தாயகத்தில் தமிழர்களின் குடிப்பரம்பலை மாற்றியமைப்பதே மகாவலியின் இலக்கு

Published By: Digital Desk 4

01 Oct, 2018 | 01:15 PM
image

“வடக்கில் முன்னெடுக்கப்படும் மகாவலி திட்டங்கள் குறித்து கொள்கை ரீதியான தீர்மானங்களை அரசு உடன் எடுக்க வேண்டும்”

(நேர்காணல் ஆர்.ராம்)

தாயகத்தில் தமிழர்களின் குடிப்பரம்பலை சூட்சுமமான முறையில் மாற்றியமைக்கும் பின்னணியிலேயே மகாவலி திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அதனை எமது மக்கள் முற்றாக நிராகரிக்கின்றார்கள். ஆகவே அரசாங்கம் மகாவலி திட்டம் குறித்து கொள்கைரீதியான தீர்மானம் எடுக்கவேண்டும் என தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வி.நவநீதன் குறிப்பிட்டார்.  

அவர் வடக்கில் முன்னெடுக்கப்படும் மகாவலி எல் வலய திட்டத்தின் பாதிப்புக்கள் மற்றும் முன்மொழிவு செய்யப்பட்டுள்ள மகாவலி கே மற்றும் ஜே வலயங்களின் ஆபத்துக்கள், மக்கள் போராட்டங்கள் மற்றும் தமது அமைப்பின் அடுத்த கட்டச் செயற்பாடுகள் தொடர்பில் வரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் முழு வடிவம் வருமாறு,

வரலாற்றுப்பின்னணி

1984ஆம் ஆண்டுக்கு முன்னதாக வவுனியாவில் டொலர்பாம், கென்பாம், ரயில்வேபாம் என காணப்பட்ட பண்ணைகளிலிருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு அங்கு சிறைக்கைதிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டதையடுத்து தமிழ்த்தரப்பின் ஆயுதம் தரித்த தரப்பினர் அதற்கு எதிராக போராட்டம் செய்து தடுத்து நிறுத்தினர். 

இதனையடுத்து முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக 1984இல் நாயாறுக்கு அருகில் உள்ள ஆறுகிராமங்களுக்கு அரசாங்கத்தினால் அவசர அறிவித்தலொன்று விடுக்கப்பட்டது. 

அதாவது, அப்பகுதியில் பயங்கரவாதிகள் பரவியிருப்பதால் உடனடியாக அவ்விடத்தினை விட்டு வெளியேற வேண்டும் என்று பணிக்கப்பட்டது. கொக்கிளாயில் 508 குடும்பங்களும், கொக்குத்தொடுவாயில் 861குடும்பங்களும், கருநாட்டுக்கேணியில் 370 குடும்பங்களுமாக முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 2910குடும்பங்கள் இடம்பெயர்ந்தன. இதன்போதும் பிரச்சினைகள் எழுந்திருந்தன.

மகாவலி ‘எல்’ வலயம்

இவ்விடயங்களை அடுத்து 1979ஆம் ஆண்டு மகாவலி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் அத்திட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்காக காணிகளை உரிமம் கோருவதற்கான அதிவிசேட அதிகாரத்துடன் மகாவலி அதிகாரசபையை அமைக்கும் சட்டமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து 1988ஆம் ஆண்டு மாகாவலி ‘எல்’ வலயத்திற்கான முதலாவது வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இந்த அறிவித்தல் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பகுதிகளில் மூன்றிலிரண்டு பங்கு மகாவலி அதிகார சபையின் ஆதிக்கத்துக்கு உட்பட்டதாக வரையறுக்கப்பட்டது. அவ்வாறிருக்கின்றபோது மேற்படி அறிவித்தலின் பிரகாரம் மகாவலி எல் வலயத்திற்கான எல்லைகள் கடலுடன் இணைந்திருக்கவில்லை. இந்திய-இலங்கை ஒப்பந்தம் நடைபெற்ற போது வடக்கு, கிழக்கு இணைவு குறித்து கவனம் செலுத்த வேண்டியிருந்தமையின் காரணத்தினாலேயே கடலுடன் இணைக்கும் செயற்பாட்டினை மேற்கொண்டிருக்கவில்லை.

