''இலங்கையர்கள் பிராந்திய வர்த்தகம், தொடர்பு குறித்து கவனம் செலுத்த வேண்டும்'' 

Published By: Priyatharshan

08 Oct, 2018 | 04:06 PM
image

குறைந்த விலையில் பொருட்கள் சேவைகளை பெறுவதன் காரணமாக சாதகமான பலாபலன்களை அடைவதற்கும் வர்த்தக சமூகம் முன்னோக்கி சென்றுகொண்டிருக்கும் தென்னாசிய சந்தையினை சென்றடைவதற்கான சந்தர்ப்பத்தை பெறுவதற்கும் இலங்கையர்கள் பிராந்திய வர்த்தகம் மற்றும் தொடர்பு குறித்து கவனம் செலுத்தவேண்டுமென  இலங்கை மற்றும் மாலைதீவிற்கான உலக வங்கியின் வதிவிடப்பணிப்பாளர் கலாநிதி ஐடா ஸ்வராய் ரிடிகொவ் தெரிவித்தார்.

“பாதி நிறைந்த கண்ணாடிப்பாத்திரம் - தென்னாசியாவில் பிராந்திய வர்த்தகத்திற்கான நல்வாய்ப்புகள்” எனும் பிராந்திய அறிக்கையின் சர்வதேச வெளியீட்டின் போது கலந்துகெண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

வர்த்தகம் என்பது மீண்டும் ஒரு சர்வதேச விவாதப்பொருளாக மாறியுள்ளது. இது தற்போது உலகின் எந்த நாடும் புறக்கணிக்க முடியாத விடயமாக  காணப்படுகின்றது. அவர்கள் அவ்வாறு இதனை புறக்கணித்தால் அதனால் அவர்களிற்கே பாதிப்பு ஏற்படும்.

அனைத்து பொருளாதாரங்களும் வர்த்தகத்தில் ஈடுபடவேண்டும் என்பது புலனாகியுள்ளது. சிலர் ஏனையவர்களை விட சிறந்த முறையில் வர்த்தகத்தி;ல் ஈடுபடுகின்றனர். பொருளாதாரங்கள் ஒன்றிலொன்று தங்கியுள்ளன, இந்த போக்கை சிறந்த முறையில் தழுவிக்கொள்வதால்- தனித்து செயற்படுவதை விட நன்மைகள் அதிகம்.

இன்றைய அமர்வு தென்னாசியாவில் பிராந்திய வர்த்தகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆராயும். இதன் மூலம் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பிராந்தியத்தில் உள்ள எட்டு நாடுகளும் ஒருவருக்கொருவர் அருகில் உள்ளதால் காணப்படும்  சாதகத்தன்மையை  எவ்வாறு சாதகமாக பயன்படுத்தலாம் என்பது குறித்தும் கவனம் செலுத்தப்படும். 

சர்வதேச அளவில் வர்த்தகம் பட்டினியை குறைப்பதற்கு உதவியுள்ளது. ஆனாலும் உலகின் வறியமக்களில் மூன்று ஒரு வீதத்தினர் வாழும் தென்னாசியா உலகில் அதிகம் இணைப்பற்ற பிரதேசமாக காணப்படுகின்றது. இதன் காரணமாக குறிப்பிட்ட பொருளாதாரங்களும் அதன் பிரஜைகளும் அவர்கள் அனுபவிக்கக் கூடிய நன்மைகளை விட குறைவான நன்மைகளை அனுபவிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. எவரும் தற்போது எல்லை கடந்த வர்த்தகம் குறித்து அச்சமடைய முடியாது .மாறாக எல்லைகள் திறக்கப்பட்டவுடன் இந்த புதிய போட்டிக்கு நன்கு பழக்கப்பட்டுள்ள நிறுவனங்களும் உற்பத்திகளும் போட்டிதன்மை வாய்ந்தவையாக தொடர்ந்தும் நீடிக்கலாம். அதன்கான முயற்சிகளில் எங்கள் சக்தியை செலவிடலாம்.

இது வரையில் தென்னாசியாவின் வர்த்தகம் குறித்து ஆய்வுகள் வர்த்தகத்திற்கான தடைகள் குறித்து உயர்மட்ட கண்ணோட்டத்துடனேயே ஆராய்ந்துள்ளன. எனினும் இவ்வாறான வழிகாட்டுதல்கள் தென்னாசியா கொள்கை ரீதியான முக்கிய தடைகளை அகற்றுவதற்கான தூண்டுதல்களை வழங்கவில்லை.

