நிலைமாற்று நீதியை அமுல்படுத்துவதில் ஊடகங்களின் பொறுப்பு

Published By: Digital Desk 4

06 Oct, 2018 | 11:23 AM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

போருக்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளை மேம்படுத்துவதற்கு பல நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டாலும் அவை பேச்சுவார்த்தைகளாகவும் அறிக்கைகளாகவுமே இருந்து வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. 

இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையானது ‘இலங்கையின் நல்லிணக்கம் ,பொறுப்புகூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான ஒரு தீர்மானத்தை அங்கீகரித்தது. அதன் பின்னர் பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுத்தல் , மற்றும் இனங்களிடையே நல்லிணக்கம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து நிலை மாற்று நீதியை அமுல்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள், வாதபிரதிவாதங்கள் இடம்பெற்றாலும் கூட இது வரை  அது சாத்தியப்படாத ஒன்றாகவே இருக்கின்றது. இதற்குப்பிரதான காரணம் இந்நாட்டு மக்களிலிருந்து உயர்பீட அரசியல்வாதிகள் வரை நிலைமாற்று நீதி என்ற விடயம் பற்றிய சரியான தௌிவும் அறிவும் போதியளவு இல்லாமையாகும்.  

இனங்களுக்கிடையிலான யுத்தம் மற்றும் நீண்ட நாள் இனக்கலவரங்களின் பின்னரான காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட இருதரப்புகளும் இணைந்து ஒரு பொதுவான நீதி பொறிமுறைக்கு வருவதையே நிலைமாற்று கால நீதி என்கிறோம். இம்முறை பல நாடுகளில் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இலங்கை போன்ற நாடுகளில் இம்முறை பற்றிய தௌிவுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கும் அரசாங்கத்தை வழிநடத்தவும் ஊடகவியலாளர்களுக்கு உள்ள பொறுப்புத்தன்மை குறித்து பார்ப்பதுவும் அவசியமாகவுள்ளது. ஏனென்றால் இலங்கை இனப்பிரச்சினை காலகட்டம்  மற்றும் போருக்கு பின்னரான செயற்பாடுகளை அறிக்கையிடுவதில் தமிழ் மற்றும் சில சிங்கள ஊடகங்கள் வெவ்வாறான நிலைப்பாட்டிலிருந்து வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. 

இந்நிலையில் நிலைமாற்று நீதி பொறி முறை அமுலாக்கம் தொடர்பில் ஊடகவியலாளர்ளுக்கு இருக்கவேண்டிய பொறுப்பு குறித்த செயலமர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு அண்மையில் கொழும்பு ஹில்டன் விருந்தகத்தில் இரண்டு நாட்கள் இடம்பெற்றன. 

நிலைமாற்று நீதி பொறிமுறை தொடர்பில் அறிக்கையிடுவதிலும் இம்முறை அமுல்படுத்தப்பட்ட பல நாடுகளுக்குச்சென்று அனுபவங்களை பெற்றவருமான தென்னாபிரிக்காவைச்சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் கரன் வில்லியம்ஸ் இந்த இரண்டு நாள் பயிற்சியை நடத்தினார். மும்மொழி ஊடகவியலாளர்கள் மற்றும் பிரதேச நிருபர்களும் இதில் பங்குகொண்டிருந்தனர். இதில் பேசப்பட்ட விடயங்கள் இங்கு தொகுத்து தரப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களிடமிருந்து ஆரம்பிக்கப்படல் அவசியம்

இந்நிகழ்வில் கலந்து கொண்ட  குழு பேச்சாளர்களின் ஒருவரான சிரேஷ்ட பத்திரிகையாளர் எம்.வித்தியாதரன்  இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் நிலைமாற்று நீதி பொறிமுறை விடயங்கள் யுத்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்களிடமிருந்து ஆரம்பிக்கப்படல் அவசியம் என்றார். 

அவர் அங்கு கருத்துரைக்கையில், 

நிலைமாற்று நீதி என்ற விடயத்தில் ஊடகங்களின் பொறுப்பு என்ற தலைப்பில் இங்கு நிகழ்வு இடம்பெற்றாலும் நீதி என்ற சொல் பதாகையில் நீக்கப்பட்டுள்ளது.   நாம் எத்தகைய சவால்களுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்பதற்கு இந்த ஓர் உதாரணம் போதுமானதாக இருக்கின்றது. 