2007ஆம் ஆண்டு மேற்படி சட்டத்தினை மீள் திருத்தம் செய்ததோடு எல்லைகளும் விரிவுபடுத்தப்பட்டன. விரிவுபடுத்தப்பட்ட புதிய எல்லைகளின் பிரகாரம் கொக்கிளாயிலிருந்து ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினைக் கடந்து ஒரு கிலோமீற்றர் செல்கின்றபோது வரும் சின்னாறு வரையில் 34 கிலோமீற்றர் கடற்பகுதி உள்ளிட்ட கிராமங்கள் மகாவலி எல் வலயத்தினுள் காணப்படுகின்றன. வர்த்தமானி அறிவித்தல் அவ்வாறு காணப்படுகின்றபோது கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட பகுதியில் எவ்விதமான செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

சிங்கள குடியேற்றங்கள் முன்னதாக மக்கள் இடம்பெயர்ந்திருந்த கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட கிராமங்களை அண்மித்திருந்த சுமார் 2ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பிரதேசத்தில் எமது மக்கள் உறுதிகளையும், பேமிற்றுக்களையும் கொண்டிருந்த வயல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருந்தன. நீர்த்தாகைகுளம், முந்திரியக் குளம், ஆமையன்குளம், மறுச்சுக்கட்டிக்குளம் உள்ளடக்கிய ஏழுக்கும் அதிகமான குளங்களும் கையகப்படுத்தப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டன. 

இதன்பின்னர் முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் பகுதிகளை உள்ளிடக்கி இப்பகுதி வெலிஓயா என்ற புதிய பெயரில் ஒன்பது கிராமங்களைக் கொண்ட ஒரு பிரதேச செயலாளர் பிரிவொன்றாக பிரிகடனம் செய்யப்பட்டது.

கடந்த ஆட்சியாளர்களால் அங்கு சிங்கள மக்களுக்கு காணி உறுதிகள், பேமிற்றுக்கள் வழங்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர். மகாவலி எல் வலயத்தின் செயற்பாட்டு ரீதியான விடயத்தில் இவ்வாறு உருவாக்கப்பட்ட வெலிஓயா உள்ளிட்ட பகுதியில் தான் இதுவரை காலமும் அதிகூடிய கவனம் செலுத்தப்பட்டிருந்தது. ஆனால் யுத்தத்தின் பின்னரான சூழலில் அவ்வாறான செயற்பாட்டு ரீதியான கவனம் குறித்த புதிய செயலாளர் பிரிவையும் கடந்து அப்பால் செல்வதற்கான முனைப்பு வலுவாகவே காணப்படுகின்றமையை எம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

சட்டவிரோத நிர்மாணமும்நீதிமன்ற நடவடிக்கையும்

கையகப்படுத்தப்பட்டுள்ள கருநாட்டுக்கேணி பகுதியானது மீன்பிடியில் மிக முக்கியமான பிரதேசமாகின்றது. இப்பகுதி தமிழர்களுக்குச் சொந்தமாக காணப்படுகின்றபோதும் பெரும்பான்மை சிங்கள மக்களே வாடிகளை அமைத்து மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக 2016ஆம் ஆண்டு இப்பகுதியில் பெரும்பான்மை இனத்தினைச்சேர்ந்த ஒருவர் ஆடம்பர வீடொன்றையும் மீன்பிடித்துறையொன்றையும் அமைத்தார்.

கடலிலிருந்து 90மீற்றருக்குள்; அந்த நிர்மாணங்கள் காணப்பட்டதால் அவை சட்டவிரோதமானவை எனக்கூறப்பட்டு கரைத்துறைப்பற்று உதவி அரசாங்க அதிபரால் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் அந்த நிர்மாணங்கள் சட்டவிரோதமானவையே, அவை அகற்றப்பட வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதத்தில் தீர்ப்பளித்திருந்தது. எனினும் குறித்த பெரும்பான்மையின நபர் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்வதற்கு முனைந்தபோதும் அதுவும் நிராகரிக்கப்பட்டது. 