நாங்கள் இன்று ஆராயவுள்ள அறிக்கையில் உலக வங்கி வர்த்தகத்திற்கான நான்கு முக்கிய தடைகள் குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளது.கொள்கைவகுப்பாளர்களிற்கு பயன் அளிக்க கூடிய நடைமுறைப்படுத்தக்கூடிய பரிந்துரைகளை வழங்குவதே இதன் நோக்கம். இந்த விடயம் தொடர்பாக காணப்படுகின்ற பெருமளவு எண்ணிக்கையிலான ஆய்வுகளை கருத்தில் கொள்ளும்போது இந்த அறிக்கை பங்கு கொள்ளும் பொருளாதாரங்களின் மீதான சாதகமான தாக்கத்தை அதிகரிக்கும் அதேவேளை, எதிர்மறையான தாக்கம் குறித்து அக்கறை செலுத்தியவாறு  தாராளமயப்படுத்தலை எவ்வாறு செய்வது என்பது குறித்து கவனம் செலுத்துகின்றது. என்ன செய்வது என்பதற்கப்பால் இந்த அறிக்கை சென்றுள்ளதுடன் எவ்வாறு செய்வது என்பது குறித்து கவனம் செலுத்தகின்றது? 

கிழக்காசியாவில் வர்த்தகம் குறித்து  அதிகளவு வெளிப்படையான அணுகுமுறையை பின்பற்றியதன் காரணமாக அநேக நாடுகள் நன்மையடைந்துள்ளதையும் இதன்காரணமாக பேண்தகு வளர்ச்சியும் வறுமை ஒழிப்பும் அதிகரித்துள்ளதையும் காண்பிக்கும் பல ஆய்வுகள் தரவுகள் அறிக்கைகள் வெளியாகியுள்ளன. 

இந்த விடயத்தில் வியட்நாம் சுவாரஸ்யமான  குறிப்பிடத்தக்க உதாரணமாகும் வியட்நாமின் வர்த்தகத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம் 190 ஆக காணப்படுகின்றது. அதேவேளை இலங்கையில் இது 37 வீதமாக காணப்படுகின்றது வியட்நாம் இலங்கையை விட பெரிய நாடு என்ற போதிலும் இந்த நிலை காணப்படுகின்றது. வியட்நாமின் வெளிநாட்டு நேரடி முதலீடு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.3 வீதமாக காணப்படுகின்றது. இலங்கையை பொறுத்தவரை இது 1.6 வீதமாக காணப்படுகின்றது. ஒட்டுமொத்தமாக வியட்நாமின் பொருளாதார வளர்ச்சி 2000 ஆண்டிற்கு பின்னர் 6.5 வீதமாக காணப்படுகின்றது.

கடந்த சில வருடங்களில் இலங்கை தனது பொருளாதாரத்தை மேலும் தாராளமயப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2017 வரவு செலவு திட்டத்தில் இலங்கை மேலதிக வரிகளை 1200 வரிச்சொற்களிற்குள் ஒழுங்குபடுத்தியது. இது குழப்பகரமான வெளிப்படையற்ற வரிநடைமுறைகளை  ஒழுங்குபடுத்தும் முக்கிய நடவடிக்கையாகும். வர்த்தகம்  மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட வர்த்தக தகவலை கடந்த யூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் வர்த்தகர்கள் அதனை சிறந்த முறையில் பயன்படுத்தியுள்ளனர். தேசிய ஒற்றைச்சாளரத்தை  உருவாக்குவதற்கான  திட்டத்திற்கான  தொழில்நுட்ப நடவடிக்கைகள் அனைத்தும் பூர்ததியாகிவிட்டன.இலங்கையின் முதலீட்டு சபை ஒற்றைசாளர முதலீட்டு செயலணியை  உருவாக்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

இந்த அறிக்கை அதிகளவிற்கு புறக்கணிக்கப்பட்ட விடயமான நம்பிக்கை குறித்து கவனம் செலுத்துகின்றது. நம்பிக்கையில்லாமல் வர்த்தகத்தில் ஈடுபடுவது கடினம்.

இலங்கையர்கள் ஏன் பிராந்திய வர்த்தகம் மற்றும் தொடர்பு குறித்து கவனம் செலுத்தவேண்டும் ஏனென்றால் குறைந்த விலையில் பொருட்கள் சேவைகளை பெறுவதன் காரணமாக சாதகமான பலாபலன்களை  அடையலாம். வர்த்தக சமூகம் பாரிய முன்னோக்கி சென்றுகொண்டிருக்கும் தென்னாசிய சந்தையினை சென்றடைவதற்கான சந்தர்ப்பத்தை பெறலாம்.

இந்த அறிக்கை பிராந்திய வர்த்தக விவகாரங்கள்  குறித்த சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு உதவுவதுடன் இவை குறித்து கலந்துரையாடுவதற்கான வலுவான  ஆதாரங்களையும் தளங்களையும் முன்வைக்கின்றது.தென்னாசியாவின் அயல்நாடுகள் மத்தியில் மேலும் இணைப்பை அதிகரிப்பதற்கான தந்திரோபாயமொன்றை உருவாக்குவதற்கு இது உதவும் என்பது எனது நம்பிக்கையாகுமெனத் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சர்வதேச வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி மூலோபாயங்களிற்கான அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30