சாதி மாறி திருமணம் செய்தவர்களை திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வீதியில் வெட்டிக்கொலை செய்த சம்பவம் மக்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை, கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் ( 22 வயது) பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் பழனியைச் சேர்ந்த கவுசல்யா (19 வயது)என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த வருடம் காதல் ஏற்பட்டது. 

இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தால் , கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் உடுமலை சந்தையில் பொருட்கள் வாங்க வந்த சங்கரை, மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

கத்தியால் குத்தப்பட்ட சங்கர் நடுரோட்டில் விழுந்து துடித்த போதும் விடாமல் அந்த கும்பல் வெட்டியது. இதேபோல கவுசல்யாவையும் துரத்தி துரத்தி வெட்டியதில் கணவன் மனைவி இருவரும் படுகாயமடைந்து மயங்கினர். 

இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது. 

படுகாயமடைந்த சங்கர், கவுசல்யா ஆகியோர் உடுமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டு  வரும் வழியில் சங்கர்  உயிரழந்தார். கவுசல்யா படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

ஜாதி மாறி திருமணம் செய்ததன் காரணமாக பெண்ணின் உறவினர்கள் இந்த கொலையை செய்திருப்பதாக பொலிஸார்  தெரிவித்தனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.