்வமாகவும் நடந்துகொண்டார்கள்.மத்திய கிழக்கு தொடர்பாக லண்டனில் நடைபெற்ற மகாநாட்டில் கலந்துகொண்டபோது இதை அவர் நண்பர்களுக்கு கூறியிருந்தார். ஆனால் , இரண்டாவது தடவை துணைத்தூதரகத்திற்குள் சென்றபோது தனக்கு என்ன நேரும் என்பதைப் பற்றி அவருக்கு தெரிந்திருக்கவில்லை போலும்.

அவர் தான் விரைவில் திருமணம் செய்யவிருந்த ஹரிஸ் சென்கிஸ் என்ற துருக்கியப் பெண்மணியை துணைத்தூதரகத்துக்கு வெளியே நிறுத்திவிட்டே உள்ளே சென்றார்.தான் திரும்பிவரத் தாமதித்தால் தொடர்புகொள்ளுமாறு ஒரு செல்போன் இலக்கத்தை அப்பெண்மணியிடம் அவர் கொடுத்திருந்தார்.

பல மணி நேரம் காத்திருந்துவிட்டு நம்பிக்கை இழந்தநிலையில் அப்பெண்மணி அந்த இலக்கத்துடன் தொடர்புகொள்ள முயற்சித்தபோது காலம் கடந்துவிட்டது.முஹம்மத் பின் சல்மானின் ஆட்சியின் தன்மை குறித்து அவரின் மேற்குலக நண்பர்கள் இப்போது என்ன நினைக்கிறார்களோ?

மாஹிர் அலி (டெக்கான் குரோனிக்கிள்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13