இந்நாட்டில் சில தென்னிலங்கை பத்திரிகைகள் வடக்கு கிழக்கு வாழ் தமிழர்களின் செய்திகளை பிரசுரிப்பதில் இனவாத போக்கை காட்டி நிற்பதை இங்கு வலியுறுத்த வேண்டும். யுத்த காலத்திலும் சரி அதற்கு பின்னரும் சரி இப்போக்கு தொடர்கிறது. அரசாங்கத்திடம் நல்லிணக்கம் பற்றிய சாதகமான எண்ணப்போக்குகள் இல்லை. நெருக்கடியான காலகட்டங்களில் தமதுயிரை துச்சமென மதித்து செய்தி அறிக்கையிடலை செய்த பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். 

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர். கூடுதலாக பாதிக்கப்பட்டது தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் தான். ஆனால் இது வரை அதற்குக் காரணகர்த்தாக்களை தேடுவதில் அரசாங்கம் பாரபட்சமாக செயற்படுகின்றது. கொலை செய்யப்பட்ட சிங்கள ஊடகவியலாளர்கள் பற்றி விசாரணைகள் நடத்தும் அரசாங்கம் தமிழ் ஊடகவியலாளர்களைப்பற்றி கண்டு கொள்வதில்லை. இந்த நிலையில் எப்படி நல்லிணக்கம் சாத்தியமாகும்? ஊடகவியலாளர்களுக்கே இந்த பாரபட்சம் என்றால் பாதிக்கப்பட்ட மக்களைப்பற்றி கூறத்தேவையில்லை. அதே வேளை கொல்லப்பட்ட அச்சுறுத்தலுக்குள்ளான சிங்கள ஊடகவியலாளர்களைப்பற்றி தமிழ் பத்திரிகைகள் எழுதுகின்றன ஆனால் எந்த தென்னிலங்கை சிங்கள பத்திரிகையாவது பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களைப்பற்றி எழுதுகின்றனவா என கேட்க விரும்புகிறேன். 

ஆகவே ஊடகவியலாளர்கள் ,ஊடகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்காது இனங்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துவது சாத்தியமாகாது. நிலைமாற்று நீதி பொறிமுறையில் உண்மைகளை கண்டறியும் ஆணைக்குழுக்களை அமைத்தல் ஒரு முக்கியமான விடயமாகும். அப்படி ஒன்று அமைக்கப்படவில்லை. அது சாத்தியமாகும் பட்சத்தில் என்னிலிருந்தே விசாரணைகளை ஆரம்பிக்க முடியும். ஏனென்றால்  கண்கள் கட்டப்பட்ட நிலையில் நான் இரண்டு நாட்கள் சித்திரவதைக்குட்பட்டு உயிர் தப்பிய சம்பவம் குறித்து இது வரை அரசாங்கம் என்னிடம் ஒன்றையுமே விசாரிக்கவில்லை. 

எனக்கு என்ன நடந்தது  விசாரணைக்குப்பின்னர் என்னை பொறுப்பேற்ற  பிரதி பொலிஸ் மா அதிபர் யாரின் உத்தரவுக்கு அமைய அதை செய்தார் என்ற கேள்விகளுக்கு விடை இருக்கின்றன. அதிலிருந்து ஆரம்பித்தாலே பல விடயங்கள் வௌிச்சத்துக்கு வரும். ஏனென்றால் அப்படியானதொரு அச்சுறுத்தலுக்கு  முகங்கொடுத்து உயிர்வாழும் ஓர் ஊடகவியலாளனாக நான் மட்டுமே இருக்கிறேன்.

சில விடயங்களை தமிழ் ஊடகங்களும் வௌிப்படுத்துவதில்லை

யுத்த காலத்திலும் அதற்குப்பின்னரும்  தமிழர் தரப்புக்கு ஏற்பட்ட இன்னல்களை வௌியிடுவதிலேயே தமிழ் ஊடகங்கள் பிரதானமாக இருக்கின்றன என்று சிரேஷ்ட ஊடகவியலாளர் சமீந்திர பெர்ணான்டோ குழு உரையாடலில் கருத்துத் தெரிவித்தார். 

