(எம்.சி.நஜிமுதீன்)

நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கனுப்பி, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் வரையில் ரூபாவின் பெறுமானம் தொடர்ந்து வீழ்ச்சியடைவதை ஒருபோதும் தவிர்க்க முடியாது. எனவே நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

ரூபாவின் பெறுமானம் தொடந்து வீழ்ச்சி கண்டு வருகின்றமை தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தாரக பாலசூரியவிடம் இன்று வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் ரூபாவின் பெறுமானம் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. அதனை பேணுவதற்கு அரசாங்கத்தால் முடியாதுள்ளது. அதனாலேயே அடிக்கடி பொருட்களின் விலை அதிகரிக்கப்படுகிறது. 

மக்கள் மூன்று வேளை உண்டு வாழ முடியாத நிர்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும் அரசாங்கம் அது தொடர்பில் கவனம் செலுத்துவதாக இல்லை. அத்துடன் தேசிய வளங்களை விற்பனை செய்தாவது ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கே அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.