(எம்.சி.நஜிமுதீன்)

பொலிஸாரின் சீருடையில் மாற்றம் கொண்டுவருவதற்கு எதிர்பார்க்கிறோம். எனவே நாட்டுக்கும், பொலிஸ் சேவைக்கும், பொலிஸாரின் அபிமானத்ற்கும் ஏற்ற கௌரவமான சீருடை ஒன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் விரைவில் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம் என சட்டம், ஒழுங்கு மற்றும் தென்பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.  

பொலிஸ் திணைக்களத்தின் வெளியீடான 'கௌரவம்' எனும் பத்திரிகையின் வெளியீட்டு நிகழ்வு இன்று காலை பொலிஸ் தலைமைகயத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,  

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் பல்வேறு செயற்றிட்டங்களை முன்வைத்து வருகிறது. சட்டமும் ஒழுங்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பங்காற்றுகிறது. எனவே அதனை அமுல்படுத்துவதில் பொலிஸ் பிரிவு மிக முக்கிய வகிபங்கை ஏற்கிறது.  

தங்கொட்டுவ சம்பவம் தொடர்பில் பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதன் பின்னணியில் பாதாள உலகக் குழுக்கள் இருப்பதாகவும் அது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்துவதாக இல்லை எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.  எனினும் அப்பிரச்சினைக்கும் தீர்வு முன்வைக்க முடிந்தது. தீர்வு முன்வைக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் எவரும் பேசுவதாக இல்லை. 

எனவே பொலிஸாரின் பக்கம் உள்ள நியாயங்களை மக்கள் மத்தியில் முன்வைப்பதற்கு இந்த 'அபிமான' என்ற பத்திரிகை வழிகோலும் என எதிர்பார்க்கிறேன். மேலும் பொலிஸ் திணைக்களம் சார்பாக மாத்திரம் பேசும் பத்திரிகையாகவும் இது அமைந்துவிடாது. பொலிஸ் சேவையில் உள்ள குறைபாடுகளையும் மக்கள் மத்தியில் முன்வைக்கும் என எதிர்பார்க்கிறேன்.