மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் தந்தை ஆகிய இருவருக்கும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.

காத்தான்குடி 06 ஆம் குறிச்சி பதுறியா வீதியில் வசிக்கும் காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் தரம் 5 இல் கல்விகற்கும் 10 வயது சிறுமி அவரது வளரப்புத் தாயினால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸாரினால் நேற்று சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று பிற்பகல் 3.10 மணிக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது, சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாய் இருவருக்கும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறும், சிறுமியின் அண்ணனை மட்டக்களப்பு நீதிமன்ற சிறுவர் பிரிவுக்கு ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.


இதேவேளை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமி தொடர்பாக ஆராயும் விஷேட கலந்துரையாடல் இன்று பகல் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி கலந்துரையாடலில் குறித்த சிறுமியின் பாதுகாப்பு தொடர்பில் ஆராயப்பட்டு சிறுமியை காத்தான்குடி ஆதாரவைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)