அரசியல் கைதிகளை சிறையில் வைத்துக் கொண்டு அரசியல் தீர்வை எட்டவே முடியாது.  - சந்திரகுமார்

Published By: Daya

29 Sep, 2018 | 12:12 PM
image

 அரசியல் கைதிகளை சிறையில் வைத்துக் கொண்டு அரசியல் தீர்வை எட்டவே முடியாது, மண்டேலாவின் விடுதலையே ஆபிரிக்காவில் நல்லிணக்கம் ஏற்பட வழிவகுத்தது  எனவே தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையே அரசியல் தீர்வுக்கான வாசலை திறக்கும் என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் அரசியற் கைதிகளின் வழக்கு விசாரணைகளும் விடுதலையும் காலவலையறையற்று நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் அரசியற் கைதிகளின் அடிப்படை உரிமைகளும் அவர்களுடைய குடும்பத்தினரின் வாழ்வும் மோசமாகச் சிதைக்கப்படுகின்றன. இது அரசியல் உள்நோக்கத்தின் பாற்பட்ட அநீதியான செயற்பாடாகும். 

யுத்தம் முடிவடைந்து ஒன்பது ஆண்டுகள் கடந்த நிலையிலும் யுத்தகால வன்முறை அரசியற்சூழலுக்கான காரணங்கள் இல்லாதொழிந்த பிறகும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அரசாங்கம் நீக்காமல் நீடிப்பது மக்களின் மீதும் சுதந்திரமான அரசியல் உணர்வின் மீதும் விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தலாகும். 

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் அரசியல் கைதிகள் நீதியற்ற முறையில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இது வெளிப்படையான நீதிமறுப்புச் செயற்பாடாகும். 

இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படாதிருப்பது கண்டனத்துக்குரியது, கவலைக்குரியது என்று சர்வதேச சமூகம் பகிரங்கமாகவே தெரிவித்திருக்கும் சூழலில் அதைத் தொடரும் அரசாங்கத்தின் நடவடிக்கை கண்டிக்கப்பட வேண்டியது. 

ஆகவே, பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி, அரசியல் கைதிகளின் மீதான நீதி மறுப்பும் ஒடுக்குமுறையும் தொடர்வதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அரசியற் கைதிகள் அரசியற் பிரச்சினைகளாலேயே  குற்றம் சாட்டப்பட்டுக் கைதிகளாக்கப்பட்டவர்கள். அரசியற் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதைப் பகிரங்கமாகவே அரசாங்கமும் அதனுடைய நீதித்துறையும் இந்த நாட்டிலுள்ள அனைவரும் சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொண்டவை. 

ஆகவே அந்த அரசியற் பிரச்சினைகள் நியாயமான முறையில் தீர்க்கப்படுவது எவ்வளவு அவசியமானதோ அதே அளவுக்கு அந்த நோக்கில் அரசியற் கைதிகளின் விடுதலையும் அரசியல் ரீதியாக அணுகப்பட வேண்டும்.

 ஆனால், இங்கே அவ்வாறு நடைபெறாமல் அரசியல் கைதிகளின் விடயம் வெறும் சட்டப்பிரச்சினையாக நோக்கப்படுகிறது. இதுவே அரசியல் கைதிகளின் விடுதலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடையாகும். எனவே இது  தவறானதாகும்.

இலங்கையில் ஏற்கெனவே பல சந்தர்ப்பங்களில் அரசியல் கைதிகளாக இருந்தவர்கள் அரசியல் தீர்மானங்களின் மூலம் விடுவிக்கப்பட்ட முன்னுதாரணங்கள் பலவுண்டு. 

விடுதலை இயக்கங்களுக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுகளின்போதும் இலங்கை – இந்திய உடன்படிக்கையின்போதும் அரசியல் கைதிகளின் விடுதலை முதன்மைக் கரிசனையில் எடுக்கப்பட்டு அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில் சாத்தியப்படுத்தப்பட்டது. 

அப்படியிருக்கும்போது இப்போது தடுக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை மட்டும் சட்டரீதியாக அணுக முற்படுவது என்பது நிச்சயமாக நீதியற்றதேயாகும். இதற்குக் காரணமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அகற்றாமல் அரசாங்கம் அதை நீடிப்பது அரசியல் உள்நோக்கமுடையதேயன்றி வேறெதுவாக இருக்க முடியும்?

பகை மறப்பு, மீளிணக்கம், அமைதித்தீர்வு நோக்கிய செயற்பாட்டுக் காலம் என பிரகடனப்படுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதில் முக்கியமான பகைமறப்பிற்கும் மீளிணக்கத்துக்கும் அடிப்படையானவை பாதிக்கப்பட்ட மக்களின் உளநிலையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதாகும். அந்த வகையில் அரசியல் கைதிகளின் விடுதலையும் காணாமலாக்கப்பட்டோரின் விவகாரத்துக்கான தீர்வும் முக்கியமானவை. 

ஆனால், அரசாங்கம் இதிலே பொறுப்பாக நடந்து கொள்ளாமல் காலத்தை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு தென்னாபிரிக்க முன்னுதாரணங்களை வலியுறுத்தும் அரசாங்கம், அங்கே நெல்சன் மண்டேலாவின் விடுதலையே அதைச் சாத்தியப்படுத்துவதற்கான தொடக்கப்புள்ளியாக இருந்தது என்பதை மறந்து விட்டது. 

மண்டேலாவின் சிறைக்கதவுகள் திறக்கப்பட்டபோதே தென்னாபிரிக்காவின் தீர்வு சாத்தியமானது என்ற உண்மைக்கு அமைய தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையே இலங்கையின் அமைதித்தீர்வுக்கான வாசலைத் திறக்கும் எனப் புரந்து கொண்டு இவர்களுடைய விடுதலையைச் சாத்தியப்படுத்த வேண்டும். 

இதன் மூலம் பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கான ஆறுதலை வழங்கி, பகை மறப்புக்கும் புரிந்துணர்வுக்குமான ஏதுநிலைகளை உருவாக்க வேண்டும்.

 இனியும் காலத்தை இழுத்தடித்து, முரண்நிலைகளையும் பகை வளர்ப்பையும் செய்து, நாட்டின் எதிர்காலத்தைப் பாழடிக்காமல், உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

 அரசியல் கைதிகளை சிறையில் வைத்துக் கொண்டு அரசியல் தீர்வை ஒரு போதுமே எட்ட முடியாது. அரசியல் கைதிகள் உள்ள நாட்டில் அரசியல் சுதந்திரம் எவருக்கும் கிடையாது. 

ஆகவே, இந்தக் கைதிகளின் விடுதலையை உடனடியாகச் சாத்தியப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்கிறோம். 

இது பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுடைய கூட்டுணர்வுக் கோரிக்கையாகும். இதைப் புறக்கணிப்பது இந்த நாட்டின் ஜனநாயக மரபுக்கும் மாண்புக்கும் எதிரானதாகும். ஆகவே அமைதித்தீர்விற்கான சாவியாக அரசியற் கைதிகளின் விடுதலை அமையட்டும். 

இல்லையெனில் மக்கள் போராட்டத்தின் மூலம் விடுதலைக் கதவுகள் திறக்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04