இந்நிலையில் வவுனியா

மேல் நீதிமன்றத்தில் மேற்படிநபர் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த வழக்கில் மகாவலி எல் வலயத்திற்குள் தான் நிர்மாணங்களைச் செய்தபகுதி உள்ளடங்குவதால் உதவி அரசாங்க அதிபர் உள்ளிட்ட எவருக்கும் அதனை அகற்றுவதற்கு அதிகாரம் கிடையாது என்பதோடு, முல்லை மாவட்ட நீதிமன்றம் அளித்த நீதிமன்றத் தீர்ப்பையும் மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் வாதிடுகின்றார்.

மேற்படி வழக்கு கடந்த ஓகஸ்ட் மாதம் ஏழாம் திகதி மீளாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னைய நாள் மேற்படி நபர் உள்ளிட்ட எண்மருக்கு மாகாவலி அதிகாரசபையானது காணி உரிமத்தினை வழங்கும் பேமிற் கையளித்திருந்தது. அரசாங்கத்தின் ஒரு நிர்வாகத்தரப்பு காணி உரிமம் நிர்மாணம் தொடர்பில் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக கூறும் அதேநேரம் மற்றொரு அரச கட்டமைப்பு அது சரியென்பதை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இங்கு நேரெதிரான நிலைமைகள் காணப்பட்டமையால் தான் பிரச்சினைகள் அதிகமாகின.

மாறுபட்ட நிலைப்பாடு

தற்போதைய சூழலில் மேற்படி எண்மருக்கு மகாவலி அதிகாரசபையினால் வழங்கப்பட்ட பேமிற்றுகள் சரியானவை என நீதிமன்றம் முடிவெடுத்தால் யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்ற செயற்றிட்டத்தில் உதவி அரசாங்க அதிபரின் முயற்சியால் மாகாண காணி ஆணையாளரால் 7ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பேமிற்கள் தவறானவையாக கொள்ளப்படும் ஆபத்துள்ளது. அத்துடன் 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் அரசகாணிகளின் அதிகாரம் மாகாணசபைக்கு இல்லை. அவை தொடர்பில் மாகாண சபையுடன் கலந்தாலோசிக்கப்படவேண்டுமே தவிர தீர்மானமெடுக்கும் அதிகாரம் மத்தியிடம் தான் உள்ளது

மேலும் மகாவலி நீர் ஒருபோதும் முல்லைத்தீவுக்கு வரப்போவதில்லை. இதுவரையிலான காலப்பகுதியில் வெலிஓயாவுக்கு அப்பால் உள்ள பதவியா பகுதிக்கே மகாவலி நீர் வந்துள்ளது. ஆகவே அதனைத்தாண்டி மகாவலி நீர் வருவதற்கு வாய்ப்புக்களே இல்லை. அவ்வாறான நிலையில் மகாவலி அதிகாரசபை திட்டம் இந்த மாவட்டத்திற்கு எதற்காக முன்னெடுக்கப்படுகின்றது

என்பதே எமது கேள்விக்குறியாகின்றது. இவ்வாறு மகாவலி நீர் முல்லைத்தீவுக்கு வருகை தராத பட்சத்தில் இங்குள்ள குளங்களையே அபிவிருத்தி செய்ய முடியும். அவ்வாறு குளங்களை அபிவிருத்தி செய்வதற்கு மகாவலி அதிகாரசபை அவசியமில்லை. அதனை மத்திய அல்லது மாகாண நீர்பாசன திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும். அத்தகைய நிலைமைகள் தவிர்க்கப்பட்டு மகாவலி அதிகாரசபை நடவடிக்கைளை மேற்கொள்கின்றபோது எமது காணிகளைஅபகரிப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என்ற அச்சம் எமக்கு எழுகின்றது. இதனைவிடவும் யுத்தத்தின் பின்னரான சூழலில் 3ஆயிரம் மில்லியன் ரூபா நிதி மகாவலி எல் வலயத்திற்குள் செலவிடப்பட்டுள்ளது. இதில் ஒரு சதம் கூட தமிழ் மக்களை மையப்படுத்தி செலவிடப்படவில்லை.