2009 ஆம் ஆண்டு இறுதி நேர யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலை இராணுவ வீரர்கள் சுமந்து செல்லும் படத்தையும் 2018 ஆம் ஆண்டு விசுவமடு சிவில் பாதுகாப்பு படைப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்து இடமாற்றம் பெற்றுச்சென்ற கேர்னல் ரத்னபிரியவை புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் சுமந்து செல்லும் படத்தையும் காட்சித்திரையில் காண்பித்து உரையாற்றிய அவர் ‘இந்த இரண்டு காட்சிகளையும் பார்க்கும் போது எமக்கு விளங்குவது என்ன? முன்னாள் போராளிகளையும் சகஜ வாழ்க்கைக்கு திருப்பிய ஒரு இராணுவ வீரரை கண்ணீர் மல்க வழியனுப்பி வைக்கின்றனர் மக்கள். ஆனால் இதை தமிழ் ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை. இப்படியான முரண்பாடுகள் பற்றியும் நாம் கலந்துரையாட வேண்டும் என்றார்.

முன்னாள் போராளிகளை   புலிகள் என்று அழைப்பது சரியா?  

இதே வேளை கேள்வி நேரத்தின் போது டெய்லி மிர்ரர் பத்திரிகையின் சிரேஷ்ட பத்திரிகையாளர் சுசித்த ஆர்.பெர்ணான்டோ கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் என்று நாம் செய்திகளில் குறிப்பிட்டோம். ஆனால் இப்போது புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களையும் தென்னிலங்கை சிங்கள பத்திரிகைகள் முன்னாள் புலிகள் என்ற பெயரி்ல செய்திகள் வெளியிடுகின்றன. இதை எங்ஙனம் ஏற்றுக்கொள்வது ? இச்செயல் சகஜ வாழ்க்கைக்கு  திரும்பியிருக்கும் அவர்களை மீண்டும் மனரீதியாக துன்புறுத்தும் ஒரு செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது. ஆகவே இது குறித்து ஊடகங்களுக்கிடையே புரிந்துணர்வு அவசியம் என்றார்.

ஊடகங்களால் நிலை மாற்று நீதி பொறிமுறையை செயற்படுத்த முடியும்

ஊடகவியலாளர்களால் நிலைமாற்று நீதி பொறிமுறையை அமுல்படுத்த முடியும் ஆனால் அதற்கு அவர்கள் தம்மை தயார்ப்படுத்த வேண்டியுள்ளது என தென்னாபிரிக்காவின் சிரேஷ்ட ஊடகவியலாளர் கரன் வில்லியம்ஸ் பயிற்சி கருத்தரங்கின் போது தெரிவித்தார். இதன் போது பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து உண்மை தகவல்களை எங்ஙனம் பெறுவது ,அணுகுமுறைகள் ,அரசாங்க தரப்பிற்கு அதை எவ்வாறு அறிக்கையிடுவது போன்ற விடயங்கள் குறித்து அவர் தனது அனுபவங்களையும் பகிர்ந்தார். இரண்டு நாள் செயலமர்வில் அவர் கூறிய விடயங்கள் இங்கு தரப்படுகின்றன.

இருதரப்புக்கும் ஒரே நீதி

நிலைமாற்று நீதி என்ற விடயத்தில் குற்றமிழைத்தவர்களாக கருதப்படும் இரண்டு தரப்பினருக்கும் நீதி ஒன்றாகவே இருத்தல் அவசியம். இலங்கை இனப்பிரச்சினையைப்பொறுத்தவரை இராணுவம் மற்றும் விடுதலை புலிகள் இருசாரார் பற்றியும் பேசப்படுகின்றது. இராணுவம் மீது போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன அதே வேளை விடுதலை புலிகள் மீது சிறுவர்களை போரில் ஈடுபடுத்தியமை சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் கூறப்படுகின்றன. 

ஆகவே உண்மைகளை கண்டறிவதன் மூலம் இரு தரப்புக்கும் நீதி ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பது இம்முறையின் ஒரு அம்சம். தென்னாபிரிக்காவில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதற்கு பிரதான காரணமே அது தான். நிறவெறி தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் ,பாதிக்கப்பட்டவர்கள் என இரு சாராரும் ஆணைக்குழுவின் முன் வந்து சாட்சியமளித்தனர். குற்றங்களை ஏற்றுக்கொண்டனர். 

சிலருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. அது நீதித்துறை பொறிமுறையின் அம்சம். நிலை மாற்று நீதி விடயத்தில் நாம் கலப்பு நீதிமன்றங்கள் பற்றி பேசுகிறோம். அதுவும் அமுல்படுத்தப்படல் அவசியம். இலங்கையில் காணாமல் போனோருக்கான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதொன்று ஆனால் அதன் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள்  உறவினர்களை மட்டுமல்ல வாழ்வாதாரங்களையும் இழந்துள்ளனர். அவர்களுக்கு இழப்பீட்டை வழங்க வேண்டும்.

மறுக்கும் உரிமை இராணுவத்துக்கு உள்ளது

பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தச்சொல்லி இராணுவத்தின் உயர்பீடம் உத்தரவிட்டால் அதை மறுக்கும் உரிமை இராணுவத்துக்கு உள்ளது என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். இது தனது உயரதிகாரியின் கட்டளைக்கு இயங்க மறுக்கும் செயலல்ல. இராணுவ வீரர் ஒருவருக்கும் மனித உரிமை மற்றும் போர்க்குற்றம் பற்றி தெரிந்திருக்கும். ஏனென்றால் பின்பு குற்றச்சாட்டுக்களை சுமந்து நிற்பதை விட ஆரம்பத்திலேயே இதை தடுக்கலாம். 

இராணுவ உயரதிகாரியின் கட்டளை என்பது அவருக்கு மேலே உள்ளவர்களின் கட்டளை என்றே அர்த்தப்படுகின்றது. இதை நாம் திட்டமிட்ட செயற்பாடு என்கிறோம். ஒவ்வொரு இராணுவ வீரரும் போர்க்குற்றங்கள் தொடர்பில் தனிப்பட்ட பொறுப்பை ஏற்க வேண்டும் (individual criminal responsibility) என்பதே இதன் அர்த்தம்.ஆனால் இதன் பின்னணியில் அரசியல் காரணங்களும் இல்லாமலில்லை. அதற்கு அரசியல் பிரமுகர்கள் பொறுப்பு கூறல் அவசியம். உதாரணமாக ரோகிங்யா முஸ்லிம் பெண்கள் மீதான மியான்மார் இராணுவத்தினரின் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து இங்கு ஒரு ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். 

பங்களாதேஷ் முகாம்களில் தஞ்சமடைந்துள்ள இந்த பெண்களில் சுமார் 60 ஆயிரம் பேர் வரை குழந்தை பேற்றை எதிர்ப்பார்த்துள்ளனர். அந்த குழந்தைகளே மியான்மார் இராணுவத்தின் அட்டூழியங்களுக்கு சாட்சிகளாக  உள்ளன. விசாரணைகள் நடத்தப்படுமிடத்து குறித்த சம்பவங்கள் இடம்பெற்ற பிரதேசத்துக்கு பொறுப்பான இராணுவ தளபதியே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஏனென்றால் அவரை மீறி இராணுவம் அத்தகைய செயலில் ஈடுபட்டிருக்க முடியாது. இதையே நாம் பொறுப்புக்கூறல் என்கிறோம்.

ஊடகங்களுக்கான பரிந்துரைகள்

இந்த செயலமர்வின் போது தமிழ் மற்றும் சிங்கள ஊடகங்கள் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டன. அது குறித்து நானும் செவிமடுத்தேன். இலங்கையின் ஊடகங்களுக்கு இரண்டு விடயங்களில் பொறுப்புகள் உள்ளன. ஒன்று  போருக்குப் பின்னரான மீட்சி (Post Conflict Recovery) அடுத்தது போருக்கு பின்னரான நிலைமாற்றம். (Post Conflict Transition). இவ்விடயங்கள் குறித்து அறிக்கையிடல் அவசியம். இராணுவம் மற்றும் விடுதலை புலிகள் இரு தரப்பினரைப்பற்றியும் பேசுகிறோம் ஆனால் ஊடகங்களும் இரு தரப்பாக பிரிந்து நின்று செய்திகள் வௌியிடல் சமாதான செயற்பாடுகளை தாமதமடையச்செய்யும். பாதிக்கப்பட்டவர்கள் குறித்து செய்திகள் வெளியிடும் போது உண்மை ,நேர்மை ,வெளிப்படைத்தன்மையை ஊடகங்கள் பின்பற்றுதல் அவசியம்.நிலைமாற்று நீதி வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்ட பல நாடுகளில் ஊடகங்களே பின்புலமாக இயங்கின. ஊடகங்களுக்கு பாரிய பொறுப்புள்ளது. அதே போன்று ஊடக நிறுவனங்களும் இதில் முனைப்பு காட்ட வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21