கெலிவத்தை தொழிற்சாலையை திறக்குமாறுகோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

23 Nov, 2015 | 02:09 PM
image

திம்புள்ள பத்தனை - கெலிவத்தை தோட்ட தேயிலை தொழிற்சாலையை உடனடியாக திறக்ககோரி தோட்ட தொழிலாளர்கள் 250 பேர் இன்று தொழிற்சாலைக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கொட்டகலை பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கெலிவத்தை தேயிலை தொழிற்சாலை இதுவரை காலமும் நல்ல முறையில் இயங்கி வந்தமை குறிப்பிடதக்கது. 
இருந்தும் கடந்த 30 ஆம் முதல் இந்த தொழிற்சாலை முடக்கத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மேற்படி தொழிற்சாலையில் புதிய இயந்திரங்கள் பொருத்தப்பட்டும் தினமும் கொழுந்து பறித்து தொழிற்சாலைக்கு கொண்டு வருவது குறைவாக காணப்படுவதால் தொழிற்சாலை நட்டத்தில் இயங்குவதாக தோட்ட அதிகாரி திஸ்ஸ த அன்றூஸ் தெரிவித்தார்.

அதேவேளை தொழிற்சாலை இயந்திரங்களுக்கான செலவீனம் அதிகரிப்பதால் கெலிவத்தை தோட்டத்தில் பறிக்கப்படும் தேயிலை கொழுந்து கடந்த 3 மாதங்களாக குறித்த கம்பனி நிர்வாகங்களுக்கு கீழ் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

கிராம மற்றும் தனியார் தேயிலை தோட்டங்களிலிருந்து கொள்வனவு செய்யும் தேயிலை கொழுந்துக்கு உரிய விலை கொடுக்கப்படாததால் அவர்கள் எமது தொழிற்சாலைக்கு கொழுந்து தருவதில்லை. ஆகையினால் குறைவான கொழுந்து தொழிற்சாலையில் அறைக்கப்படுவதால் ஏகப்பட்ட நட்டம் ஏற்படுவதால் இத்தொழிற்சாலை குறுகிய காலத்திற்கு மூடப்பட்டு தேயிலை விளைச்சல் அதிகரிக்கப்படும் பட்சத்தில் தொழிற்சாலை 2 மாதங்களில் திறக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்ததாவது,

தொழிற்சாலை மற்றும் தோட்டத்தில் 250 பேர் தொழிலாளர்களாக பணியாற்றுகின்றோம். கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. காரணத்தை தோட்ட நிர்வாகத்திடம் தொழிற்சங்கங்கள் தலைவர்கள் ஊடாக வினவியபோது, சுமார் 2 கோடி ரூபாய் தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அவர்களிடம் பெற்ற தேயிலை கொழுந்துக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளது. 

அதனால் கடனில் தோட்ட நிர்வாகம் இயங்குகின்றது. அத்தோடு தோட்ட கம்பனி முழுமையான நட்டத்தை எதிர்கொள்வதால் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது என காரணம் தெரிவித்ததாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்து இவ்வார்ப்பாட்டம் செய்யப்படுவதுடன் கடந்த 4 வருடங்களாக தோட்டத்தில் மேற்கொள்ளப்படாத அபிவிருத்தி வேலைகளை தோட்ட நிர்வாகம் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என வழியுறுத்தியும் காட்டு மிருகங்கள் மற்றும் குளவி தொல்லைகள் போன்றவற்றிலிருந்து தொழிலாளர்களை தோட்ட நிர்வாகம் பாதுகாக்க வேண்டும் எனவும் வேண்டுக்கோள் விடுத்து வாசகங்கள் எழுதிய பாதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் மேற்படி ஆர்ப்பாட்டம் தொடர்பான தொழிற்சங்க பேச்சுவார்த்தை 12 மணியளவில் தோட்ட நிர்வாக காரியாலயத்தில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த பேச்சுவார்த்தையில் பத்தனை பிரிவு தொழிற்சங்க காரியாலய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த தொழிற்சங்க அதிகாரிகள், நிர்வாகத்தினூடான பேச்சுவார்த்தை தோல்வி கண்டால் மேல்மட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்