அடுத்துவரப்போகும் ஆபத்து

தற்போது மகாவலி ;எல்; வலயம் சம்பந்தமாக நாம் அதிகம் கவனம் செலுத்தினாலும் இதற்கு அடுத்தபடியாக மகாவலி கே மற்றும் ஜே வலயங்கள் தொடர்பான முன்மொழிவுகளும் வெளியாகியுள்ளன. மகாவலி ;கே வலயமானது முல்லைத்தீவில் ஆரம்பித்து மாங்குளம் ஊடாக மல்லாவி வரை செல்கின்றது. அது நிறைவடைகின்ற இடத்திலிருந்து ஜே வலயம் ஆரம்பித்து மன்னார் ஊடாகச் சென்று கிழக்கு கடலில் இணைக்கப்படுகின்றது. இதனை கூர்ந்து அவதானிக்கின்றபோது வடபகுதியின் மையப்படுதியை வேறாக பிரிக்கின்ற ஒரு திட்டம் என்பதை அவதானிக்க முடியும்.

மேலும் இந்தச் செயற்றிட்டங்கள் அமுலாக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டால் இவற்றின் காணி அதிகாரம் மகாவலி அதிகாரசபைக்குச் சென்றுவிடும். அத்துடன் தேசிய ரீதியிலான சனத்தொகை மையப்படுத்தப்படுவதால் அதனடிப்படையிலேயே குடியேற்றங்கள் மேற்கொள்ள முடியும். அதேநேரம் தற்போது வடமாகாணத்தின் சனத்தொகை தொடர்பிலான முன்னறிவிப்பு திட்டமொன்று ஆராயப்பட்டுள்ளது. அதில் தற்போது ஒருமில்லியனுக்கு சற்று அதிகமாக இருக்கும் வடமாகாணத்தின் சனத்தொகை 2030இல் 18இலட்சமாக மாறும் என கணிப்பிடப்படுகின்றது.

வடமாகாணத்தின் இயற்கையான சனத்தொகை அதிகரிப்பினை கருத்தில் கொள்கின்றபோது பத்து ஆண்டுகளில் எட்டு இலட்சம் அதிகரிப்பது என்பது சாத்தியமற்றதாகின்றது. ஆகவே வெளியிலிருந்து குடியேற்றம்  ற்கொள்ளப்படப்போகின்றது என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

ஆகவே வடமாகாணத்தின் குடிப்பரம்பலை திட்டமிட்ட முறையில் மாற்றி அதன் மூலம் அரசியல், பொருளாதார ரீதியாக தமிழர்களை பலவீனமடையச் செய்யும் திட்டம் மகாவலிதிட்டத்தின் அடுத்த கட்ட வலயங்களை நகர்த்தி செல்வதன் பின்னால் இருக்கின்றது என்ற அச்சம் எமக்கு உள்ளது. அத்துடன் மகாவலி திட்டத்தின் கே, ஜே வலயங்கள் முழுமைப்படுத்தப்படும் பட்சத்தில் அங்கு மேற்கொள்ளப்படும் பெரும்பான்மையின குடியேற்றங்களால் நிலத்தொடர்புடைய வடக்கு கிழக்கு வரலாற்று வாழ்விடங்களில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற உரிமை கோரலைச் செய்யமுடியாத கையறு நிலை ஏற்பட்டு விடும். மேலும் வடக்கு கிழக்கு இணைப்பும் கேள்வி குறியாகிவிடும்.

மக்கள் போராட்டமும் அடுத்தகட்ட நகர்வும்

இதனடிப்படையில் தான் நாம் மக்கள் எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தோம். எந்தவிதமான பேதங்களும் இன்றி அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் மக்களை ஒன்றுதிரட்டி கடந்த 28ஆம் திகதி போராட்டத்தினை முன்னெடுத்தோம். விடுதலைப்புலிகள் காலத்திற்கு பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான மக்கள் ஒன்றுகூடிய பதிவாக அது அமைந்தது. மக்கள் தாமாகவே முன்வந்தமையானது மகாவலி திட்டத்தின் தீவிரத் தன்மையை உணர்ந்துள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் எமது போராட்;டத்தின் பின்னர் அதுதொடர்பில் அரசாங்கம் எவ்விதமான உத்தரவாதங்களையும் வழங்கவில்லை. மாறாக அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறவில்லை என்று வெளி உலத்திற்கு காட்டுவதற்கு முற்பட்டு நகர்வுகளைச் செய்கின்றது.

அதேநேரம் இந்தப்போராட்டத்துடன் நாம் இவ்விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதில்லை. தொடர்சியாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய  தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டுவருகின்றோம். மேலும் வவுனியா மேல்நீதிமன்ற வழக்கின் தீர்ப்பினை எதிர்பார்த்துள்ளோம். அண்மையில் இவ்விடயம் சம்பந்தமாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஆராயப்பட்டபோதும் அரசாங்கத்தின் இரண்டு கட்டமைப்புக்களான நிருவாகத் தரப்பும், அதிகாரசபையும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கையில் எவ்வாறான முடிவொன்றை எடுப்பதென்று அவர்களுக்கே குழப்பமாக உள்ளது. எனினும் நாம் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழக்கவில்லை.

மேலும் வடக்கில் முன்னெடுக்கப்படும் மகாவலி திட்டம் தொடர்பில் அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவொன்றை எடுப்பதே பொருத்தமானதாக இருக்கும். அபிவிருத்தி திட்டங்களைப் பொறுத்தமட்டில் பங்கேற்பு முறையிலான அனுமுறையே கடைப்பிக்கப்படுகின்றது. அதாவது பயனாளிகளின் நோக்கமே முன்னிலைப்படுத்தப்படுகின்றது. அந்தவகையில் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்படும் இந்த மகாவலி அபிவிருத்தி திட்டத்தினை அந்த மாவட்டத்தினைச்சேர்ந்த மக்களாகிய நாமே வேண்டாம் என்று ஒருங்கிணைந்து கூறிவிட்டோம். இதன்பின்னரும் அத்திட்டத்தினை எம்மீது திணிக்க முடியாது.

இவற்றையெல்லாம் கடந்து அரசாங்கம் இத்திட்டத்தினை எம்மீது திணிக்க முற்படுமாயின் இத்திட்டங்களுக்கு நிதிப்பங்களிப்பினைச் செய்கின்ற ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, சர்வதேச நாணயநிதியம் உள்ளிட்ட தரப்புக்களுக்கும் எமது தீர்க்கமான நிலைப்பாட்டினை எடுத்துக்கூறவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்படுவோம். அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதை தடுப்பவர்களாக நாம் இருக்கப்போவதில்லை. எந்த திட்டங்களும் கபடநோக்கத்துடன் அதிகாரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படுவதை தவிர்த்து நேரிய கட்டமைப்பு ஊடாக கலந்துரையாடல்களின் பிரகாரம் முன்னெடுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள தயாராகவுள்ளோம்.

மகாவலிக்கு அப்பால்

தொல்லியல் திணைக்களத்தின் 2013ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நடளாவிய ரீதியில் 140 இடங்கள் புதிதாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 70இடங்கள் வடமாகாணத்தினைச் சேர்ந்ததாகவும் அதில் 54இடங்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்குரியதாகவும் காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை தாதுகோபங்கள் அல்லது பௌத்த மத சான்றுகள் இருந்ததாகவே கூறப்படுகின்றன. ஆனால் அவ்வாறான எந்தத் தடயங்களும் எமது தாயகத்தில் இல்லை. ஆகவே வரலாற்று ரீதியாக திரிவுபடுத்தும் முயற்சியொன்றாகவே இதனை பார்க்கவேண்டியுள்ளது. எனவே மேற்படி திணைக்களம் இவ்வாறான இடங்களை அடையாளப்படுத்துகின்றபோது உள்ளுர் அமைப்புக்கள்? மற்றும் அந்தந்த பிரதேசங்களில் உள்ள துறைசார்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே வர்த்தமானி பிரகடனங்களைச் செய்ய வேண்டும் என்பது எமது கோரிக்கையாகவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48